காதல் பழக வா-21

காதல் பழக வா-21

புரியாமல் விலகிநிற்கும்
உன் மேல் நான்
புரிந்தே தான்
காதல் கொண்டேன் என்
கரம் பிடித்துக்கொள் கண்ணே!!

உணராமல் நீ என்னை
தண்டிக்க நினைத்தாலும்
அதையும் தாண்டி
என் காதல் கொண்டு
உன்னை நான் சிறைபிடிப்பேன்
என் காதல் பெண்ணே...


கண்ணன் ராதியின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப ராதி மெதுவாக கண்களை திறந்தாள்....

"நீ என்ன பொசுக்கு பொசுக்குன்னு மயக்கம் போட்டு விழற ,வாழ்க்கை முழுதும் உன்னை மயக்கத்திலிருந்து எழுப்பிவிடறதே என் வேலையா இருக்கும் போலயே"

"நான் எங்கே இருக்கேன்?"

"அதானே பார்த்தேன், இன்னும் கேட்கலையேன்னு நினச்சேன், கேட்டுட்டே...நாம இப்போ குலதெய்வக்கோவிலுக்கு போகிற வழியில் தான் நிக்கறோம், சரி இந்த இடம் அழகா இருக்கே, நின்னு வேடிக்கை பார்த்துட்டு போகலாம்னு காரை நிறுத்தினேன், நீ மயங்கி விழுந்துட்ட”

"எனக்கு மனசெல்லாம் ஒரு மாதிரி படபடப்பா இருக்கு, இந்த இடத்துக்கு நான் ஏற்கனவே வந்திருக்கற மாதிரி தோணுது, எனக்கு மனசென்னமோ பண்ணுது, பயமா இருக்குங்க"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை, காலைல இருந்து இன்னும் சாப்பிடாம இருக்கல்ல, பசி மயக்கமா இருக்கும்....சரிம்மா இந்தா இந்த மோரை குடி"

"இல்ல அது வந்து"

"அதான் வந்தாச்சே, நீ மோரை குடிச்சிட்டு தெம்பா எத வேணாலும் பேசு, இப்போ இதை குடி"
"இல்லை, பூஜை முடியற வரை எதுவும் சாப்பிட கூடாதுனு சொன்னீங்களே"

"நாம வாழத்தான் சாமி, சாமி பேரை சொல்லி உடம்பை வருத்திகிட்டு மேலும் பிரச்னையை இழுத்து விட்டுக்கறது எனக்கு பிடிக்காது, எந்த சாமியும் நீ பட்னி கிடந்தா தான் நான் உனக்கு நல்லது செய்வேன்னு சொல்றது இல்லையே, இதெல்லாம் நம்ப நம்பிக்கை, மனித வாழ்க்கையை ஒரு ஒழுங்குமுறைக்கு கொண்டுவரதுக்காக ஏற்படுத்தின நம்பிக்கை, உன்னை விரதம் இருக்க சொன்னது கூட நம்ப வீட்ல இருக்கவங்களோட நம்பிக்கைக்காகவும் திருப்திக்காகவும் தான், இப்போ உன்னால முடியலன்னுஇருக்கும்போது இன்னுமின்னும் அதை கடைபிடிக்கிறது சரிவராது, முதல்ல இதை குடி ராதி"

கண்ணன் ராதியின் கையில் மோர் பாக்கெட்டை திணிக்க ராதியும் மயக்க கலக்கத்தில் அதை வாங்கி இரண்டு நிமிடத்தில் காலி செய்து விட்டு கண்ணனை பார்த்தாள்....

"இவ்ளோ பசியை வச்சிக்கிட்டு ட்ராவல் பண்ணா மயக்கம் வராம என்ன பண்ணும், இதுல வேற ஏதேதோ பிணாத்தர...சரி நாம முதல்ல இங்க இருந்து கிளம்பலாம்" என்று கண்ணன் காரை ஸ்டார்ட் செய்ய ராதி கண்ணனின் கையை பிடித்துக்கொண்டு வேண்டாம் என்று தலை அசைத்தாள்...

" ராதி என்ன ஆச்சு, உடம்புக்கு ரொம்ப முடியலையா, ஹாஸ்பிடல் வேணும்னா போகலாமா, இல்லைனா அப்டியே படுத்து தூங்கு, கோவிலுக்கு பக்கத்துல வந்தாச்சு, அங்க போய் எதாவது சாப்பிட்டா சரி ஆகிடும்"
"இல்லை இப்போ நான் நல்லா தான் இருக்கேன், கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போகலாமே, ப்ளீஸ்"
ராதி கெஞ்சலாக கேட்கவும் அதை கண்ணனால் மறுக்க முடியவில்லை, காரை விட்டு இறங்கி வந்து ராதிக்கு கார் கதவை திறந்துவிட்டான்...

"இறங்கு ராதி, இந்த இடம் ரொம்ப அழகா இருக்கும், சின்ன வயசுல இருந்தே கோவிலுக்கு வந்தா இங்கே வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டு தான் இங்க இருந்து கிளம்புவேன், இதுவே எனக்கு பழக்கமா போச்சா, அதான் இப்போவும் இந்த வழியிலேயே வந்துட்டேன், இது குறுக்கு பாதை, புதுசா யாராவது வந்தா வழி தெரியாம மாட்டிப்பாங்க,அதனால இந்த பக்கம் அதிகமா யாரும் வர மாட்டாங்க, ஆனா எனக்கு இந்த வழி அத்துப்படி...

கண்ணன் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க ராதியின் மூளைக்குள் பழைய நினைவுகள் தெளிவில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது...அதை யோசித்து யோசித்து ராதிக்கு தலைவலியே வந்துவிட்டது....

"என்ன ராதி, நான் இவ்ளோ பேசறேன், நீ சைலெண்டா இருக்கியே, உனக்கு இந்த இடம் பிடிக்கலையா"

கண்ணனின் கேள்வியை கேட்டதும் ராதி பதறி அடித்துக்கொண்டு பதில் கூறினாள்....

"எனக்கும் சின்ன வயசுல இருந்தே இந்த இடம்னா கொள்ளை பிரியம், இந்த இடம் போய் எனக்கு பிடிக்காம இருக்குமா?"
" ராதி இப்போ என்ன சொன்ன?"
"நான் என்ன சொன்னேன்?”
“ இல்லை இப்போ என்னவோ பிடிக்கும்னு சொன்னியே அதை பத்தி கேட்டேன்"
"இந்த இடம் அழகா இருக்கு, ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னேன்"
" இல்லையே, இந்த இடம்னா சின்ன வயசுல இருந்தே உனக்கு பிடிக்கும்னு தானே சொன்ன, அப்போ ஏற்கனவே இங்க வந்திருக்கியா ராதி"
"சொன்னேன் ஆனா, ஏன் அப்படி சொன்னேன்னு தெரியல, இங்க ஏற்கனவே வந்த மாதிரி தான் தோணுது , ஆனா எப்போ? எதுக்கு? யாரோட வந்தேன்னு எனக்கு தெரியல,முதல்ல இங்க இருந்து கிளம்பலாம், யோசிச்சி யோசிச்சி எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு..."

"ஏய் ராதி, ரிலாக்ஸ்...மனச போட்டு குழப்பிக்காத, நான் சும்மா தான் கேட்டேன், இந்த இடத்தை நீ போட்டோல பார்த்திருக்கலாம், இல்லை வேற யாராவது சொல்லி கேட்ருக்கலாம், அது உனக்கு நேரில் பார்த்தது போலவும், இங்க வந்ததை போலவும் தோணிருக்கும்....இதையெல்லாம் மனசுல ஏத்திக்கிட்டு யோசிச்சா உனக்கு தான் கஷ்டம், இங்கயோட உன் குழப்பத்தை விட்டுட்டு ரிலாக்ஸா கார்ல போய் உட்காரு கிளம்பலாம்..."

கண்ணன் கூறியதும் ராதி ஒன்றும் பேசாமல் மௌனமாக காரில் ஏறினாள், அதற்கு பின் ராதி எதுவும் பேசாமல் யோசித்துக்கொண்டே வர கண்ணன் ராதியின் குழப்பத்தையும் யோசனையும் கலைக்க விரும்பினான்....
"ராதி கோவில்ல பூஜையப்போ நீ என்ன வேண்டிப்ப?"

ராதி கண்ணனின் கேள்வியை கண்டுகொண்டதாய் கூட காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே இருக்க கண்ணனே மேற்கொண்டு பேச ஆரம்பித்தான்...

"நான் என்ன தெரியுமா வேண்டிப்பேன், என் ராதி என்னை புரிஞ்சிகிட்டு என் காதல் மனைவியா மாறனும், எங்களுக்கு அழகான பெண் குழந்தை ஒண்ணு, ஆண் குழந்தை ஒண்ணு குடு கடவுளேனு வேண்டிப்பேன்"

இந்த வார்த்தையில் ராதி யோசனை க லை ந்து கண்ணனை பார்த்தாள்...

"அதென்ன அழகான குழந்தை, அழகில்லாத குழந்தைனா ஏத்துக்க மாட்டிங்களா?"

"நமக்கு அழகான குழந்தை தான் பிறக்கும், காரணம் தெரியுமா?"

ராதி கண்ணனின் பதிலுக்காய் அவன் முகத்தை பார்க்க, கண்ணனோ கேலியாக "அடிக்கடி இப்படி நீ என்னை சைட் அடிக்கறயே, நான் அழகா இருக்கேனு தானே, நீயும் என் அளவுக்கு இல்லனாலும் சுமாரா இருக்க, அப்படி இருக்கும்போது நமக்கு அழகான குழந்தை தானே பிறக்கும்"

"என்ன நான் சுமாரா இருக்கேனா, நீங்க அழகா இருக்கீங்களா, இது உங்களுக்கே ஓவரா தெரியல, என்னை நல்லா பார்த்துட்டு அப்டியே உங்களையும் கொஞ்சம் பாருங்க, அப்போ தெரியும் யார் அழகு யார் சுமார்னு"
"ஆஹா, இப்படி ஒரு சான்ஸ் எனக்கு வீட்லயே கிடைக்காம போச்சே, இப்படி கார்ல வந்து சொல்லி உன் மாமனை ஏமாத்திட்டியே ராதி"

கண்ணன் சிலாகிப்பதை பார்த்து ஒன்றும் புரியாமல் ராதி விழிக்க கண்ணனோ காரை நிறுத்திவிட்டு ராதியை நெருங்கி அவளின் முகத்தருகே தன் முகத்தை கொண்டு சென்றான்....

ராதியின் கண் இமைகளை தன் இதழ்களால் தீண்டினான், ராதியின் கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டு அவள் இதழ் அருகே தன் இதழ்களை கொண்டு வர ராதி கண்ணனை தள்ளி விட்டாள்....

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க, இதுக்கு தான் உங்களோடு தனியா வரமாட்டேன்னு சொன்னேன், தனியா சந்தர்ப்பம் கிடைச்சா உங்க இஷ்டத்துக்கு என்ன வேணா செய்விங்களோ" என்று ராதி கோவத்தில் திட்ட கண்ணனோ மென்மையாக புன்னகைத்துவிட்டு ராதியிடம் மீண்டும் நெருங்கி வந்தான்...

"இப்போ தானே நீ சொன்ன, என்ன நல்லா பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க யார் அழகுன்னு, அதான் உன்னை பார்க்கறேன், அதுக்குள்ள இப்படி கோவப்பட்டா நியாயமா மை ஸ்வீட் ஹார்ட்"

"அது... அது நான் பேச்சு வாக்குல சொன்னது....அதுக்காக இப்படி தான் பண்றதா, முதல்ல தள்ளி உட்காருங்க, நீங்களே அழகுன்னு வச்சிக்கோங்க, இப்போ காரை எடுங்க...கோவிலுக்கு நேரமாகுது" என்று ராதி தடுமாற்றத்துடன் கூற கண்ணன் புன்னைகைத்துக்கொண்டே காரை ஓட்டினான்...

எப்படியோ பேச்சை மாற்றி இவளை குழப்பத்திலிருந்து வெளி வர செய்தாயிற்று, இப்போதைக்கு இதுவே போதும், சீக்கிரத்தில் எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று கண்ணன் நினைத்தது சரி அல்ல என்பது கண்ணனுக்கு புரிய நீண்ட நேரம் ஆக போவதில்லை....

எழுதியவர் : ராணிகோவிந் (31-May-17, 3:12 pm)
பார்வை : 550

மேலே