அணு ரசனை - அத்தியாயம் ஒன்று

பொதுவாக பகல் நேரங்களில் நிழல் மேற்கே நோக்கியும், மதியம் மாலை நேரங்களில் நிழல் கிழக்கே நோக்கியும் படர்வதுண்டு. இந்த எளிய இயற்பியல் விதி, ஒளி இருக்க கூடிய அனைத்து இடத்திற்கும் பொருந்தும். ஆனால் இந்த இயற்பியல் விதிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் காட்சியளித்தது படர்ந்து விரிந்த வங்கக்கடலின் நடுப்பகுதி. அது ஒரு நண்பகல் 12 :30 மணி. மேற்கு பக்கம் நகர்வதா இல்லை கிழக்கு பக்கம் நகர்வதா என்ற ஆழ்ந்த யோசனைக்கு பிறகு சூரியன் மெதுவாக நடுவானிலிருந்து மேற்கே நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த நண்பகல் சூரிய ஒளியில், ஒளி அடர்த்தி சராசரிக்கும் சற்று அதிக அளவில் இருந்ததால், அந்த கடல் நீல வண்ணத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. கண்களுக்கு எட்டிய தூரம் வரை நீலம் நீலம் நீலம் பரவி, ஆங்காங்கே சூரியனின் பிம்பம் கண்களை கூசி, ஒரு அளவில்லா, முடிவில்லா நீல வைரம் போல் காட்சியளித்தது. அத்தகைய நீல வைர படுக்கையில், உலகின் மிகச்சிறந்த வைரத்தை பாதித்தது போல், ஒரு வெள்ளை நிற சொகுசு கப்பல், அந்த அமைதியான கடலின் நிலைப்பாட்டை கெடுக்கும் பொருட்டு, கடலின் மேற்புறத்தை கிழித்துக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. அந்த நண்பகல் மேகம் மறையா சூரியன், தனது அனைத்து கதிர்களையும் அந்த கடல் மேல் பாய்ச்சிக்கொண்டிருந்தது. அந்த வெள்ளை நிற கப்பல் சூரிய ஒளியில் நட்சத்திரம் போல் மின்னிக்கொண்டிருந்தது.

அந்த சொகுசு கப்பலின் ஒரு பகுதியில் அழகிய நீச்சல் குளம் இருந்தது. நீல கடலுக்கே சவால் விடும் வகையில், தொட்டியின் நீல நிறமும், கண்ணாடி போல் இருந்த சுத்தமான நீரும் அந்த அழகிய காட்சியை மேலும் அலங்கரித்துக்கொண்டிருந்தது. நீச்சல் குளத்தை சுற்றி நிறைய சாய்வு நாற்காலிகளில் ஆண்களும் பெண்களும் அமர்ந்து அன்பை பரிமாறிக்கொண்டிருந்தனர். அந்த கப்பல் முழுவதும் தெரிந்த ஒரு ஒற்றுமை, அங்கு இருக்கும் அனைவரும் ஜோடியாக இருந்தார்கள். இளம் தம்பதிகள் போல் காட்சியளித்தார்கள். அந்த நீச்சல் குளத்தின் ஒரு ஓரத்தில் ஒரு தம்பதி குளத்தில் குதிக்க ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள். அந்த ஆணும் பெண்ணும் அருகருகே நின்று கொண்டு யார் முதலில் குதிப்பது என்பது போல் யோசித்து கொண்டிருந்தார்கள். அந்த பெண் சட்டென்று அந்த ஆணின் முகத்தை ஒரு வினாடி பார்த்துக்கொண்டு, பின் மீண்டும் குளத்தை வெறித்துக்கொண்டு அந்த ஆணிடம்,

"என்னை நீ முதல் தடவ பாக்கும் போது எப்படி இருந்தது? என்ன ஓடிச்சு மனசுக்குள்ள?"

அந்த ஆண் அவளை ஒரு வினாடி பார்த்து விட்டு நீச்சல் குளத்தில் குதித்தான். பின்பு கண்களில் வழியும் நீரை துடைத்துக்கொண்டு அவளை வா என்று அழைப்பது போல் பார்த்தான். அவளும் சற்று நேரம் அவனை பார்த்து சிரித்துக்கொண்டு குளத்தில் குதித்தாள்.

"என்னை முதல் தடவ பாத்ததும் மயங்கி விழுந்துட்டேனு சொல்ல வரியா???" என்று உற்சாகமாக அவனிடம் கேக்க. அதற்கு அவன்,

"இல்லை. நான் விழுந்ததும் இந்த நீச்சல் குளம் கலங்கிய மாதிரி என் மனசும் உன்ன பாத்ததும் கலங்கிடுச்சு....." என்று கூறிவிட்டு, அவன் நீரில் மூழ்கி அடுத்த ஓரத்தை நோக்கி நீச்சல் புரிய துவங்கினான்.

அந்த கப்பலின் நடுப்பகுதியில் பாதி கப்பலை நிரப்பிக்கொண்டு மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அங்கு உட்கார்ந்திருக்கும் தம்பதிகளுக்கு வெள்ளை சட்டை, கருப்பு பாண்ட் அணிந்து இருந்தவர்கள் பழச்சாறு, மது, சோடா ஆகியவற்றை பரிமாறிக்கொண்டிருந்தனர். ஆங்காங்கே ஒலிபெருக்கியில் இனிய கீதங்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. பழச்சாறு தயாரிக்கும் இடத்திற்கு அருகே கப்பலின் அடிப்பகுதிக்கு செல்வதற்கான வழி தென்பட்டது. அனைத்து தம்பதிகள் தங்குவதற்கான அறைகள் கப்பலின் அடிப்பகுதியில் தான் இருந்தது. அந்த கப்பலின் அடுத்த ஓரத்தில் சில மெக்கானிக் சமாச்சாரங்கள் கடந்து சிறிய காலி இடம் இருந்தது. அது தான் அந்த கப்பலின் பின் பகுதி ஆகும். அந்த இடத்தில் ஒரு இளைஞன் ப்ரொபெல்லர் கடல் நீரை கலக்கிக்கொண்டிருப்பதை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வயது 25 அல்லது 26 இருக்கலாம். ஆறடி உயரமும், கூர்மையான கண்களும் அவனை அந்தக்கூட்டத்திலிருந்து தனித்துக் காண்பித்தது. அந்த ப்ரொபெல்லரின் ஓசையை தாண்டியும் அந்த கடலின் அமைதியை ரசிக்கலானான். அந்த இளைஞனை பார்த்த படியே ஒரு இளம் பெண் நடுப்பகுதியிலிருந்து சோடாவை வாங்கிக்கொண்டு அவனை நோக்கி விரைந்துக்கொண்டிருந்தாள். வேகமாக சென்று அவன் அருகில் நின்றுக்கொண்டாள். அவளுக்கு சுமார் 24 அல்லது 25 வயது இருக்கலாம். மாநிறம் தான் கலையான பெண்களுக்கு அவள் மட்டும் உதாரணம் போதும். அவள் வந்து நிற்பதை அந்த இளைஞன் கவனிக்கவில்லை. ஸ்ட்ராவ் கொண்டு சோடாவை இரண்டு முறை உரிந்துக்கொண்டு அவனை பார்த்து,

"ஏன் பாலா, அந்தமான்க்கு சீப் -ஆ ஏகப்பட்ட பிலைட்ஸ்(flights) இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு இப்படி கப்பல்ல மூணு நாள் போகணுமா என்ன! கப்பல் ரொம்ப போர். மூணு நாள் என்ன பண்றது இங்க??" என்று சலித்துக்கொண்டாள்.

பாலா அவள் தோள்மேல் கை போட்டு அரவணைத்துக்கொண்டு,

"அங்க பாரு அனு ... கண்ணனுக்கு எட்டின தூரம் வர வெறும் தண்ணி மட்டும் தான். டிராபிக், பொல்லுஷனு எதுவும் இல்லை. மனசு பூரா அமைதி பரவி.... இதுக்கு மேல என்னடி வேணும் ஒரு ஹனிமூன் ட்ரிப் ல.." என்று சமாதானம் கூறினான்.

அனுஅவன் அரவணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு,

"அமைதியா??? எனக்கு ப்ரொபெல்லர் சத்தமும், சுத்தி இருக்கிற பாட்டு சத்தமும் மட்டும் தான் கேக்குது. எங்கேயிருந்து அமைதி உனக்கு மட்டும் தெரியுதோ????" மீண்டும் சலித்துக்கொண்டாள்.

"அடி என் சலிப்பு பொண்டாட்டியே...... நீ தேடுற அமைதி உன் கண்ணுக்கும் காதுக்கும் மட்டும் தான். நான் தேடுறது மனசுக்கு." என்று பாலா அனுவை மீண்டும் தோள்மேல் கை வைத்து அணைத்துக்கொண்டான்.

இந்த முறை அரவணைப்பிலிருந்து விலகாமல் அவன் கண்களை பார்த்த படியே,

"நீ மரின்( marine ) படிச்சுட்டு கப்பல்ல வேல பாக்குறதுனால, ஹனிமூன்க்கு கூடவா கப்பல் பயணத்தை ரசிக்கணும்??" என்று கோபித்துக்கொண்டாள்.

அவர்களின் செல்ல சண்டைக்கு நடுவே அனைத்து ஒலிபெருகியிலும் இசை அணைக்கப்பட்டு பேச்சு குரல் கேட்டது. அனைத்து தம்பதிகளும் தங்கள் வேலையை சிறிது நேரம் நிறுத்திக்கொண்டு தங்களது காதுகளை தீட்டி பேச்சை கேட்க துவங்கினர்.

"லேடீஸ் அண்ட் ஜென்டலெமென்.. வெல்கம் டு பாரடீஸ் பிலோட் (paradise float ) , இந்தியாவின் முதல் ஹனிமூன் ஸ்பெஷல் கப்பல்."

இதை கேட்டதும் அனைவரும் கை தட்ட தொடங்கினர். ஒலிபெருக்கி மீண்டும் தொடர்ந்தது.

"முதல் நாள் இன்று மாலை ஆறு மணிக்கு கப்பல் பி பிளாக் ல இருக்குற பார்ட்டி ஹால் ல உங்க அனைவரையும் உற்சாக மூட்ட , இசை நிகழ்ச்சி யோடு பிரமாண்டமான பார்ட்டி நடைபெற இருக்கு. அனைவரும் ஜோடியாக பார்ட்டி ஆடைகளை அணிந்து வருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். தங்களை ஆச்சர்யமூட்டும் பல விந்தைகள் அங்கு நடைபெற உள்ளது. டோன்ட் மிஸ் இட் ......."

பேச்சு நின்று ஒலிபெருக்கி மீண்டும் இசையை இசைக்க தொடங்கியது. பேச்சு முடிந்ததும் அனைத்து தம்பதிகளும் கை தட்டிக்கொண்டும், உற்சாக ஒளி எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள்.

பாலா அனுவை பார்த்து,

"இப்போ போதுமா? உனக்கு பிடிச்ச மாதிரி பார்ட்டி இருக்கு... இப்போ இருக்கிற எல்லாருக்கும் சத்தத்துக்கு நடுல தான் மன அமைதி கிடைக்குதுல???" என்று கூறி கண் சிமிட்டினான்.

அன்று மாலை ஆறு மணி.......

அந்த பார்ட்டி ஹால் களைகட்டியது. நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் அங்கு குவிந்து இருந்தார்கள். அனைவரும் பார்ட்டி உடைகளை அணிந்துக்கொண்டு இளவரசன் இளவரசி போல் காட்சியளித்தார்கள். அனைவரும் ஜோடி ஜோடியாக நின்று கொண்டு பழச்சாறு, மது அருந்திக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். பார்ட்டி ஹால் இன் ஓரத்தில் இசை கலைஞர்கள் வயலின், பியானோ, கிட்டார் ஆகியவற்றை மென்மையாக இசைத்துக்கொண்டு இருந்தார்கள். அந்த அறையின் நடுவே ஒரு சிறிய மேடை அமைந்திருந்தது. ஒருவர் நின்று பேசுவதற்கேற்ப அந்த மேடை அமைந்து இருந்தது. கோட் சுய்ட் போட்டுக்கொண்டு கையில் மைக் உடன் அந்த கப்பல் மேலாளர் அந்த மேடையை அணுகினார். அவர் மைக் ஐ இரு முறை தட்ட எல்லாரும் அவரின் பேச்சை நோக்கி ஆவலுடன் பார்த்தனர்.

"டியர் லேடீஸ் அண்ட் ஜென்டலெமென். இந்த PARADISE FLOAT க்கு உங்கள வரவேர்க்குறதுல நாங்க மிகவும் பெருமை அடைகிறோம். இது இந்திய சுற்றுலா வாரியத்தின் மிகப்பெரிய சாதனை னு சொல்லலாம். உங்களின் இந்த மூணு நாள் பயணம் உங்க வாழ்க்கையில மறக்க முடியாத பயணமா இருக்கும்னு நாங்க நம்புறோம். மீண்டும் ஒரு முறை உங்களை வரவேட்கிறோம். அண்ட் ஹவ் எ வொந்டெர்புல் ஹனிமூன் ட்ரிப்"

என்றதும் அனைவரும் கூச்சல் இட்டு, கைகள் தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர். அந்த மேலாளர் மீண்டும் பேசத்துடங்கினார்.

"இங்க உலகத்தின் மிகச்சிறந்த இசை கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இசை அமைக்க நீங்கள் அதற்கு ஜோடியாக நடமாடும் படி கேட்டுக்கொள்கிறோம். சிறப்பாக நடனமாடும் ஜோடிக்கு இந்த PARADISE FLOAT சார்பாக பரிசு அளிக்கப்படும்."

மீண்டும் கூச்சல், கை தட்டல்கள் தொடர்ந்தது. சட்டென்று அந்த இடம் இருளில் மூழ்க, பின் வண்ண வண்ண ஒளி அந்த அறையை நிரப்பியது. அங்கு இருந்த பல ஜோடிகள் நடனத்தில் கெட்டிக்காரர்கள் போல் இசை இசைத்ததும் இனிமையாக மென்மையாக ஒருத்தர் ஒருத்தர் தழுவிக்கொண்டு ஆட துவங்கினர். அனு பதட்டத்துடன் பாலா முகத்திற்கு அருகில் வந்து, சத்தம் யாருக்கும் கேட்காமல், மென்மையான குரலில்,

"ஏய் பாலா.... எனக்கு ஆட தெரியாது.........."

"ஒன்னும் பிரச்னை இல்லை. இதோ.... நன் பண்றமாதிரியே பண்ணு. அவ்ளோ தான் டான்ஸ்."

என்று கூறி தனது வலக்கையால் அவள் இடது கையை பின்னிக்கொண்டான். பின் தனது இடது கையால் அவள் இடுப்பை அணைத்துக்கொண்டு அருகில் நெருக்கி கொண்டான்.

"ஏய்.... பாலா... என்ன பண்ற??????", மீண்டும் பதட்டத்துடன் அனுவின் குரல்.

பாலா எதுவும் பேசாமல் வலது புறமும் இடது புறமும் சாய்ந்து சாய்ந்து ஆடினான்.

"அனு.... என் கூட சேர்ந்து நீயும் இப்படியே ஆடு"

அவளும் அவனை பின் பற்ற உலகின் மிகச்சிறிய நடன பயிற்சி முடிந்து அரங்கேற்றம் துடங்கியது. அனு மீண்டும் பாலா முகத்திற்கு அருகே வந்து மென்மையான குரலில்,

"இந்த மாதிரி நிறைய ஆடுன அனுபவம் இருக்கு போல??????" என்று சந்தேகத்துடன் கேக்க, அதற்கு பாலா சிரித்துக்கொண்டே,

"பின்ன???????" என்றான்.

சட்டென்று அனுவின் முகம் மாறி, அவனை பார்த்து முறைத்துக்கொண்டே,

"பல்ல உடைப்பேன்..." என்றாள்.

பாலா அதை சிறிதும் பொருட்படுத்தாமல் நடனத்தில் கவனமாய் இருந்தான். அனு முறைத்துக்கொண்டே மறுபக்கம் திரும்பி கொண்டாள். பின் அதே முறைப்புடன் அவன் முகம் அருகில் வந்து மென்மையும், கோவமும் கலந்த குரலில்,

"இதுக்கு முன்னாடி எத்தனை பேரு கூட ஆடி இருப்ப???", என்று கேட்க, பாலா சிறிது நேரம் சிந்தித்து விட்டு,

"ஹம்ம்ம்ம்ம்ம்....... ஒரு முப்பத்திரண்டு !!!!!!!!!!", என்று கூறி நகைத்தான்...

"இதுக்கு மேல உடைக்க பல்லு இருக்காதுன்னு கணக்கை கம்மியா சொல்றியா???" என்று புன்னகை கலந்து அவனை முறைக்க, காதல் அவர்கள் மனதை ஆட்கொண்டது.

இசை மற்றும் நடன நிகழ்ச்சி முடிவடைந்து அனைவர்க்கும் விருந்து அளிக்கப்பட்டது. பூபட் (buffet ) என்று அழைக்கப்படும் விருந்தில் அனைத்து வகை உணவுகளும் பரிமாறப்பட்டது. பாலா மிக விரைவில் உணவை முடித்து விட்டு அனுவிடம் நெருங்கி,

"நான் மேல கொஞ்ச நேரம் காத்து வாங்கிட்டு இருக்கேன். நீ சாப்பிட்டு வா."

"அந்த ப்ரொபெல்லர் சவுண்ட் ல உனக்கு என்ன தான் மன நிம்மதி கிடைக்குதோ???" என்று பாலாவை செல்லமாக அதட்டினாள்.

அந்த கடல் காற்றும், ப்ரொபெல்லர் ஒலியும் அவன் மனதை சீராக்கி, பல நினைவுகளை தூண்டி கொண்டிருந்தது. இந்த வாழ்க்கை, அன்பு எல்லாமே ஒருவித எதிர்பாப்புகளோட நகர்ந்து கொண்டிருந்த அந்த சமயம், வெற்றிடத்தில் கூறிய வார்த்தைகள் போல அளவில்லாமல் பொங்கி தெளித்த அந்த காதல், அந்த அன்பு, அந்த நட்பு, என்னவென்று விவரிக்க முடியாத அந்த பிணைப்பை பற்றி அவன் மனம் சிந்திக்க தொடங்கியது. அந்த ப்ரொபெல்லர் சத்தமும், பாலாவும் மட்டும் அந்த இருள் சூழ்ந்த முதல் நாள் இரவில்.......

-----------தொடரும்

எழுதியவர் : இர்ஷாத் (2-Jun-17, 5:24 am)
சேர்த்தது : Irshad Ali
பார்வை : 503

மேலே