ஒரு மிடறு நீர்

முக்காலங்களையும்
அறிந்தவள் அவள்.
கடந்த காலத்தில்
ஆதி சமூகம் வாழ
அன்னையென
இரு கைகளால்
அரவணைத்துக் கொண்டவள்.
மனித நாகரீகங்கள்
பல கண்டவள்.
நிகழ்காலச் சடுதியில்
கவனிப்போர் யாருமற்று
அனாதையாக
வெற்றுடல் துறக்க
அவள் மேனியெங்கும்
காங்கிரீட் கொப்பளங்கள்.
ஒரு அடைமழைக் காலத்தில்
கொதித்துச் சினந்து
தன் வெஞ்சினத்தைக் காட்ட
அரக்கியென்றும்
பெயர் பெற்றவள்.
வருங்காலம் என்று
ஒன்று இருக்குமெனில்
தன் மறைந்து போன
தடயத்தில்
ஒடுங்கிப் போய்
முதிர்ந்த அரவமாய்
நம் ஒவ்வொருவரின்
தொண்டைக் குழியை
நிச்சயம் இறுக்கிடுவாள்
ஒரு மிடறு நீருக்காக

எழுதியவர் : பிரேம பிரபா (4-Jun-17, 4:43 pm)
பார்வை : 220

மேலே