காதல் பழக வா-22

காதல் பழக வா-22

ராதியை சமாதானம் செய்து சரிகட்டிவிட்ட நிம்மதியில் கண்ணன் ராதியை கோவிலுக்கு அழைத்து வர அங்கிருந்து ஆரம்பமானது அடுத்தடுத்த சிக்கல்கள்...

"ராதி கோவில் வந்தாச்சு, இறங்கு"

அங்கிருந்து கோவிலுக்குள் நுழைந்து பூஜையில் உட்காரும்வரை ராதி போகும் இடமெல்லாம் நின்றுகொண்டு குழம்பிக்கொண்டு இருக்க ராதியை இங்கு அழைத்துவந்து தவறுசெய்து விட்டோமோ என்று கண்ணனுக்கு தோன்றியது...

"ராதி என்ன அங்கங்க நின்னு யோசிச்சிட்டே இருக்க, பூஜை ஆரம்பிச்சிட்டாங்க, சீக்கிரம் போய் பூஜையில் கலந்துக்கணும்ல, சுத்தி பாக்கறதெல்லாம் அப்புறம், இப்போ பூஜையில் போய் உட்காரனும், வா சீக்கிரம்" என்று ராதியை இழுக்காத குறையாக அழைத்து சென்றான் கண்ணன்...

பூஜை நடக்கும்போது கூட ராதி இயல்பான நிலையில் இல்லை, எதையோ மனசில் போட்டு குழப்பிக்கொண்டும் யோசித்துக்கொண்டும் ஏனோதானோவென பூஜையில் கலந்துகொண்டாள்...

பூஜையின் பாதியில் தான் கண்ணனின் குடும்பம் வர ஒருவழியாய் பூஜை முடிந்து கண்ணன், ராதி பொங்கல் வைத்து சாமிக்கு படையல் போடும் நேரமும் வந்தது....

"ராதி உனக்கு பொங்கல் வைக்க தெரியுமா?"
--------
"ஏண்டி இப்படி உம்முன்னே இருக்கே, பூஜையில் கூட நீ சரியா இல்லையே, என்னமோ நடந்திருக்கு, கண்ணன் எதாவது கஷ்டப்படுத்தினாரா, சொல்லுடி"
----------
"ராதி உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கோம், நீ இப்படி அமைதியாவே இருந்தா என்ன பிரச்சனைன்னு எங்களுக்கு எப்படி தெரியும்"
---------
ராதியின் தோழிகள் என்னென்னவோ பேசி பார்த்தும் ராதி எதற்கும் பதில் கூறாமல் எந்த அசைவுமின்றி தரையை பார்த்தபடி இருக்க என்ன செய்வதென்று ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை...

"ராதி எதாவது பேசுடி, நீ இப்படி இருக்கறத அவங்க யாராவது பார்த்தா தப்பாயிடும், எங்களுக்கே பயமா இருக்குடி, என்ன ஆச்சு, உடம்பு சரி இல்லையா, இல்லை கண்ணன் மேல இருக்க கோவத்துல இப்படி இருக்கியா"
ராதியின் மௌன நிலையை பார்த்து கவி ராதியை பிடித்து உலுக்க ராதி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்தாள்...

"எதுக்குடி என்ன போட்டு இப்படி உலுக்கற , என் கையெல்லாம் வலிக்குது"

ராதி பேசியதை கேட்டதும் தான் அத்தனை பேருக்கும் போன உயிர் திரும்ப வந்தது...

"ராதி என்ன ஆச்சுடி, இவ்ளோ நேரம் எங்களை எப்படில்லாம் பயரமுறுத்திட்டே தெரியுமா, பேய் பிடிச்ச மாதிரி ஒரு அசைவும் இல்லாம அப்படியே உட்காந்திருக்கறத பாத்து எங்களுக்கு மூச்சே நின்னுடுச்சு, இப்போ நீ பேசறதை கேட்டதும் தான் நிம்மதியாச்சு, என்னடி இது விளையாட்டு, இப்படி கோவிலுக்கு வந்த இடத்துல பயமுறுத்திட்டேயே"

"நல்லா பயந்திங்களா, இதுக்கு தான் சும்மா இந்த நாடகம்லாம்….. எப்பவும் நாம இப்படி எதாவது விளையாடுவோமே, கொஞ்ச நாளா இருக்க பிரச்சனைல தோணல, இப்போ உங்களை பயமுறுத்தி பார்க்க தோணுச்சு அதான், ரொம்ப பயந்துட்டீங்களா, சாரி டி..." என்று ராதிபதில் சொல்ல ஆளுக்கொரு அடியை வலிக்காமல் அடித்துபின் சமாதானம் ஆனதும் ராதி பொங்கல் வைக்கும் நேத்திக்கடனை செய்ய தயார் ஆனாள்...

எல்லார் முன்னிலும் இயல்பாய் சந்தோஷமாய் இருப்பதை போல் காட்டிக்கொண்டாலும் ராதிக்குள் பெரும் புயலே வீசிக்கொண்டிருந்ததை அவளை தவிர கண்ணனும் அறிந்திருந்தான்...
"என்ன ராதி ஏதோ யோசனையாவே இருக்கியே, சாமிக்கு படையல் ரெடி பண்ணனும், எல்லாத்தையும் எடுத்து வைக்கலாம் வா" என்று கண்ணன் ஏதேதோ வேலைகள் குடுத்து ராதியின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்தான்....

ராதிக்கு இருந்த மனநிலையில் கண்ணனை பற்றி ராதி முழுவதும் மறந்து போனாள்...அவள் மனம் முழுக்க முழுக்க பழைய நினைவுகளை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்க நிகழ்காலத்திற்குள் இருக்கவும் முடியாமல் கடந்த காலத்தை நினைவுபடுத்தவும் முடியாமல் தவித்து போனாள் ராதி...

" குருக்களே, கண்ணன் கல்யாணம் முடிஞ்ச நேரத்துல இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை வந்துட்டே இருக்கு, இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா, இல்லை இதுக்கெல்லாம் என்ன காரணம், நீங்க தான் நல்ல வாக்கா சொல்லணும்"
"அம்மா, உங்க பையனுக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது இந்த பொண்ணோட தான் நடக்கணும்னு இருக்கு, இந்த முடிச்சி இவங்க சின்ன வயசுலயே விழுந்தது, ஆனா ஏதோ ஒரு தடங்கல், அப்போ சேர முடியாம போச்சு....இத்தனை நாள் இவங்க மனசு செஞ்ச தவத்தால் இப்போ சேர்ந்திருக்காங்க...ஆனா இப்போ இவங்களுக்கு நடக்கற திசை மாற்றத்தால் இவங்க சேர்ரதுல சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும் முடிவுல இவங்க ரெண்டு பெரும் ஒண்ணா சேர்றதை யாராலயும் தடுக்க முடியாது கவலை படாம போங்க"
"கண்ணன் மேல வீணான பழி எல்லாம் வந்து சேருது, அவன் மேல நாங்க வச்ச நம்பிக்கையை அசைச்சு பாக்கற அளவுக்கு ஏதேதோ நடக்குது, எங்க மனசெல்லாம் குழம்பி கிடக்குது, என்ன செய்யறதுனே தெரியாம தான் உங்களை நம்பி இங்க வந்துருக்கோம்"
"உங்க பையன் சொக்க தங்கம், அவன் செய்யற எல்லாத்துக்கும் ஒரு காரண காரியம் இருக்கும், அவன் மேல இருக்க நம்பிக்கையை என்னைக்கும் விட்றாதீங்க, எல்லாம் சீக்கிரம் சரி ஆகும், உங்க குலதெய்வத்தை நினைச்சி தினமும் விளக்கு வைங்க, அன்னதானம் செய்ங்க...ஏழை குழந்தைகளுக்கு கல்வி தானம் பண்ணுங்க.... எல்லாம் நல்லதாவே நடக்கும், நம்பிக்கையோட போயிட்டு வாங்கம்மா"
"சரிங்க சாமி, நீங்க சொன்ன மாதிரியே செய்ரோம், நாங்க போய்ட்டு வர்றோம்"
குருக்கள் சொன்ன வாக்கில் மனம் ஓரளவு சாந்தமடைந்து படையல் போட்டு எல்லா வேண்டுதல்களும் முடிந்து வீட்டிற்கு கிளம்ப தயாராகும் நிலை வந்த பின் தான் கண்ணனுக்கு நிம்மதியானது...ராதியின் மனநிலையில் இத்தனை பெரிய மாற்றம் வரும் என்று தெரியாமல் கண்ணன் ஏதோ ஒரு நம்பிக்கையில் இந்த முயற்சியில் இறங்கியது தான் தவறாகி போனது....

"அம்மா நாங்க முன்னாடி கிளம்பறோம், ராதி ரொம்ப சோர்வா தெரியறா, நீங்க எல்லாரும் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்க....வா ராதி கிளம்பலாம்"

"என்ன கண்ணா, இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாமே, எல்லாரும் இப்படி ஒண்ணா கோவிலுக்கு வந்து எத்தனை வருஷம் ஆச்சு, ஆளுக்கொரு வேலை....இப்போல்லாம் இப்படி ஒண்ணா வர நேரம் கிடைக்கறது இல்ல, அது மட்டும் இல்லாம உனக்கு கல்யாணம் ஆன கையோட கோவிலுக்கு வந்திருக்கோம், ஆச்சி வீட்டுக்கு போய் விருந்து சாப்பிட்டு ஆச்சிகிட்டே ஆசிர்வாதம் வாங்கிட்டு போனா தானே முறையா இருக்கும், அப்புறம் ஆச்சி கோவிச்சுக்குவாங்க, இவ்ளோ தூரம் வந்துட்டு எங்க வீட்டுக்கு வராம எப்படி போகலாம்னு மனஸ்தாபப்பட்டுக்கிட்டா நல்லா இருக்குமா....இன்னும் கொஞ்ச நேரம் இரு கண்ணா, நாம ஆச்சி வீட்டுக்கு போயிட்டு அப்புறம் வீட்டுக்கு கிளம்பலாம்...ரிஷப்ஷனுக்கும் அவங்கள அழைச்ச மாதிரி ஆகிடும்....ரமா நீ என்னமா சொல்ற?"

"அண்ணா நீங்க சொன்னா சரியா தான் இருக்கும், கண்ணா மாமா இவ்ளோ தூரம் சொல்றாங்கள்ல , இருந்துட்டே போகலாம் கண்ணா"

"அம்மா இன்னொரு நாள் நாங்க வர்றோமே, இப்போ நீங்க மட்டும் போய் அழைப்பு குடுத்துட்டு வாங்களேன், ராதி வேற உடம்பு முடியாம இருக்கா, இந்த நிலைமைல அவளை அங்க கூட்டிட்டு போய் ஏடாகூடமா எதாவது ஆச்சுன்னா ஆச்சியை பத்தி உங்களுக்கே தெரியுமே, நிறைய சகுனம் பார்ப்பாங்க....அது இன்னமும் மோசமாகிடும்...எங்களை பத்தி அவங்க கேட்டா நீங்களே எதாவது சொல்லி சமாளிச்சிடுங்கம்மா"
"அண்ணா கண்ணன் சொல்றதும் சரி தான், ஆச்சி சகுனம், சம்பிரதாயம் பார்க்கற ஆள், ராதியை இந்த நிலமைல கூட்டிட்டு போய் சம்பிரதாயத்துக்கு அத செய் இத செய்னு ஏதாவது சொன்னா தர்மசங்கடமா போய்டும்...வரவேற்பு பத்திரிக்கை கூட நாளைக்கு தான் தர்றதா சொல்லிருக்காங்க......எப்படியும் பத்திரிக்கை வந்ததும் சாமிகிட்ட வச்சி ஆசிர்வாதம் வாங்க வருவோம், அப்படியே ஆச்சியையும் பார்த்து அழைச்சிடலாம், இப்போ நேரா வீட்டுக்கே கிளம்பலாம் அண்ணா, எல்லாரும் சோர்வா இருக்காங்க, கோவிலுக்கு வந்துட்டு நேரா வீட்டுக்கு போறது தானே முறை, ஆட்சி கேட்டா இதையே சொல்லலாம்....அவங்களும் புரிஞ்சிப்பாங்க....இப்போ கிளம்பலாம் அண்ணா"

ரமாவின் ஆலோசனை அனைவருக்கும் சரியென பட வீட்டுக்கு கிளம்ப முடிவெடுத்தது கண்ணனுக்கு சாதகம் ஆகி போனது... ஆனால் கண்ணனின் நிம்மதியை நிலைக்க விடாமல் கண்ணனும் ராதியும் காரில் ஏற போன நேரம் பார்த்து கண்ணன் சமாளித்து வந்த அத்தனைக்கும் முட்டு கட்டாய் ராதியின் பழைய நினைவுகளை மீட்டெடுக்க வந்து சேர்ந்தாள் அவள்...

எழுதியவர் : ராணிகோவிந் (5-Jun-17, 1:17 pm)
பார்வை : 642

மேலே