தலை தனியா முண்டம் தனியா

தலை தனியா... முண்டம் தனியா...
****************************************

தெருவோரம் சின்னதா ஒரு வீடு...
அந்த வீடுல சின்னதா ஒரு குடும்பம்...

அப்பாவுக்கு வயசாகி போனதுனால
சொன்னதையே திரும்ப திரும்ப
சொல்லிக்கிட்டே இருப்பார்...

பெத்த பிள்ளை தன்பேச்ச கேட்காததால்
தனக்குன்னு பேச்சித் துணைக்கு ஒரு பிள்ளைய
வளர்க்க ஆரம்பிச்சிட்டார்...

தனியா இருக்கும் போது
தன் சோகத்தைச் சொல்லி பேசிக்கிட்டே இருப்பார்..!

திடீர்னு ஒரு நாள் அந்த வீட்டுல
அப்பாவோட அலறல் சத்தம்
தெருவையே திரும்பி பார்க்க வச்சிடுச்சி...

இனிமே என் பேச்ச கேட்க யார் இருக்கா...
எனக்காக இருந்த ஒரு பிள்ளையையும்
எம்மகன் கொன்னுட்டானே...

அவனுக்கு குடிக்க உப்புத்தண்ணி கொடுத்தாலும்...!
எனக்கு நல்ல தண்ணி கொடுப்பான்டா...!!
அப்படிப்பட்ட பிள்ளைய....
என்று சொல்லி முடிப்பதற்குள்,

இப்ப என்ன நடந்து போச்சின்னு கத்துறீங்க...

இதுக்கு மேல என்ன நடக்கணும்...?
அவம்பாட்டுக்கு இந்த வீட்டுல ஒரு ஓரமா
இருந்துட்டு போறான்...
உங்களுக்கு என்னடா வந்துச்சி...?

எங்களுக்கு என்ன வந்துச்சா...?
இப்ப எம்பையன் தோளுக்கு மேல வளந்துட்டான்..
அவனுக்கு நாளைக்கு ஒரு
கல்யாணம் காச்சின்னு வந்தா...
குடியிருக்க ஒரு வீடு வேண்டாம்...?
என்று கத்த

உம்பையன் குடியிருக்க வீடு வேணும்னா
ஊருக்கு ஒதுக்குப்புறமா
இடம்வாங்கி கட்டுடா...
நா கட்டுன வீட்டுக்கு மாடியில எதுக்கு கட்டுற...
என்று பதிலுக்கு கத்த

தெருவே ஒன்னு கூடியிருச்சி
அந்த வீடுப்பக்கம்...

கத்தி கத்தி பேசிய பெரியவரால்
ஒருகட்டத்துக்கு மேல்  
எதுவும் பேச முடியாமல் ஒருமூலையில்
போய் அமர...

எந்த சத்தமும் இல்லாமல்
தலை தனியா... முண்டம் தனியா...
வெட்டி சாய்ந்து அமரராய் கிடக்குது  
அவர் ஆசை ஆசையாய் வளர்த்த தென்னம்பிள்ளை..!

வேடிக்கை பார்க்க வந்தவர்களும்
மாடி வீடு கட்ட இடைஞ்சலா இருந்தா
மரத்த வெட்டத்தான செய்வாங்க..
சொல்லிட்டு போய்ட்டாங்க...


உண்மையில்

ஆசையாய் வளர்த்த மரத்தை வெட்டும் போது...

அந்த மரத்துக்கு வலிக்குதோ இல்லையோ...

அத வளர்த்தவனுக்கு கண்டிப்பா வலிக்கும்...!!

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 

இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (9-Jun-17, 12:54 am)
பார்வை : 88

மேலே