ஆசிரியர்களுக்கு ஒரு மாணவனின் கடிதம்

மதிற்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு,

உங்களால் பேரறிவோடு விளங்கும் ஒருவன்,நீங்கள் ஒளியேற்றி வைத்த அனல் விளக்கான ஒருவன் மிகுந்த மரியாதையோடும்,பரந்து விரிந்த மனதோடும் மாணவ சமுதாயத்தின் பிரதிநிதியாய் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நாளைய இந்தியாவின் எதிர்காலம் எங்களது கைகளில்,ஆனால் எங்களது எதிர்காலம் உங்களுடைய காலடியில் இருக்கிறது.

வாழும் தெய்வங்களே!எங்கள் முன்னேற்றத்திற்கு ஏணிப்படிகளாய் இருப்பவர்களே,உங்கள் கரங்களை படிகளாக்கி அல்லவா நாங்கள் மேலுயர்ந்தோம்.இந்த சமுதாயத்தில் உன்னிப்பாக கவனிக்க படவேண்டியவர்கள் நீங்கள்!நிர்வாணத்தை மறைக்க நெசவு நெய்ந்த தொழிலாளர்களுக்கு இந்த சமுதாயம் தந்தது சவத்துணி தான் என்பது போல எங்கள் அறியாமையை அழித்து அறிவொளி அளிக்கும் உங்களை சமுதாயம் இன்னும் சிம்மாசனத்தில் ஏற்றவில்லை.

மாணாக்கர்களின் வெற்றியில் வெற்றி அடைபவர்கள் நீங்கள்.பொறாமை கொள்ளாத ஒரே ஜீவன் நீங்கள்.பெற்றெடுத்த தாய் கூட பத்து மாதங்கள் தான் எம்மை வயிற்றில் சுமந்தாள்,ஆனால் பள்ளியில் பதினான்கு ஆண்டுகளும் கல்லூரியில் நான்காண்டுகளுமாக ஏறத்தாழ 18 ஆண்டுகள் எங்களுக்காக ஓடி ஓடி உங்கள் கால்கள் தேய்ந்திருக்குமே!

நாங்கள் பொறுப்பான பதவியில் அமர வேண்டும் என்பதற்காய் காலமெல்லாம் நின்றுகொண்டே இருப்பவர்களே!உலகத்தின் கண்களுக்கு ஒளி மட்டுமே தெரியும்,ஏற்றிவைத்தவர்களை அது கணக்கில் வைத்துக்கொள்வதில்லை.இன்று பிரகாசமாக ஒளிவீசும் எங்களை ஏற்றி வைத்து தீக்குச்சிகளாய் கரைந்து போவார்கள் நீங்கள்.

இன்று வெற்றி மேடையை அலங்கரிக்கிற எல்லோரது பேச்சிலும் அவரது ஆசிரியர் பெயர் நிச்சயம் அடிபடும்.ஆனால் அந்த வேளையில் அந்த ஆசிரியர் அங்கிருக்கமாட்டார் அடுத்த படைப்பை உருவாக்குவதில் உழைத்து கொண்டிருப்பார்.

வெற்றியின் விலாசத்தை அடைந்த எல்லோர் வாழ்விலும் அவர்களை தட்டி கொடுத்த ஓர் ஆசிரியர் இருக்கிறார்.இன்று எங்கள் கிளைகள் கொஞ்சம் விரிந்திருக்கலாம் ஆனால் ஆசான்களே எங்கள் வேர்கள் வசிப்பது உங்களிடத்தில் தான்.

புதிய இந்தியாவின் பிரம்மாக்களே!காலப் பெருவெளியில் நம் சிலவற்றை மறந்து விட்டோம் அல்லது தொலைத்து விட்டோம்.உங்களுக்கும் எங்களுக்கமான உறவை புதுப்பித்து கொள்ள வேண்டிய சூழலில் காலத்தால் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.மிகுந்த பணிவோடு உங்களிடத்தில் நான் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.பிழையொன்றும் இல்லையேல் உரைக்கிறேன் தயைகூர்ந்து கேட்டருள்க!

இந்தியாவில் கல்வியின் தரம் ஒருவேளை குறைந்திருக்கலாம்.ஆனால் நாளைய நாட்டின் தூண்களுக்கு குறை ஒன்றும் இருக்க கூடாது.இந்த கல்வி முறை 3 ஆண்டுகள் மூச்சுப்பிடித்து எப்படி ஒரு ஆற்றை கடக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லி தருகின்றன.வாழ்க்கையிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என தற்காலிக தீர்வுகளை சொல்லி தரும் பாடபுத்தகங்களே பெருகி உள்ளன.கல்வி என்பது வாழ்க்கையை எப்படி ஜெயிக்கலாம் என்ற தாரக மந்திரத்தை சொல்லி தருவது.தன்னம்பிக்கை கற்று தருவது.தனித்திறனை வெளிப்படுத்துவது.சுயமாக சிந்திக்க கற்று தருவது.

நாம் நாட்டின் இன்றைய கல்வி முறையில் எங்களுக்கு 100 சதவீத உடன்பாடு இல்லை.அக்குறையை கூட
ஆசிரிய பெருமக்களே உங்களால் மாற்ற முடியும்.கணிதம்,பொறியியல்,வேதியல் இவற்றை மட்டுமே போதிப்பது ஆசிரியருடைய வேலை.அவற்றில் இருந்து இரண்டு நிமிடம் விலகி நின்று வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவது குருவினுடைய வேலை.நீங்கள் நல்ல ஆசிரியர்களாக இருக்கவில்லையென்றாலும் பரவாயில்லை தயவு செய்து ஒரு குருவாக இருங்கள்.ஏட்டு கல்வியோடு சேர்த்து ஒவ்வொரு கல்விநிலையங்களிலும் மறந்து போன வாழ்க்கை கல்வியை போதியுங்கள்.காலத்தால் இயந்திரமாக்கப்பட்ட நாங்கள் சில நிமிடங்களாவது மனிதர்கள் ஆவோம்.வஞ்சகம்மிக்க அறிஞனாக இருப்பதை காட்டிலும் அறிவற்ற ஒழுக்கமிக்கவனாக இருப்பதும் ஒருவகையில் சிறந்ததே.

எங்களோடு மனதோடு மனம் விட்டு பேசுங்கள்.எங்களின் எண்ணங்கள் எல்லாம் உங்கள் சிந்தையில் குடியேறும்.முதலில் எங்கள் மன அழுக்குகளை போக்குங்கள்.எங்கள் மனம் என்னும் களர் நிலத்தை பண்படுத்துங்கள்.பிறகு அறிவை புகுத்துங்கள்.

குருட்டு உலகத்தால் நிராகரிக்கப்பட்ட,வேதனைகள் கண்ட,தாழ்வு மனப்பான்மை மிக்க எத்தனையோ மாணவர்களுக்கு தம் ஆசான்களின் கைகள் அல்லவா ஏணிப்படிகள்.இந்த கல்விமுறை பிகாசோவை சச்சின் ஆக்கவும் ,சச்சினை மில்டன் ஆக்கவும் ,மில்டனை காலம் ஆக்கவும் முயற்சித்து கொண்டிருக்கிறது.நீங்களும் அதற்கு துணைபோகாதீர்கள்.எங்களின் எதிர்காலத்தை உதடுகளால் உச்சரிக்கும் நீங்கள் தான் எங்கள் உண்மை நிலையை எங்களுக்கே அறிமுக படுத்தி அத்திறமையை ஊக்குவிக்க வேண்டிய மிக பெரிய பொறுப்பும் உங்களிடத்தில் ஒப்படைக்க பட்டிருக்கிறது.எத்தனை ஆயிரம் திறமைகள் மண்ணோடு புதைந்திருக்கும்,அத்திறமைகளுக்கு நீரூற்றி வளர்க்க வேண்டியவர்கள் நீங்கள்.தயவு செய்து நீங்கள் உங்களிடத்தில் உள்ள காலமையும் ,மில்டனையும்,சச்சினையும் அடையாளம் கண்டுகொண்டு ஊக்குவியுங்கள்.

உங்கள் கைக்குள் நாங்கள் இருக்கிறோம்.அதிகம் அழுத்ததிர்கள் உடைந்து விடுவோம்.லேசாக விடாதீர்கள் நழுவி விடுவோம்.எங்களை வளைக்கிற அவசரத்தில் உடைத்து உடைத்தீர்கள்.எங்கள் கனவுகளுக்கு உயிர் கொடுக்க வேண்டியவர்கள் நீங்கள்,சேதப்படுத்திவிடாதீர்கள்!

உங்கள் சொற்கள் தான் எங்களுக்கு வேதமந்திரம்.அச்சொற்கள் எங்கள் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டும்.அச்ச்சொற்கள் கோழையையும் மாவீரனாக வேண்டும். ஒருபோதும் எங்களை தாழ்த்தி விட கூடாது.களிமண்ணை களிமண் என்று சொல்லிக்கொண்டிருப்பது உங்களை போன்ற பிரம்மக்களுக்கு அழகல்ல,அக்களிமண்ணையும் அழகிய சிற்பமாக வடிப்பதில் தான் உங்கள் கைவண்ணம் ஒளிந்திருக்கிறது.
உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது நம்பிக்கையும்,உத்வேகமும்,வழிகாட்டுதலும் மட்டும் தான்.

பெரியயோர்களே!உங்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் பல சமயம் பொய்த்து போகசெய்திருக்கலாம்.அத்தனையும் மன்னித்து மறைக்கின்ற தாய் உள்ளம் கொண்டவர்கள் நீங்கள்.உங்கள் மாணவர்கள் எப்போது உங்களிடம் மனம் விட்டு பேசுகிறார்களோ அப்போது நீங்கள் உங்கள் பணியில் கால்வாசி ஜெய்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் கலங்கரை விளக்கமாக கூட மாறவேண்டும் கரை கிட்டத்தில் தான் என உற்சாகப்படுத்துங்கள் போதும்..!

எங்களை மகான் ஆக்குவதற்கு முன் நல்ல மனிதனாகுங்கள் போதும்..!

உங்கள் மீது ஆயிரம் கோடி நம்பிக்கைகளோடும்,வண்ணமயமான எதிர்கால கனவுகளோடும் வார்த்தைகளுக்கு முற்று புள்ளி வைக்கிறேன்,உங்கள் வார்த்தைகள் எங்கள் எதிர்கால வாழ்வின் தொடக்கமாக இருக்கும் என்ற எண்ணத்தில்....!



-இப்படிக்கு
உங்களால் உருவாகும் மாணவன்.



கோவை.சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (11-Jun-17, 9:30 am)
பார்வை : 306

மேலே