மனைவிக்கு பரிசு

ஹலோ! யாருங்க..?"
"நாந்தாம்மா பேசுறேன். எப்டி இருக்க?"
நாந்தாம்மா என்கிற அழுத்தத்தில் முகம் ரோசாப்பூவாய் சில்லிட்டது.
"நீ..நீங்களா? இருங்க மாடிக்கு வர்றேன். இங்க பேசமுடியாது" கொஞ்சலாய் வெளிப்பட்டது வார்த்தைகள். கேள்வியோடு மாமியார் பார்வையையும் சட்டை செய்யாமல் மாடியேறி மூச்சிறைக்க,
"சொல்லுங்க.. மாடியில இருக்கேன்."
"சாப்பிட்டியாடா நீ!" கரகரத்த ஆண்குரலில் பாசம் பொங்கியது.
"ம்ம்!" விசும்பலாய் வந்தது வார்த்தைகள்.
பத்து நிமிட உரையாடலில் ஏனோ அவள் எதிர்பார்த்த விசயம் தவிர எல்லா சம்பிரதாய விசாரிப்புகளும்.
"அப்புறம்"
சிலுசிலுவென சிறகடித்த இதயத்தின் மத்தியில் நரம்பொன்றை கத்தரித்த வலி வரும் அவளுக்கு இந்த வார்த்தையை கேக்கும்போதெல்லாம். வெளியூரிலிருக்கும் கணவனின் அழைப்பிற்கு ஏங்கித் தவிப்பதும், வந்ததும் குதூகலிப்பதும் அவன் குரல் கேக்கும் இந்த சில நிமிடங்களுக்குதானே. அவனுக்கு தன்னிடம் பகிர விசயமே இல்லாது எல்லாமும் தீர்ந்து போயிற்று என்கிற வெறுமையை வலியோடு உணர்த்தும் இந்த வார்த்தை நிச்சயம் கொடிது.
"ம்ம்.. சரி ஒண்ணுமில்ல" வீம்பாய் சொன்னாலும் பரிதவிக்கும் மனசு. இன்னிக்கும் அப்படித்தான். ஆனால் கண்ணீர் மட்டும் முட்டிக்கொண்டு வந்தது.
"சரிம்மா. பாத்துக்கோ! அடுத்தவாரம் பேசுறேன்."
"ம்ம்...வந்து.." சொல்லி முடிப்பதற்குள் அலைபேசி அடக்கமானது.
ஏனோ அழணும் போல இருந்தது. சின்னதா ஒரு வாழ்த்து சொல்லியிருக்கலாம். என்னதான் வேலையினாலும் பொண்டாட்டி பிறந்தநாள் கூடவா மறந்து போகும். எல்லாமே நானா சொல்லிச் சொல்லி வாங்கணுமா என்ன? காலையில் பால் பாயசம் செஞ்சதுக்கே நக்கல் தாங்கல. ரெண்டு பிள்ளைங்களுக்கப்புறம், இந்த வயசுல இது வேறயான்னு? இப்படி அழுறது தெரிஞ்சா நாத்தி நமட்டு சிரிப்பு சிரிச்சே கொன்னுருவா. ஏன்மா என்னப் பெத்தே? அனாவசிமாய் அம்மாவுக்கு வசவு விழுந்தது. அவனை குறை சொல்ல முடியாத கோவம் கேவலாய் வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு வேகவேகமாய் நடந்தாள். மூச்சை மெல்ல இழுத்துவிட்டுக்கொண்டாள். சமாதானமானது மனது.
மாடியிறங்கி வந்தாள். வழக்கம் போல சலனமற்ற முகத்துடன்...
துணிமடிக்கையில் வாசலில் அழைப்புமணி சத்தம்.
"அம்மா பார்சல் வந்திருக்கு."
யாருக்கிட்ட இருந்து? பெயர் எதுவும் இல்லாமல் ரோஜாக்கள் சகிதம் உள்ளே அழகான ஒரு தேவதை பொம்மை. நேர்த்தியும் அழகும் குழைந்து ஏதோ மனதை ஈர்த்தது.
என் தேவதைக்கு என்றெழுதியதை தவிர வேறேதும் இல்லை. வினாடி நிதானித்தவள் வந்த சில நிமிடங்களில் இறக்கைகள் முளைத்து கணவனிடம் தேடி பறக்கலானாள்.
"அண்ணி... அது... அது எனக்கு வந்தது... நரேன்கிட்ட இருந்து. அதான்... அம்மாட்ட சொல்லிராதீங்க."
வருங்கால கணவனிடமிருந்து அவளுக்கு வந்த பரிசு.
"யாருக்குன்னு தெரியாமத்தான் நித்தி...மன்னிச்சிடு. சீக்கிரம் எடுத்துட்டுப் போ. அத்தை வந்திடுவாங்க."
நட்பாய் சிரித்தாள் அவள். ஏனோ குதூகலித்தது மனசு.

எழுதியவர் : சிவா _ சக்தி (11-Jun-17, 11:31 am)
சேர்த்தது : சிவா
Tanglish : manaivikku parisu
பார்வை : 446

மேலே