காதல் பழக வா-23

காதல் பழக வா-23

முத்தம் ஓன்று வைக்கவா....
உன் முத்தத்திற்குள்
குளிக்கவா?...

ஆசை முத்தம் அள்ளித்தா...
காதல் முத்தப்பாடம்
சொல்லித்தா....

உன் ஒற்றை முத்தம்
போதுமா?
என் காதல் மோகம்
தணியுமா??

கருணை கொண்டு
நெருங்கிவா...
காதல் கொண்டு என்னுள்
கலந்திட வா....

"ராதி நீ கார்ல ஏறு, நாம முதல்ல கிளம்புவோம், அவங்க பின்னாடியே வேன்ல வந்துடுவாங்க"

ராதி இருந்த குழப்பத்தில் அவளுக்கு எதுவும் தோன்றாமல் கண்ணன் சொன்னபடியே காரில் ஏற போனாள்....

"ராதிக்கா.....ராதிக்கா, நில்லுக்கா....அக்கா......"

தூரத்தில் இருந்து ராதிகாவை அழைத்துக்கொண்டே ஒரு பெண் ஓடி வர ராதி அந்த பெண்ணை பார்த்தபடி நின்றுவிட்டாள்....
மூச்சு வாங்க ஓடிவந்தவள் வந்த வேகத்தில் ராதியை கட்டிப்பிடித்து கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்....

"என்னக்கா நீ, எவ்ளோ நேரம் நான் கூப்டுட்டே ஓடி வரேன், நீ இங்கேயே நின்னுகிட்டு வேடிக்கை பார்க்கறயே, அதுக்குள்ளே என்ன மறந்துட்டியாக்கா" என்று அவள் பாட்டுக்கு ஏதேதோ பேச ராதி ஒன்றுமே புரியாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தாள்.....

ராதியின் அருகில் நின்றிருந்த கண்ணனையும் ராதியின் கழுத்தில் தாலி இருப்பதையும் மாறி மாறி பார்த்தவள் ஏதோ புரிந்தவளாய் மெல்லிய புன்னகையோடு ராதியை பார்த்தாள்...

"அக்கா, உனக்கு கல்யாணம் ஆச்சா, ஆனா நீ கல்யாணத்துக்குகூட என்ன கூப்பிடவே இல்லையே, என்னலாம் நீ மறந்துட்டல்ல, நான் தான் லூசு மாதிரி உன்ன பார்த்ததும் ஓடி வந்துருக்கேன்....நீ தானக்கா சொன்ன, நான் உன்னோட கூட பொறுக்காத தங்கச்சின்னு, ஆனா நீ இந்த தங்கச்சியையே மறந்துட்டள்ள" என்று கண்கலங்க அவள் நிற்க ராதிக்கோ உள்ளுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது....

தன்னை விட இளையவள் பாசத்தோடு கண்கலங்கி நிற்க தனக்கோ அவள் சொல்வதில் ஒன்றுமே ஞாபகத்துக்கு வரவில்லையென்பது சித்ரவதியாக இருந்தது ...இந்த பெண் சொல்வது உண்மையா, ஆனால் இவளோடு பேசியது போல் ஞாபகம் இல்லையே,ஆனால் இவளோ நான் இவளை கூட பிறக்காத தங்கச்சி என்று பாசம் கொட்டியதாய் கூறுவது??ஒருவேளை பொய்யாய் இருக்குமோ....கண்டிப்பாக பொய் இல்லை, இந்த பெண்ணின் கண்ணில் பொய் இல்லை, இவள் கண்ணீரில் வெகுளித்தனமும், பாசமும் மட்டும் தான் தெரிகிறது....

என்னை சுற்றி நடப்பதும் புரியவில்லை, எனக்குள் நடப்பதும் புரியவில்லை, கடவுளே என்னை இந்த சூழ்நிலையில் இருந்து காப்பாற்று என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருந்த ராதியின் கண்ணில் இருந்து கண்ணீர் வரவும் கண்ணன் ராதியின் அருகில் வந்தான், அவளை காப்பாற்றும் அவளின் கணவனாக....

"நீங்க யாருனு நான் தெரிஞ்சிக்கலாமா? ராதிக்கு இப்போ உடம்பு சரி இல்லை, அதனால தான் அவளால உங்களை அடையாளம் தெரிஞ்சிக்க முடியலை, நான் ராதியின் ஹஸ்பன்ட்....நீங்க ராதிக்கு சொந்தமா, உங்க பேரு என்ன"

"என்னது அக்காக்கு உடம்பு சரி இல்லையா? இது தெரியாம நான் வேற ஏதேதோ பேசிட்டேன், என்ன மன்னிச்சிருங்க மாமா, நானும் ராதி அக்காவும் இந்த ஊருல தான் சந்திச்சோம், பழகுனோம்,….இந்த ஊருல எங்க சொந்தகாரங்க நிறைய பேர் இருக்காங்க, ராதி அக்காவும் சொந்தகாரங்க வீட்டுக்கு கோவில் திருவிழாக்காக வந்திருந்த சமயத்துல தான் நான் அக்காவை பார்த்தேன், கொஞ்ச நாள் பழகினாலும் அக்காவும் நானும் அக்கா தங்கச்சியா தான் பழகினோம், நானும் அக்காவும் ஒண்ணா நின்னு எடுத்த போட்டோவை தினமும் காலைல பார்த்தா தான் எனக்கு பொழுதே விடியும்.... அடுத்த திருவிழாவுக்கு அக்கா வருவாங்கனு ஆசையா வந்தேன், ஆனா அக்கா வரல, அக்கா வீடு எதுன்னு எனக்கு தெரியல, அக்காவோட சொந்தக்காரங்களும் வெளி ஊருக்கு போய்ட்டாங்க...அதுக்கப்புறம் அக்காவை பார்க்கவே முடியல, எப்படியாவது அக்காவை பார்த்திடமாட்டோமான்னு தான் நான் இந்த ஊருல நடக்கற எல்லா கோவில் விஷேஷத்திற்கும் வந்தேன்...நல்ல வேலையா அந்த கடவுள் இந்த முறையாவது என் அக்காவை என் கண்ணுல காட்டிட்டாரு அதுவே போதும் எனக்கு"

இந்த பெண் வெகுளி தான் என்பது அவளின் பேச்சில் இருந்தே கண்ணனுக்கு புரிந்துவிட்டது, அது மட்டும் இல்லாமல் அவள் சொல்வதெல்லாம் உண்மை என்பதும் கண்ணனால் புரிந்துகொள்ள முடிந்தது....அதே நேரத்தில் ராதி இதையெல்லாம் கேட்ட பின் எப்படி நடந்துகொள்வாளோ என்கிற பயம் கண்ணனுக்குள் ஏற்பட்டு கண்ணன் திரும்பி ராதியை பார்த்தான், ஆனால் ராதியோ இவள் பேசிய ஒன்றையும் கேட்காமல் காருக்குள் எப்போதோ ஏறிக்கொண்டாள் என்பது அப்போது தான் கண்ணனுக்கு புரிந்தது, அதுவும் ஒருவகையில் நல்லது என்று தான் கண்ணனுக்கு பட்டது...

"உன் பேரு என்னனு இன்னும் நீ சொல்லவே இல்லையே"

"என் பேரு மதுமதி .....அக்காவை பார்த்ததுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம், ஆனா அக்காவுக்கு தான் உடம்பு முடியாம பாவம் ரொம்ப கஷ்டப்படறாங்க, இப்போ கூட நிற்கமுடியாம காருக்குள்ள இருக்காங்க, சரிங்க மாமா, நீங்க கிளம்புங்க, அக்காவை கஷ்டப்படுத்த வேண்டாம்...உங்க போன் நம்பர் குடுங்க, நான் அக்காவோட அப்புறமா பேசிக்கிறேன்" என்று ராதியோடு பேசவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் ராதி கஷ்டப்பட கூடாதென்ற நல்ல எண்ணத்தில் பேசிய அந்த பெண்ணை கண்ணனுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது....

கண்ணனின் நம்பரை எழுதிக்கொடுத்துவிட்டு அவளின் நம்பரை குறித்துக்கொண்டான்...இவளை வைத்து தான் ராதியை சரிசெய்ய முடியும் என்று கண்ணனுக்கு தோன்றியது, அவளோடு பேசி முடித்து அவளை அனுப்பி விட்டு கண்ணன் காருக்குள் ஏறினால் ராதியோ எந்த சலனமும் இல்லாமல் ஒரு குழந்தையை போல தூங்கிக்கொண்டிருந்தாள்....



கண்ணன் ஒரு நிமிடம் ராதியை ரசித்துவிட்டு காரை ஓட்ட ஆரம்பித்தான்....அவனின் நினைவலைகள் பின்னோக்கி ஓட ஆரம்பித்திருந்தது....

"டேய் நீ அந்த பக்கம் நில்லு, ஏய் நீ என்னடா இப்படி அடிக்கற, பேட்டை இப்படி பிடிச்சி அடிக்கணும்....ஆமா நீ பால் போடறயா, இல்லை பட்டம் விடறயா? உங்களலாம் வச்சிக்கிட்டு கிரிக்கெட் என்ன, பாண்டி கூட ஆட முடியாது...நான் இந்த ஆட்டத்துக்கே வரல, நான் கிளம்பறேன்...." என்று புலம்பிக்கொண்டே ஆட்டத்தை விட்டு வெளியேறிய கண்ணனின் பின்னே ஆறேழு சிறுவர்கள் வளைத்து கொண்டு கெஞ்ச ஆரம்பித்தனர்...

"அண்ணா, ப்ளீஸ் அண்ணா, நீங்க இல்லாம விளையாட்டே நல்லா இருக்காது, போகாதீங்க அண்ணா, எல்லாம் இந்த ராகுலால தான், அவனுக்கு விளையாடவே தெரிய மாட்டேங்குது, எல்லாம் உன்னால தாண்டா" என்று ஒருவன் திட்ட பதிலுக்கு அவன் திட்ட அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்து ஒருவருக்கொருவர் திட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்....

"சரி சரி போதும், சண்டை போட்டுக்காதிங்க, உங்க யாருக்கும் கிரிக்கெட் தெரியல, அதனால நாம வேற எதாவது விளையாடுவோம்" என்று கண்ணன் சமாதானம் செய்ய சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு கிள்ளி விளையாடுவதென முடிவானது...

"அண்ணா அவனுக்கு அடிக்கவே தெரியல, நீங்களே போய் விளையாடுங்கண்ணா, நீ என்னடா அடிக்கற , கிள்ளி கோட்டை தாண்ட மாட்டேங்குது" என்று மறுபடியும் சண்டை ஆரம்பிக்க ஒருவன் துவங்கும்போதே கண்ணன் தானே இந்த முறை ஆடுவதென முடிவெடுத்து கோடு போட்டிருக்கும் இடத்திற்கு போனான்....


"அண்ணா சூப்பரா அடிக்கிறீங்க, அண்ணா சூப்பர், அண்ணா இன்னும் பார்ஸ்ட்டா அடிங்க, அண்ணா இன்னும் தூரமா அடிங்க" என்று அவர்கள் சுற்றி இருந்து உசுப்பேத்த கண்ணனின் வலிமை கூடிக்கொண்டே போய் அவன் போர்ஸாக அடித்த வேகத்தில் கிள்ளி தூரத்தில் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையை பதம் பார்க்க அவள் நெற்றியிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது....

இதை பார்த்து பதறி போய் கண்ணன் வேகமாக அந்த பெண்ணிடம் ஓடி வர அந்த பெண்ணும் கண்ணனால் தான் தனக்கு அடிபட்டு ரத்தம் வருகிறதென யூகித்திருந்தாள்....

கண்ணன் அவள் அருகில் போவதற்கும், அந்த பெண்ணிடம் ஒரு முதியவள் வருவதற்கும் சரியாக இருந்தது...

"என்னமா, என்ன ஆச்சு, நெத்தியில இருந்து இப்படி ரத்தமா கொட்டுது என்று கையால் அவளின் நெற்றியை பிடித்துக்கொண்டு பதற, அந்த பெண்ணோ அத்தனை வலியிலும் கண்ணனை காட்டிக்கொடுக்காமல் பக்கத்தில் தேங்காய் உடைக்கும் நேத்திக்கடன் நடந்துகொண்டிருக்கும் இடத்தை சுட்டி காட்டி தேங்காய் சில்லு பட்டு ரத்தம் வந்ததென்று பொய் சொல்லி கண்ணனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தாள்.... கண்ணனுக்கோ அந்த நிமிடத்தில் ஒருபுறம் குற்றவுணர்ச்சி அழுத்த, மறுபுறம் அந்த பெண்ணின் மேல் இனம் புரியா பாசம் தோன்ற, அவளின்மு கத்தை தன் மனதில் நிறைத்துக்கொண்டு அவள் மீதான அன்பை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தான்....
"எனக்கு உன்ன பிடிக்கல, என்ன விட்டு தள்ளி போ, ஐ ஹேட் யு....." என்று தூக்கத்தில் ராதி பேசிக்கொண்டிருப்பதை கேட்டதும் கண்ணன் நிகழ் காலத்திற்குள் வந்தான்....

ராதி மீண்டும் மீண்டும் ஐ ஹேட் யு என்று சொல்லிக்கொண்டிருக்க கண்ணனுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது....கண்ணனின் சிரிப்பில் ராதியின் தூக்கம் கலைந்து ராதி புரியாமல் கண்ணனை முறைத்தும் கூட கண்ணன் சிரிப்பதை நிறுத்தவில்லை....


"இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க, நான் நிம்மதியா தூங்கறதுகூட உங்களுக்கு பொறுக்கலையா, சிரிச்சி எழுப்பி விடறீங்களா?" என்று ராதி கோவத்தில் முறைக்கவும் கண்ணன் சிரிப்பையும் காரையும் நிறுத்தினான்....

"மை டியர் ராதி தூக்கத்துல கூட ஐ ஹேட் யு னு சொல்லிட்டு இருந்தியா, அதான் அதை கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்துடுச்சு, இதுல என் தப்பு என்ன இருக்கு" என்று அப்பாவி போல் கண்ணன் கேட்க ராதியும் அவன் பேசியது போலவே அவனுக்கு பதில் கொடுத்தாள்...

"மை டியர் எனிமி, தூக்கத்துல கூட உன்னை நான் வெறுக்கிறேன்னு சொன்னதை கேட்டு நீ அழுதிருந்தா அதுல அர்த்தம் இருக்கு, ஆனா நீ சிரிக்கறதை பார்த்தா அரை லூசா இருந்த நீ முழு லூசா மாறிட்டேனு தான் தோணுது, காரை நேரா கீழ்பாக்கத்திற்கு கொண்டு போ, உன்னை பார்த்ததும் அங்க சேர்த்திப்பாங்க, நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்"

"நீ சரியா தான் சொல்ற, உன்னை பார்க்கறதுக்கு முன்னாடி அரை லூசா இருந்த நான், உன்னை பார்த்ததும் உன் மேல முழு லூசா மாறிட்டேன், இனி இந்த லூசால பொறுக்கவே முடியாது டார்லிங், என் லூசுத்தனத்தை இதுக்குமேலவும் கட்டுப்படுத்திக்க முடியாது" என்று சொன்ன வேகத்தில் ராதியின் இதழை தன் இதழ்களால் கவ்வியவன் சில நிமிடங்களை அவளின் இதழ் சொர்க்கத்திற்குள் அனுபவித்த பின் அவளை விட்டு நகர்ந்தான்...

அவன் இதழ்களை தன் இதழ்களோடு சொந்தம் ஆக்கிக்கொண்ட ராதியோ அந்த சில நிமிடங்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவனோடு ஒன்றி போய் அவனின் அவளாகவே அவனோடு கலந்திருந்தாள்...அவன் அவளை விட்டு விலகிய பின்பும் கூட ராதியின் காதல் மயக்கம் தெளியாமல் ராதி கண்களை மூடிக்கொண்டிருக்க கண்ணன் மெல்லிய புன்னகையோடு ராதியின் கண்களின் மேல் முத்தம் பதித்து அவளை கண் திறக்க வைத்தான்....

"என் ராதி டார்லிங்க்கு என் மேல எத்தனை அன்பும், காதலும் இருக்குனு இப்போவே நான் நிரூபிச்சிட்டேன், இது போதுமா, இல்லை இன்னும் நிரூபிக்கணும்னா அதுக்கும் நான் ரெடி" என்று கண்களில் காதலின் தாபம் பொங்க கண்ணனின் இரட்டை பேச்சு ராதியை விழிக்க வைத்தது...

"போதும், இப்படி தனியா கூட்டிட்டு வந்து அத்துமீறது தான் உங்க காதலா, என் இளமையோடு விளையாடிட்டு அதை காதல்னு சொல்லிகிட்டா அது உங்க முட்டாள் தனம்"

இத்தனை தூரம் கண்ணனோடு சண்டை போட்டாலும் அவனின் முத்தத்தில் மோகத்தில் தானும் ஐக்கியமாகிவிட்டோமே என்கிற இயலாமையில் ராதி கோவத்தோடு காரின் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு அவனை பார்க்க கூட பிடிக்காதவளாய் சீட்டில் சாய்ந்தபடி கண்களை மூடிக் கொண்டாள்...கண்ணனோ காரை ஒட்டிக்கொண்டு ராதியின் காதலுக்குள் நீந்திக்கொண்டிருந்தான்...........

எழுதியவர் : ராணிகோவிந் (12-Jun-17, 12:51 pm)
பார்வை : 554

மேலே