வீடு

"தாயம்...இரு தாயம்..... முத்தாயம்.... நாத்தாயம்... ஐத்தாயம்... கூழ்"..கேலிக்கும் கூச்சலுக்கும் மத்தியில் தாயக் கட்டைகளை தூக்கி எறிந்து விட்டு எழுந்தான் குலம். கூடத்தில் சிதறிக்கிடந்த கட்டைகளை பொறுக்கிக் கொண்டிருந்தான் சின்னா..
"ஏண்டா குலம் இந்த விளையாட்டில் தோற்றத்துக்கே இவ்வளவு கோபம் என்றால் வாழ்க்கையில் சின்ன தோல்வி வந்தால் என்ன செய்யப் போகிறாய் "தோளில் கையைப் போட்டபடி அருகில் வந்து ஆசுவாசப் படுத்தினார் அப்பா பேரம்பலம்.
"இவங்கள் இப்படித்தான் அப்பா இனிமேல் நான் இவங்களுடன் விளையாடமாட்டன்" தாயப் பலகையை காலால் எட்டி உதைத்தான் குலம் ஆத்திரத்தில்..

தம்பி நுளம்புத் திரியைக் கொளுத்தி வைக்கவா என்றபடி சின்னா எழுந்து வந்து விளக்கைப் போட்டான்.. "இல்லைச் சின்னா கனவு ஒண்டு கண்ணை முழிச்சிட்டன் நீ போய்ப் படு"என்றவன் எழுந்து சென்று ஜன்னல்களை திறந்து பார்வையை வெளியில் ஓடவிட்டான்.. சாளரக் கம்பிகளுக்கிடையே புதைந்து கிடந்த முகத்தில் குளிர் காற்றுப் பட்டுச் சில்லிட்டது. வேலிக் கிளுவை மரத்திலிருந்து இரவுக்குருவி தூக்கம் கலைந்து பறந்து வந்து கருத்தக் கொழும்பான் மாமரத்தில் அமர்ந்து கொண்டது. நாற்பது வருடங்களுக்கு இதே மாமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிய ஞாபகங்கள் அவனைச் சுற்றி வந்தது..சென்ற வாரம் தான் லண்டனில் இருந்து தன் அண்ணன் சின்னாவைப் பார்க்க ஊருக்கு வந்திருந்தான் குலம்..

குலத்தின் அப்பா பேரம்பலம் ஊரில் எல்லோராலும் விரும்பப்படும் அருமையான மனிதர்..நடந்தால் மிதித்த இடத்துப் புல்லும் சாகாது அவ்வளவு மென்மையான மனிதர்.அரசாங்கத்தில் நல்ல வேலை .. அவரது மனைவி மீனாச்சி அவர் எள்ளென்றால் எண்ணெய் ஆகும் ரகம்.
நான்கு ஆண்பிள்ளைகள்.தோட்டம் துரவு வயல் வாய்க்கால் படிப்பு பள்ளிக்கு கூடம் என்று அவர்கள் வாழ்க்கை அமைதியாக கழிந்து கொண்டிருந்தது.ஊரில் உள்ள கணிசமான நில புலன்கள் பேரம்பலத்தாருக்கு சொந்தமாயிருந்தது..போனால் வேலை வந்தால் வீடு என்று ஊரில் எந்த சோலி சுரட்டிலும் புலனை செலுத்தாத நல்ல மனிதர்.. ஊரில் பெரும்பாலானவர்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவு வசதியில்லாதவர்கள்.. எவர் வந்து என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை.நெல்லோ அரிசியோ தேங்காயோ மரக்கறியையோ பேரம்பலம் வீட்டுக் கதவு தட்டினால் கிடைக்கும்,.

பிள்ளைகள் நால்வரும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் விடுதியில் தாங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள்..பாடசாலை தவணை விடுமுறைக்கு மாத்திரம் வீடு வருவார்கள் சின்னா மூத்தவன் இடையில் பாலன் குலம் கிருபா கடைக்குட்டி . விடுமுறை என்றால் கொண்டாட்டம் வீடு களை கட்டும்.. பிள்ளைகள் வீடு வர முன்பே அம்மா மீனாச்சி விதம் விதமாக பலகாரங்கள் பட்சணங்கள் செய்து வைத்துவிடுவாள்.. சனிக்கிழமை எண்ணெய்க்கு குளியல் பேரம்பலத்தார் வீட்டில் சமையல் நாலு வீட்டிற்கு மணக்கும்..
மாலையில் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு வயல்கரை வரையும் அப்பா பேரம்பலத்தாருடன் கிளம்பிவிடுவார்கள். நாற்று நடுவது களை பிடுங்குவது முதல் அறுவடை வரை வயலில் இறங்கி தயக்கமில்லாமல் தந்தைக்கு நிகராக வேலை செய்வார்கள்.
அப்போது தான் 83 இனக்கலவரம் தொடங்கியது.. வீடு வீடாக இராணுவம் நுழைந்து விசாரணை என்னு பெயரில் இளைஞர்களை கைது செய்தது ..வழக்கம் போல் பாடசாலை விடுமுறைக்கு வீடு வந்த போது இராணுவச் சுற்றி வளைப்பில் நான்கு பேரையும் கைது செய்து கொண்டு சென்று விட்டார்கள் மூன்றுமாதங்களாக பேரம்பலத்தாரும் மீனாச்சியும் பூசா முகாமும் வீடுமாக அலைந்ததில் இறுதியில் சின்னாவை மட்டும் தடுத்து வைத்துக் கொண்டு மூன்று பேரையும் விடுதலை செய்தார்கள்...
சின்னா மற்றவர்களோடு ஒப்பிடும் போது புத்திசாலி மட்டுமல்ல கடுங்கோபக்காரன் கூட தன்மானம் மிக்கவன் எடுத்தவுடன் யாருக்கும் கையை வைக்கும் ரகம்.. விசாணையின் போது அவன் நடந்து கொண்ட விதம் அவனை போராளி என்று சந்தேகிக்க வைத்து விட்டதாம் மேலும் விசாரிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்..பின்பு ஒருவாறு சிலவருடங்கள் கழித்து சின்னாவையும் விடுதலை செய்தார்கள்.ஆனால் சின்னா பழைய சின்னாவாக வீடு திரும்பவில்லை தலைமுடி எல்லாம் குட்டையாக வெட்டப்பட்டு உருவம் மெலிந்து எதையோ பறி கொடுத்தவன் போல காணப்பட்டான்.

தொடரும் ...

எழுதியவர் : சிவநாதன் (12-Jun-17, 9:24 pm)
சேர்த்தது : சிவநாதன்
Tanglish : veedu
பார்வை : 379

மேலே