கரடி சிரித்த கதை

ஒரு ஊர்ல்ல ஒரு கரடி வித்தைக் காரன் இருந்தான். அவன் கரடியை குட்டிக் கரணம் போட விட்டு காசு கேட்பான்.

காசு அவ்வளவாக வசூலாகாத நிலையில் அவனது அசிஸ்டண்ட் வேறு ஏதாவது ட்ரை செய்யலாம் என்றான்.

வித்தைக்காரனோ, பார்ப்பவர்களை சவாலுக்கு கூப்பிட்டு பெட் கட்ட வைக்கலாம் என்று முடிவு செய்து, "யாரேனும் என் கரடியை சிரிக்க வைத்தால் நீங்கள் ஆயிரம் ரூபாய் பரிசு பெறுவீர்கள். தோற்றால் நீங்கள் எனக்கு பத்து ரூபாய் கொடுத்தால் போதும்" என்றான்.

பலரும் முயன்று தோற்று பத்து பத்து ரூபாய் இழந்தனர். கரடிக் காரனிடம் பணம் குவிந்தது.

இறுமாப்பில் இருந்தான். அவனை யாரும் ஜெயிக்க முடியவில்லை.

ஒரு நாள் அந்தக் கூட்டத்தில் ஒருவன் வந்தான். "நான் உன் கரடியை சிரிக்க வைப்பேன்" என்றான்.

அவனை ஏளனமாகப் பார்த்த கரடிக்காரன், "செய்! பார்க்கலாம்!" என்றான்.

பார்வையாளன் மதுரைக் காரன். கரடியின் காதில் கிசுகிசுவென்று என்னவோ சொன்னான்.

கரடியும் பகபகவென்று சிரித்தது.

அதிர்ச்சி அடைந்த கரடிக்காரன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி வந்தது.

ஆனாலும் தோல்வியை ஏற்க விரும்பாமலும் விட்ட ஆயிரம் ரூபாயை மீண்டும் பிடிக்கவும் தந்திரமாய் " சரி! மீண்டும் சவால்! இந்தக் கரடியை அழ வைத்தால் உனக்கு பத்தாயிரம் ரூபாய். தோற்றால் நீ ஜெயித்த ஆயிரம் ரூபாய் தந்தால் போதும்" என்றான்.

மதுரைக்காரனும் சம்மதித்தான்! மீண்டும் அதே போல கரடியின் காதில் கிசு கிசுவென்று சொன்னான். கரடியும் ஓ என்று அழுதது.

கிட்டத்தட்ட மயக்கமே வந்து விட்டது கரடிக் காரனுக்கு!

பத்தாயிரம் ரூபாய் கைவிட்டுப் போனது! தோல்வி சகிக்காத கரடிக்காரன் எப்படியாவது கஷ்டமான ஒன்றைச் சொல்லி, இழந்த பத்தாயிரத்தை மீட்க வேண்டும் என்று உறுதி பூண்டான்.

"சவால்டா மதுரைக்காரா! என்னிடம் உள்ள மொத்த சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய். அதை முழுவதும் இந்த சவாலுக்காகக் கொடுக்கிறேன். நீ தோற்றால் எனக்கு பத்தாயிரம் கொடு போதும்" என்றான்.

மதுரை "சவாலுக்கு நான் ரெடி. என்ன செய்யணும்?"

"இந்தக் கரடியை எந்த துன்புறுத்தலும் இன்றி இங்கேயிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓட வைக்க வேண்டும்! முடியுமா?"

"இதென்ன பிரமாதம்? இதோ பார்" என்று வழக்கம் போல கரடியின் காதில் என்னவோ சொன்னான். கேட்ட மாத்திரத்தில் கரடி துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியது!

அதிர்ந்த கரடிக்காரன் " இந்தா பணம். முடியலை. எப்படிடா இதைச் செய்தே?" என்று கெஞ்சினான்.

மதுரைக் காரனோ அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்.

"அதுவா? முதல் கேள்வி, சிரிக்க வைக்க வேண்டும். அதன் காதில் சென்று
'தெரியுமா உனக்கு.? டேம் தண்ணீர் வீணாகாமல் இருக்க எங்க ஊர்ல்லே தெர்மகோல் போட்டு மூடினாங்க' என்றேன். கரடி கபகபவென்று சிரித்தது."

"சரி ... எப்படி அழ வைத்தாய்?"

"அதுவா! கரடிகிட்டே சொன்னேன், ' தெர்மகோல் போட்டது சரியா ஒட்டல்லேனு ஒரு PWD இஞ்சினியரை அமைச்சரு சஸ்பெண்ட் பண்ணிட்டாரு' என்றேன். கரடி அழுது விட்டது"

"அதெல்லாம் கூட சரி! கரடியை எப்படி இவ்வளவு வேகமாக ஓட வெச்சே?"

"அதுவா?
'உன்னைப் பார்த்து புதுசா ஆலோசனை கேட்க அந்த மந்திரி வந்துட்டிருக்கார்ன்னு சும்மா சொன்னேன்!"

எழுதியவர் : முகநூல் (13-Jun-17, 12:42 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 364

மேலே