நிறங்கள் இல்லாத நினைவுகள்

நிஜங்களுக்கு மத்தியில்
நினைவுகளும்..
நிறங்கள் இல்லாத
நிழல்களாய்..
நினைப்பதுண்டு...

விழா நாட்களில்..
வீழ்ந்துபோன வெற்றுப்பட்டாசுகளோடு..
விரும்பிய நிற புத்தாடைக்கு
விலக்காக..
விரும்பாத பள்ளிச்சீருடை கிடைத்திடும்...

ஆண்டுக்கு ஒரு திருவிழா
அவனுக்கோ..
ஆண்டுமுழுவதும் தெரு உலா
அந்த ஒரே பள்ளிச்சீருடையுடன்...

சில வேளைகளில்..
என் அப்பனின் வேட்டியும்..
எனக்கு மேல் சட்டையாகிவிடும்..
திருவிழா இல்லாத..
பள்ளித்துவக்க வருடங்களில்
நைந்துபோன பட்டுவேட்டி..
பளபளக்காத மேல் சட்டையாக
எங்கள் மேனிகளில்...

என் தாயின் மீதுதான்
தணியாத கோபம்..?
ஒவ்வொரு திருவிழாவுக்கும்..
புதுப்புது கலர்களில் புடவைகள்..
சாயமேற்றிக்கொள்வாள்
பழைய புடவைக்கு
புதுப்புது வண்ணம்...

உப்பு சோப்பும்..
உஜாலாவும்..
இருமடங்கு தேவைப்படும்
என் அப்பனுக்கு...
தேய்ந்துபோன
ரேகைகள் போல..
வேட்டிக்கரைகளும்
மறைந்துபோக வேண்டுமென்பான்...

சில நேரங்களில்
அம்மாவும்..
அக்காளாகி விடுவாள்..
பெண்களின் கனவுகள்
குறைவதுபோல..
தாய் புடவைகளும்
தாவணிகளாக மாறிவிடும்...

*************
சிகுவரா
செப்டம்பர் 2005

எழுதியவர் : சிகுவரா (13-Jun-17, 10:53 am)
பார்வை : 522

மேலே