மரணத்தின் வாசலில் ---கலித்துறை---

(தேமா புளிமா புளிமா புளிமா தேமா)


அன்னச் சிறகில் அனிச்ச மிணைந்து வீசும்
கன்னற் கசியுங் கனிந்த மொழிகள் பேசும்
அன்பின் நதியில் அகமும் நனைந்து வாழுங்
குன்றில் சுடருமங் குணத்தின் விளக்காய் மாதே...


காவி யணிந்தே கருணை துறந்தே தூய
ஆவி விலக வழுக்காய் மதுவில் மூழ்கி
கோவில் நுழைந்தே கொடுங்கா மவிழி கொண்டு
தாவும் கொடியோர் தடுக்கச் சிறையில் நின்றாள்...


தேயும் நிலவைத் திருடும் முகிலாய் வென்று
பாயும் புலிகள் பருவ மலரைத் தின்று
சாயும் பொழுதிற் சருகாய் உடையும் மேனி
நோயில் இளைத்து நொடியும் நடுக்கம் கொண்டாள்...


மொட்டு விரிந்த முகமோ?... வதங்கி காயம்
கொட்டு முதிரம் குடித்துச் சிவந்தே வெள்ளைப்
பட்டுத் துகிலும் புழுதிப் படிந்து கந்தல்
தட்டுங் கதவு திறந்து தளர்ந்து வந்தாள்...


தந்தை மனமோ?... தணலை விழுங்க சற்றே
சிந்தை யிறந்து சிதைந்த சிலைபோற் றாயும்
அந்நொ டியினில் அமிலம் பருகி நிற்க
வெந் விதயங் களிறு மிதித்தி றந்தே...


நீளும் இரவில் மெழுகாய்த் துயிலும் நீங்கி
ஊளி யிழந்தும் உயிரோ டுமெய்யு றைந்தும்
ஆளும் பகலின் அரசன் உதித்தெ ழுந்தும்
நாளின் விடியல் நரக இருளா யிங்கே...


தீட்டோ வியம்போற் புவியிற் றிருநி றைந்துங்
காட்டுக் குயிற்போற் கனவின் சிறக சைத்தாள்
மீட்டும் இசையின் சுரம்போல் மிதந்தாள் இன்றோ?...
வீட்டுச் சிறைக்குள் விதியாற் குரல றுந்தாள்...


கூன்மு துகென குனிந்த சிரசும் வைத்தே
ஊன்செ லுமுயிர் உறங்க துடிப்பாள் என்றே
ஞான்று முழுதுங் கணமும் நகரா தங்கே
ஈன்ற உறவோ?... விமையாய் இவளைக் காத்தே...


புண்ணிற் றுளைக்கும் புதுப்ப கழியின் றாக்கம்
எண்ணி லடங்கா ரணங்கள் இடுதற் போல
பெண்ணின் விழிக்குள் நகரும் பெருந்தே ளொன்றால்
கண்டுஞ் சிடாது கசியும் குருதி யூற்றே...


நெஞ்சம் மலரும் நினைவின் அலைக ளெல்லாம்
நஞ்சை உமிழ்ந்து நெருங்கும் நறுமு கையில்
கொஞ்சுந் துயரிற் கொடியாய் அனலில் வீழ்ந்தே
மஞ்சம் முழுதும் மரணம் மனத்தைச் சூழ்ந்தே..



(மா விளம் விளம் விளம் மா)


கலனப் பட்டிவட் கரையினில் வந்திடும் நாளி
புலனம் இணையமெங் குமுலவும் புகைப்பட மதனாற்
சலனந் தாழ்ந்தவி தயத்தையே தாக்கிடக் கொடிய
விலனம் நிழலென வியங்கிட வுலையரி சியானாள்...


சேற்றிற் சிறுகிளி சுவாசமோ?... தேங்கிடும் போது
தேற்றும் வாய்மொழி தேரென விழுத்துமீட் டாலும்
காற்றிற் கமழ்தரு நெய்தலாய் அலர்ந்திடுஞ் சொந்தந்
தூற்றுந் தோரணை நெருஞ்சிமுட் டைத்திடும் வலியே...


தெரிந்தே தவறிழைத் தோர்சுகங் கண்டிடுந் தெருவிற்
புரித லின்பிழை யாற்பலர் புழுவையே மிதித்துச்
சிரித்தே செருப்பினா லடித்திடும் வலிகளாற் றந்தை
நரிகட் பிடிபட நண்பரி டம்புகார் கொடுத்தார்...


வேள்வி நடுவினில் விறகென மூவரும் இருக்க
கேள்விக் கேட்டிடும் விசாரணை நெய்யதும் ஊற்ற
தாள்நி கரமனஞ் சாம்பலெ னவாகிடும் உயர்ந்தோர்
தாள்வீழ்ந் தெழுந்திடுங் காவலும் ஏவலின் சதியே...


கமல வதனமும் கனகமாய்ப் பொலிவினிற் சிறந்தும்
அமரர் உலகினிற் குழைத்திடும் ஆரமாய்ப் பிறந்தும்
அமுதின் சிற்பமாய் என்மனை யளிக்கும ரியணை
அமரும் மருமகள் நீயென வத்தினம் புகழ்ந்தார்...


கரும்பின் சுவையினிற் கசந்திடும் புதுமைதான் நீயோ?...
அரும்புங் கொடிகளில் அரவமா யசைந்திடு வாயோ?...
விரும்பி நாடினால் விருந்திடும் விலைமகட் டானோ?...
கருவின் கசடுதான் நீயென வித்தினம் இகழ்ந்தார்...


பரியின் காலடிப் பழமென வசையினால் நசுங்கி
உரித்தக் கோழியின் உடலென வுளமதுங் கிழிந்து
அரியோ பசியினால் அடித்ததும் புசித்திடும் உணவாய்
நெரித்த மென்னியில் நீங்கிடும் மூச்சென துடித்தாள்...


மணமே டையினில் மலர்ப்பதம் ஏறுமோ?... கடந்து
பிணமே டைதனில் பெண்மையுஞ் சாயுமோ?... நினைக்குங்
கணமே கவலையிற் கருகிடும் ஈன்றவர் உள்ளம்
மணமே வாழ்விலின் றிமழையில் மண்சுவர் வாழ்வே...


கறந்தப் பாலதிற் கலந்திடும் பலதுளி விடமாய்ப்
பிறந்த நாள்முதல் வருத்திடும் மெய்புகு பிணியாய்
இறந்தக் காலமோ?... மீள்வினைக் கோலமாய் எழுந்து
மறந்த மனத்தினை மரித்திட வைத்திட வருதே...


காலை வெண்பனி காற்றொடுங் குளிர்ச்சியில் நடந்து
மாலைத் தென்றலின் குழலிசை மதுரமும் கொடுத்த
சோலை வனமதைச் சுற்றிலும் பற்றிடுந் தீயாற்
பாலை வனமென பார்த்திடுங் கொடுமையில் வீடே...



...இதயம் விஜய்...

எழுதியவர் : இதயம் விஜய் (14-Jun-17, 1:57 pm)
பார்வை : 454

மேலே