ஸ்மார்ட் போன்

சாதாரண நோக்கியா வைத்திருந்த எனக்கு ஸ்மார்ட் போன் ஒன்று கிடைத்தது... பிற நாடுகளில் இருக்கும் சொந்த பந்தங்களுடன் வாட்ஸ் ஆப் வைபர் இல் கதைப்பதற்கு வசதியாக இருக்கும் என்று மகன் தந்தான்..அந்தக் கைப்பேசி பேரன் பாவித்து மகன் பாவித்து இறுதியாக என்னிடம் வந்தது என்பது மேலதிக தகவல்..

பரம்பரைச் சொத்துக்கள் தலை கீழாகவும் பரிமாறப்ப படலாம் என்பதற்கு இது நல்ல உதாரணம்
என் தாத்தா காலத்து வீடு எனக்குப் பின் மகனுக்கு மகனுக்குப் பின் பேரனுக்குப் போகும் ..ஆனால் இந்த கைப்பேசி கைக்கடிகாரம் ஐ பாட் சமாச்சாரங்கள்
மட்டும் பரம்பரை பரமபரையாய் தலைகீழாகத்தான் கையளிக்கப்படும் ..அதாவது இளையவர்களில் இருந்து முதியவர்களுக்கு ...

ஸ்மார்ட் போனை எப்படிப் பாவிப்பதென்பதை என் மகனிடம் கேட்டித் தெரிந்து கொள்ள ஏனோ என் ஈகோ விடவில்லை ..இதற்கு நான் ஒரு ஒய்வு பெற்ற தலைமை வாத்தியார் ஊர்ச்சங்கத் தலைவர் என்பது கூட காரணமாக இருக்கலாம்.. எத்தனையோ பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்த அறிவு இந்த தொழிநுட்பத்தை கற்றுத்தராதா என்ற இறுமாப்பில் எதுவும் கேட்காமல் இருந்து விட்டேன் ..

எது எப்படியோ பழைய நோக்கியோவை வைத்து நோண்டிக் கொண்டிருந்த எனக்கு ஸ்மார்ட் போனை சட்டைப் பாக்கட்டில் வைத்திருப்பது என் தோற்றத்தையும் ஸ்மார்ட் ஆக காட்டியது என்பதை மறுக்க முடியாது ..பழைய போனை மனைவியிடம் கொடுத்து விட்டு புதிய போனை பாவிக்க தொடங்கினேன்..

முதன் முதலாக போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சந்தைக்கு கிளம்பினேன்..கீரைக்கடைப்பக்கம் போய்க்கொண்டிருக்கும் போது யாரோ அழைத்தார்கள் அப்படியே ஒரு ஸ்டயிலாக போனை வெளியில் எடுத்தேன் ஆனால் பேசுவதற்குரிய பட்டனை அழுத்தியும் பேசும் வழியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது ..
நான் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கு போதே பக்கத்தில் வந்த அரிசிக்கார ஆறு முகம் " என்ன வாத்தியார் யாரோ தொடர்ந்து அடிச்சுக்க கொண்டே இருக்கினம் போல என்று என் சங்கட நிலையை பார்த்து நக்கலாக பேசி வீட்டுக் கடந்து செல்ல ஒரே வெட்கமும் அவமானமுமாய் வந்து விட்டது..இருந்தாலும் காட்டிக் கொடுக்காமல் "தம்பி இந்தியா சிறிலங்கா மேட்ச் நடக்குது எல்லே அதுதான் ஸ்கொர் கேட்க ஆளில்லாம எனக்கு அடிக்கிறாங்கள் ..வேற வேலை இல்ல.அவங்க அங்க அடிக்க இவங்கள் வேலை வெட்டி இல்லாத சோம்பேறிப் பயலுகள் எனக்கு அடிக்கிறான்கள்": என ஒரு படி கூட்டி நான் அடிச்ச சிக்ஸர் இல் அரிசி ஆறுமுகம் அடையாளம் இல்லாமல் நகர்ந்து விட்டார்...அப்பாடா ஒரு மாதிரி அடுத்த அழைப்புக்கு முன் ஒருவாறு ஸ்விச் ஆப் செய்து காற்சட்டைப் பையில் போனை ஸ்மார்ட்டாய்த் திணித்து விட்டு வாங்குவதை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

" உங்களுக்கு எத்தினை தரம் தான் call எடுக்கிறது கொத்த மல்லி சீரகம் மிளகு சொல்லிவிட மறந்து போனேன் மிளகாய் வறுக்கும் போதுதான் ஞாபகம் வந்தது"..இரைந்து கொண்டே வாசலுக்கு வந்தாள் மனைவி

"அடியே உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போது போன் எடுக்காத என்று எத்தனை தடவை சொல்றது" என்று ஒரு வெற்றிகரமான சமாளிப்புத் தாக்குதலை தொடுத்தேன் . அவளும் விட்ட பாடில்லை "சரி யார் சொன்னது உங்களை வண்டி ஓட்டும் பொது போன் எடுக்கச் சொல்லி மெசேஜ் கூட அனுப்பி இருந்தேனே அதையும் பார்க்கவில்லையா" கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைந்தெடுத்தாள் மனைவி ..

"உள்ள தலையிடிக்குள்ள உன்ரை மெஸேஜ் வேற" என்று எரிந்து விழுந்து விட்டு ஓரமாக போய் கூடத்தில் உட்கார்ந்த எனக்கு ஸ்மார்ட் ஆக இருப்பதை விட டம்ப் ஆக இருப்பதே வசதியாக இருக்கும் எனப்பட்டது...... .என்ன உங்களுக்கும் இப்படியான அனுபவம் இருக்கலாம் அல்லவா ??

எழுதியவர் : சிவநாதன் (15-Jun-17, 10:07 pm)
சேர்த்தது : சிவநாதன்
Tanglish : smaart phone
பார்வை : 448

மேலே