நான் பார்த்த சென்னை

மக்கள்
அலைகடலோடும்
மாநகர
சென்னையில்..
நவீனமயம் ஏராளம்
ஆனாலும்
ஆங்காங்கே
காண முடிகிறது..
வறுமையின் தாராளம்

பிச்சை கேட்கும் சிறுவன்
பிழைப்பு நடத்தும்
தெருவோர கலைஞன்
மூட்டை தூக்கும் தாத்தா
பாசிமணி விற்கும் சிறுமி
குப்பை பொறுக்கும்
இளைஞன்
கையேந்தும்
ஊனமுற்றோரின் முனகல்கள்
பெட்டிக்கடையை
அண்டிப் பிழைக்கும் பாட்டி
பிஞ்சு போன செருப்புக்காக
ஏங்கி
வெயிலில் வாடும்
செருப்பு தைக்கும் தொழிலாளி
வீதிதோறும் அலையும்
வேலையில்லாப் பட்டதாரி

ஒருபக்கம்
நவநாகரிக உடையில்
யுவதிகள்
அழகழகாய்..
மறுபக்கம்
கிழிந்து போன
கந்தல்உடையில்
குழந்தைகள்..
சூரியஒளியில்
நொறுங்கிய
கிளிஞ்சல்களாய்..

மெரினாவில்
வீசும் காற்று
காதலர்கள் கொண்டுவரும்
ரோஜாவின் மணத்தை
மட்டும் சுமப்பதில்லை..
மீனவனின் வலியையும்
வலைமுடை மணத்தையும்
சேர்த்தே சுமக்கிறது..

வறுமை
தோய்ந்த முகத்தினோடும்
விஷயம் சொல்லும்
தெளிவினோடும்
கனவுகள் கலைந்த விழிகளோடும்
கடலை விற்கும் சிறுவன்
அங்கே..
ஞானம் கொடுக்கிறான்
வாழ்க்கையின் இடைஞ்சல்கள்
பற்றி..

வானுயர கட்டிடங்கள்
அருகே
வண்ணம் இழந்த
இடிந்த வீடுகள்
கூரை வேய்ந்த குடிசைகள்
நடைபாதை குடும்பங்கள்..

இதைக் காணும்
விழிகள்
நசிந்து போன
சராசரி வாழ்க்கையை
வெறுக்கிறது..

பின்னணியில்
பாரதியின் வரிகளை
கோர்க்கிறது
“வல்லமை தாராயோ
இந்த மானிலம்
பயனுற
வாழ்வதற்கே”
என்று.

எழுதியவர் : சித்தார்த் மணிவண்ணன் (16-Jun-17, 3:14 pm)
சேர்த்தது : சித்தார்த்
Tanglish : naan partha chennai
பார்வை : 68

மேலே