செய்தார்க்கே செய்த வினை

யாசகன் ஒருவன் வாழ்ந்தான் ஒரு ஊரிலே...
தினமும் வீடுதோறும் யாசகம் பெற்று அதை உண்டு வாழ்ந்தான் தன் வாழ்விலே...

அரசன் ஒருவன் வாழ்ந்தான் அவ்வூரிலே...
தன் பரிவாரங்கள் சூழ, பகலெல்லாம் காட்டிற்குச் சென்று உயிர்களை வேட்டையாடி வாழ்ந்தான் தன் வாழ்விலே...

யாசகன் எப்போதும் ஊரில் வீடுவீட்டுக்கு யாசகம் பெறச் செல்கையில் சில வாக்கியங்களை உரக்க உச்சரித்துக் கொண்டே செல்வான் தானுணர்ந்த ஞானமாய்...
அவ்வாறு அன்றிரவு அரசன் வீட்டருகே செல்கையில், " செய்தார்க்கே செய்த வினை. ", என்ற வாக்கியத்தை அடிக்கடிச் சொல்லிக்கொண்டே இருந்தான்...

அதைக்கேட்டு எரிச்சலடைந்த அரசனின் மனைவி, " இவன் யாரைக் குறித்துச் செய்தார்க்கே செய்த வினை என்று சொல்கிறான். வர வர இவன் தொல்லை தாங்க முடியவில்லை. இதற்கொரு முடிவு கட்டியே ஆகவேண்டும். ", என்றெண்ணியவளாய்,
தனது வீட்டு அறுசுவை உணவை வைத்து அதில் விடம் கலந்து யாசகனுக்கு அளித்தாள் பாவியாய்...

அதைப் பெற்றுக் கொண்ட யாசகன் ஓரிடத்தில் தனியே அமர்ந்தவனாய், " இராஜா வீட்டு உணவு அறுசுவை உணவாக இருக்கும். அதை மற்ற உணவோடு சாப்பிட்டால் ருசி கெட்டுவிடும். ஆதலால் இராஜாவீட்டு உணவைப் பிறகு சாப்பிடலாம். ", என்று எண்ணியவன், அரசன் வீட்டு உணவை ஒரு சிறு மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு மற்ற வீட்டுகளில் வாங்கி வந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு படுத்துத் தூங்கினான் கவலையேதுமின்றி...

பொழது புலர்ந்தது.
விழித்தெழுந்த யாசகன் தன்னிடம் தான் அரசன் வீட்டு சாப்பாடு உள்ளதே என்று காட்டிற்குச் சென்று ஆற்றில் குளித்துவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான்...
அப்போது வேட்டைக்குச் சென்ற அரசன் பசியும், தாகமும் மேலிட களைத்துப் போனவனாய் அம்மரத்தடியை வந்தடைந்தான் தான் பரிவாரங்கள் சூழ...

அரசன் மிகுந்த பசியில் அவதிப்படுவது அவன் முகத்தில் வெளிப்பட்டது.
அதைக்கண்ட யாசகன் அரசனிடம், " இதைச் சாப்பிடுங்கள் அரசே. உங்கள் வீட்டு உணவு தான். ", என்று உணவு மூட்டையைக் கொடுத்தான் அன்போடு...

உணவு மூட்டையைப் பிரித்துப் பார்த்த அரசன் அதில் தான் நேற்றிரவு சாப்பிட்ட அத்தனை உணவுகளும் இருப்பதைக் கண்டு தன் வீட்டு உணவு தானென்று திருப்தியடைந்து அதை உண்டான்...

உணவை உண்டு முடித்த அரசனின் நெஞ்சைக் கவ்வியது விடம்..
நிலைகுலைந்து தலை சாய்ந்து அவ்விடத்திலேயே உயிர் நீத்தான் அரசன்...
அதைக் கண்ட அமைச்சர் யாசகனிடம் விபரம் கேட்க, " நான் ஏதும் அறியேன். செய்தார்க்கே செய்த வினை. ", என்றிட, அவ்வாக்கியத்தின் குறிப்புணர்ந்த அமைச்சர், அரசனின் மனைவியிடம் சென்று, " நேற்றிரவு அந்தப் பிச்சைக்காரனுக்கு உணவளித்தீர்களா?. ", என்று கேட்க, உடனே அரசனின் மனைவி, " செத்தானா அந்த பரதேசி? அவன் சாகட்டும்னுதான் உணவில் விடம் கலந்து கொடுத்தேன். ", என்றாள்...
அதற்கு அமைச்சர், " யாசகன் சாகவில்லை. செத்தது உன் கணவன் தான். ", என்று. நடந்ததைச் சொன்னார்...
அதைக்கேட்ட அரசனின் மனைவி, " அவன் அப்போவே சொன்னானே செய்தார்க்கே செய்த வினையென்று. கேட்டானா? நான் செய்த செய்த செயல் என் கணவனின் உயிரையே பறித்துவிட்டதே. ", என்று கதறி அழுதாள்...
அழுதென்ன பயன்? இறந்த காணவன் திரும்பி வந்திடவா போறான்?...

இந்தமாதிரி தான் நம்மில் பலர் மூடர்களாய் இருந்துவிடுகிறோம்.
" செய்தார்க்கே செய்த வினை. ", என்பதை அறியாதவர்களாய் பல தீய செயல்களைப் பிறருக்குச் செய்கிறோம். பின்பு அதை நமக்கே கெடுதலாய் முடிய வருந்துகிறோம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Jun-17, 4:46 pm)
பார்வை : 683

மேலே