சிலை போல ஏனங்கு நின்றாய்

ஜம்புலிங்கம் சரியான கறார் பேர்வழி ..பேசும் போது கூட யோசித்து யோசித்து வார்த்தைகளை எடுத்து வெளியே விடுவார் . தன்னைத்தவிர எவருமே புத்திசாலிகள் அல்ல என நினைத்து தானாகவே மற்றவர்களில் இருந்து ஒதுங்கியிருக்கும் திமிர் பிடித்த படித்த முட்டாள்.

புனிதம் நேர் எதிர் மாறு, கலப்பான மனுஷி, விழுந்தடித்து யாருக்கும் உதவி செய்யும் மனப்பக்குவம், யார் என்ன வந்து கேட்டாலும் இருந்தால் கொடுத்து உதவுவாள்.ஊரில் நல்லதோ கெட்டதோ முதல் ஆளாக அங்கு ஆஜராகி விடுவாள்

புனிதத்துக்கும் சம்புலிங்கத்துக்கும் எப்படித் திருமணப் பொருத்தம் அமைந்ததோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்..

முப்பதுவருட திருமண வாழ்க்கையில் ஆசையாய் ஒரு ஐந்தாறு புடவை கூட மனைவிக்கு வாங்கிக் கொடுத்திருப்பாரோ தெரியாது இந்த சிடு மூஞ்சி மனிதர் ஜம்புலிங்கம்..கோயிலோ குளமோ சினிமாவோ திருமணமாகி தன் கணவனோடு சென்ற நாட்களை கைவிரல் விட்டு எண்ணிக் கொள்ளலாம் ..
ஆனாலும் யாருக்கும் தன் மனக் கஷ்டங்களை காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருந்தாள் புனிதம்..

ஜம்புலிங்கம் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்த பொது திரேசா என்ற ஆசிரியையும் பணிக்கு சேர்ந்திருந்தாள்..இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்து காலப் போக்கில் காதலாக மாற கதை எப்படியோ ஜம்புலிங்கத்தின் பெற்றோர்கள் காதுக்கு எட்ட தங்கள் சைவக் குடும்பத்துள் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை மருமகளாக எடுக்க துளி கூட விருப்பமில்லாதவர்கள் அவசர அவசரமாக மாமன் மகள் புனிதத்திற்கு நிச்சயம் பண்ணிவிட்டார்கள்..

ஒரு நல்ல முகூர்த்தத்தில் ஜம்புலிங்கத்தின் மனைவியானாள் அவனை விட பன்னிரண்டு வயது குறைந்த புனிதம்.. மனத்தில் திரேசாவைச் சுமந்து கொண்டு தன் மனைவி புனிதத்துடன் வேண்டாவெறுப்பாக வாழத் தொடங்கினார் ஜம்புலிங்கம் .எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது குறை சொல்வது என்று தன் கணவனிடம் இருந்து வெறுப்பையும் வேதனைகளையும் மட்டும் சம்பாதித்துக்கொண்டிருந்த புனிதம் பிறந்த வீட்டில் வாய் திறந்து தனது குடும்பத்துப் பிரச்சனைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்வதில்லை.

அதிகம் அனுபவம், வாழ்க்கை, குடும்பம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாத ஒரே ஒரு செல்லப் பிள்ளையான புனிதத்துக்கு திருமணமாகி சில மாதங்கள் கழித்து அவளின் பெற்றோர் விமானக் குண்டு வீச்சொன்றில் காயம் பட்டு விட தனது நிலை மேலும் அவர்களை மேலும் காயப்படுத்த வேண்டாம் என்று எல்லாத் துன்பங்களையும் தனக்குள் புதைத்துக் கொண்டு எதுவுமே நடக்காதவள் போல் தன்னை ஆக்கிக் கொண்டு நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தினாள் புனிதம்.

இரண்டு வருடங்களில் அவர்களுக்கு அருண் பிறந்தான்..அருணோடு மகிழ்ச்சியாக புனிதத்தின் ஒவ்வொரு நாளும் கழிந்தது.ஜம்பு லிங்கத்தின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை அதே சிடு மூஞ்சித்தனம் எடுத்தெறிந்து பேசுவது உறவினர்களுக்கு முன்னால் மனைவியை அவமதிப்பது அதிகாரத்தனம் செய்வதென்று அவன் தன் குணத்தை மாற்றிக் கொள்ளாமலே இருந்தார்.

ஆனால் புனிதமோ குழந்தையுடனும் வீட்டையும் பராமரித்து தையல் வேலை மரக்கறித் தோட்டம் ஆடு மாடு கோழி என்று தன்னை எப்போதும் சுறு சுறுப்பாகவே மாற்றிக் கொண்டாள்..ஊரில் எல்லோருக்கும் புனிதத்தில் அன்பும் மரியாதையும்.. அவளது முயற்சியிலும் கடின உழைப்பிலும் தென்னையும் மாவும் பாலாவும் வாழையும் என்று வீட்டுக்குப் பின் கொல்லை புறம் சோலையாக மாறி விட்டிருந்தது.இருந்தாலும் ஜம்புலிங்கம் அவளை ஒரு நாள் கூடப் பாராட்டியது கிடையாது.

காலையில் பரபரப்பாக பள்ளிக்கு கிளம்புவது பள்ளி முடிந்து வந்து சாப்பிட்டு விட்டு அன்றைய பத்திரிகைகளை ஒன்றும் விடாமல் படிப்பது தொலைக் காட்ச்சி பார்ப்பது குறட்டை விட்டு நன்றாக தூங்குவது மட்டும் தான் ..

மாதம் ஐயாயிரம் சம்பளம் சில தடவை அதில் ஒரு ஐநூறு ரூபாஎப்போதாவது புனிதத்தின் கையில் கொடுப்பான் சிலசமயம் அதுவும் இல்லை அவளும் எதுவும் கேட்பதுமில்லை.தன் உடலை வருத்தி உழைத்து தன்னையும் குடும்பத்தையும் கவுரவமாக பார்த்துக் கொள்வாள்..

அருண் வளர வளர வீட்டில் தன் அம்மா அப்பா இடையில் உள்ள இடைவெளியை உணரத் தொடங்கினான்..தாயில் அளவற்ற பாசம் வைத்தான்.. எவ்வளவு பேசியும் தந்தையின் இயல்பான குணத்தை மாற்றமுடியாது என உணர்ந்தான் நன்றாக படித்துப் பட்டம் பெற்றான் . தான் விரும்பிய பெண்ணை தன் தாயின் சம்மதத்துடனும் தந்தையின் அரை குறை விருப்புடனும் திருமணம் செய்தான் ..

அருணின் மனைவி புனிதத்தின் மகள் போல் அன்பாக மாமியாருடன் இருந்தாள்..மகன் மருமகளுடன் புனிதம் மகிழ்ச்சியாக நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் போது அருணுக்கு அமெரிக்காவில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு நல்ல வேலை கிடைத்தது ..நாட்டுப் பிரச்சனையும் மோசமடைந்து கொண்டிருக்க ஜம்புலிங்கமும் புனிதமும் அருணை அமெரிக்க வேலையை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர் ..

அருண்அமெரிக்காவந்துஒருவருடம்இருக்கும்புனிதத்திற்கும்ஜம்புலிங்கத்திற்கும் பேரக்குழந்தை கிடைத்த செய்தி கிடைத்தது .இருவரையும் அமெரிக்க வரும்படி அருணும் மனைவியும் கேட்க ஜம்புலிங்கம் தன்னால் முடியாது நீ வேணுமென்றால் போ என்று இருந்து விட்டார்..

புனிதமும் எவ்வளவோ கெஞ்சியும் அந்தாள் சற்றும் மசியவில்லை ...வயதும் போய் விட்டது இதில் ஏதாவது நடக்கமுன் தன் பேரக் குழந்தையை பார்த்துக் கொஞ்சி குலாவி வரவேண்டும் என்ற ஆசை மேலிட இறுதியில் புனிதம் அமெரிக்காவிற்கு புறப்பட்டாள் .

போகும் போது ஜம்புலிங்கத்து சமையல் சாப்பாடு மற்றும் வீட்டை தோட்டத்தை பராமரிக்க பணம் கொடுத்து ஒரு வேலைக்கார அம்மாவை நிர்வகித்து விட்டு போயிருந்தாள் புனிதம் .அவள் போய் ஒரு கிழமையில் ஜம்புலிங்கம் ஏதோ ஒரு சிறு குறை கண்டு திட்டித் தீர்த்தத்தில் அந்தம்மாவும் அங்கு போவதில்லை..தானே எல்லாவறையும் தன் தலையில் போட்டுக் கொண்டு வீட்டை வளைய வளைய வந்தார் ஜம்புலிங்கம்..

புனிதம் இருக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எப்போதும் அங்கு செல்வார்கள் புனிதத்தை ஊரில் எல்லோருக்கும் பிடிக்கும் என்ற ஒருகாரணத்திற்காகவே..ஆனால் இப்போது ஜம்புலிங்கம் அந்த வீட்டில் தனியே இருக்க அவரை அங்கு சென்று யாருமே எட்டிப் பார்ப்பது கூட இல்லை..

இப்படி இருக்கும் போது ஒரு நாள் மலேரியாக் காய்ச்சல் வந்து படுத்து விட்டார் அமெரிக்காவில் இருந்து ஒரு சில நாட்களுக்கு முன் அருணும் புனிதமும் கதைத்த போது கூட தனக்கு காய்ச்சல் என்பதைக் குறிப்பிடவில்லை வழக்கம் போல இரண்டொரு வார்த்தைகளோடு தொலைபேசியைத் துண்டித்து விட்டார்.

காய்ச்சல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருந்து மாத்திரைக்கும் குணமாக வில்லை.
எழுந்து போய் ஒரு குடி நீர் வைத்துக் குடிப்பதற்கு கூட அவர் உடல் நிலை இடம் கொடுக்கவில்லை ..யாருக்கும் தொலைபேசி எடுத்து உதவி கேட்கவும் அவரது வறட்டு கவுரவம் இடம் தரவில்லை ..
நாளுக்கு நாள் உடல் நிலை மோசமாக கூடத்தில் நடுவில் பாயைப் போட்டு படுத்து விட்டார் எப்படிவாது யார் கண்ணிலும் தான் படவேண்டும் என்ற காரணத்திற்ற்க்காகவோ .....
காலையில் அரிசிக் குறுணல்களுக்காக வாசல் வரும் கோழிகளும் குருவிகளும் கூட புனிதம் வெளியே போன நாளில் இருந்து அந்தப் பக்கம் வருவதில்லை காரணம் இந்த ஆள் தான் பரம கஞ்சன் ஆச்சே.

நோயின் தாக்கம் தனிமை வெறுமை பலவீனம் எல்லாமே அவரைச் சிறிது சிறிதாக சிந்திக்க வைக்க தொடங்கியது .

பசியுடனும் களைப்புடனும் படுத்திருந்த ஜம்புலிங்கத்தின் மனதில் பழைய நினைவுகள் வந்து போயின .. சாப்பாடு நேரம் சற்று தாமதம் ஆகி விட்டதென்றோ அல்லது கறியில் உப்பு காரம் குறைந்து கூடி விட்டதென்ற காரணத்திற்காக புனிதத்தின் முகத்தின் முன் வீசி எறியப்பட்ட சோற்று கோப்பைகள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து போயின..
தான் உண்ணும் வரை பரிமாறிவிட்டு இறுதியாக உண்பவள் சாப்பிட்டாளா இல்லையா என்று ஒரு நாள் கூட கேட்டதில்லை என நினைத்து வருந்தினார்

ஒரு சின்ன தலைவலிக்கே தாம் தூம் என்று வீட்டை இரண்டு படுத்தும் தான் ஒரு நாள் புனிதம் வயிற்று வலி என்று கூடப் படுக்காமல் தனக்கு அன்பாக சமைத்துப் போட்டது நினைவுக்கு வந்தது.

நோயின் உபாதையும் மனச்சாட்ச்சி எனும் கூரிய ஆயுதமும் மாறி மாறி அவரைக் குத்திக் குடையத் தொடங்கியது வாய் விட்டு அழ தொடங்கினார் ஜம்புலிங்கம் இருந்தாலும் அந்த நள்ளிரவில் அவர் அழுகைச் சத்தம் அந்த வீட்க்குள் மட்டும் அடங்கிப் போனது ..கைத் தொலைபேசியை எடுத்து யாருக்காவது அழைக்க முயற்சிக்க கண்கள் இருண்டு இலக்கங்கள் கூட தெளிவற்று தெரிந்தன ..மரண பயம் கொஞ்சம் கொஞ்சமாக ஜம்புலிங்கத்தை
ஆரம்பிக்கத் தொடங்கியது..

பசியும் மயக்கமும் தழுவ மெல்ல மெல்ல கண்களை மூடிக்கொண்டார்..கனவில் ஏதோ சத்தம் கேட்பது போல் பிரமை .. எழுந்து பார்க்க உடல் இடம் தரவில்லை வாசலில் நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது..

ஆட்டோவில் இருந்து இறங்கி வந்த புனிதம் இந்த நள்ளிரவில் வாயில் கதவு பூட்டப்படாமல் இருப்பது பார்த்து அதிர்ந்தாள் ..உள்ளே எந்த வெளிச்சமும் இல்லை கூடத்தின் தரையில் வெறும் பாயில் ஜம்புலிங்கம் ஒட்டி உலர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் ..

பதை பதைத்து என்ன ஆச்சு எழுந்திருங்கோ என்று அவள் எழுப்ப கண்களைக் கசக்கிக் கொண்டு மெல்ல எழுந்து உட்காரமுடியாமல் உட்கார்ந்து மங்கலான கண்களூடே புனிதத்தை பார்த்தார் தான் காண்பது கனவா அல்லது நனவா என புரியவில்லை "எப்படி நீ இங்கை" அவரின் குரல் தள தளத்தது .. "மூண்டு நாலு நாளா ஒரே கெட்ட கனவு நீங்கள் வேற போன் எடுக்கவும் இல்லை மனம் சரியில்லை உடனே வெளிக்கிட்டு வந்திட்டேன்" என்றாள் புனிதம்.

புனிதத்தின் கால்களைக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழ தொடங்கினார் ஜம்பு லிங்கம். இவ்வளவு காலமும் புனிதத்துக்கு செய்த பாவத்தைக் கழுவிய அந்தக் கண்ணீர் அவள் கால்களைத் தாண்டி ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. எதுவுமே பேசத் தோன்றாத புனிதம் சிலை போல அங்கு நின்று கொண்டிருந்தாள்..

எழுதியவர் : சிவநாதன் (17-Jun-17, 11:50 pm)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 388

மேலே