அப்பாவின் கைப் பை

அப்பா மறைந்து வருடங்கள் இருபத்து இரண்டு ஆகிறது...

அதற்கு மூன்று வருடம் முன் அம்மா.. அம்மா போனபின் அப்பா மிகவும் சோர்வடைந்து விட்டார்... ஏதோ சாப்பிடுவது, ஏதோ இருப்பது.. எப்பொழுதும் ஒரு கைப் பை வைத்திருப்பார்... ரெக்ஸினில் 8" x 5".

அந்தப் பை என்னிடம்தான் இருக்கு... நான் என் அலமாரியை சுத்தம் செய்யும் போதெல்லாம் கண்ணில் படும்.. எனக்கு அதில் அப்பாவின் பழைய காது கேட்கும் கருவி இருக்கும் என்பது தெரியும்.. அதைத் தவிர ஒரு வங்கிக் கணக்குப் புத்தகம்.. என்னுடன் இணைந்த கணக்கு என்பதால் அதில் இப்பொழுது பணம் ஒன்றும் இல்லை என்பதும் தெரியும்...

நேற்று என் அலமாரியை சுத்தம் செய்யும் போது, அந்தப் பை என் கண்ணில் பட அதில் என்னதான் அப்பா வைத்திருப்பார் என்ற எண்ணம் எழ, பொறுமையாய் பார்க்க ஆரம்பித்தேன்...

நான் சொன்னது போல் அந்த காது கேட்கும் கருவி.. எடுக்கும்போதே தவறி கீழே விழ, சில பிளாஸ்டிக் பகுதிகள் உடைந்தது... டேப் எடுத்து முதலில் ஒட்டினேன்... அந்த கருவிக்கு பயன்படுத்த இரண்டு கூடுதல் வயர்கள் இருந்தது...

5 டல்கோலக்ஸ் மாத்திரைகள்
17 சிறிய மாத்திரைகள் (BPக்கு என நினைக்கிறேன்)
1 தீப்பெட்டி... தொடர் புகை பிடிப்பவரான அப்பா அதை விட்டு பல வருடங்கள் ஆகிறது... தீப்பெட்டி எதற்கு வைத்திருந்தார் என்று தெரியவில்லை.. சிகரட் எதுவும் இல்லை...
10 பைசா ஒன்று, 5 பைசா ஒன்று
ஒரு சீப்பு
ஒரு சூப்பர் மாக்ஸ் பிளேடு, ஒரு ஷேவிங்க் புருஷ்
(அப்பா எப்போதும் தன்னை சீராக வைத்துக் கொள்ள முயல்வார்)
அவர் பேரனின் முதல் வகுப்பு ஐ.டி. கார்டு
பிள்ளைகள், நெருங்கிய உறவினர் விசிடிங்க் கார்டுகள்...
ஒரு பேனா
ஒரு தெர்மா மீட்டர்..
இது தவிர ஒரு பர்ஸ்...

பர்ஸில்... ஒரு ஒரு ரூபாய், ஒரு ஐம்பது காசு, ஒரு இருபத்தைந்து காசு..
சில பணம் கட்டிய பில்
வங்கியில் பணம் கட்டிய சலான்கள்...
ஒரு காகிதத்தில் வீட்டு முகவரி....

இந்தப் பைதான் அப்பாவின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தது... இதிலிருந்துதான் மருந்து எடுத்து சாப்பிடுவார்.. ஷேவ் செய்வார், தலை வாருவார்...

என்னுடந்தான் அந்த பை இருக்கிறது கடந்த 22 வருடங்களாக... நானும் பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்..

நேற்று அதைப் பிரித்துப் பார்த்த போது பழய வாசனையுடன், மனமும் கனமானது... நெஞ்சம் பட படத்தது...

அ ... ப்... பா......!!

----- முரளி

எழுதியவர் : முரளி (18-Jun-17, 10:13 am)
சேர்த்தது : முரளி
Tanglish : appavin kaip bai
பார்வை : 245

மேலே