Appa

அப்பா ,

எனக்கு உருவம் தந்தவரே… என் உணர்வுகளுக்கு சொந்தம் கொண்டாட நினைப்பவரே.. உன்னை பற்றி எழுத நிறைய உள்ளது. ஆனால் என் வார்த்தைகள் உன்னை காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சியே இது நாள் வரை மௌனம் சூடினேன். ஆனால் அது எத்தனை பெரிய பிழை என்று கண்டு கொண்டேன் .

இந்த நாள் வரையில் எனக்கு பயிற்சியம் இல்லாத ஒரு அந்நிய நபராய்தான் உன்னை பாத்திருக்கிறேன் . உன்னை பற்றி அம்மாவிடம் தான் அதிகம் கேட்டு அறிந்திருக்கிறேன் . இன்றும் நினைவு உள்ளது , ஏதோ ஒரு சண்டையில் சுடு சொற்கள் இடம் மாற இருவரும் காயப்பட்டோம். அன்று நான் அம்மா மடி சாய்ந்து கேட்ட கேள்வியும் அதுக்கான பதிலும் இன்றும் இதயத்தை பிசைகின்றது. “ஏன் மா அப்பாக்கு என்ன பிடிக்கல” “கண்ணம்மா அப்பாக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். உனக்கு தெரியுமா ? நீ பொறந்ததும், அப்பா மொதல உன்ன தூக்கலா , உன் கால மட்டும் தொட்டு பாத்துகிட்டே இருந்தாரு . அவருக்கு பயம், எங்க அவர மாதிரியே அவருக்கு பிறக்கிற குழந்தையும் மாற்று திறனாளியாய் பொறந்திடுமோ என்று. அதான் நீ பொறந்ததும் உன் காலையே தடவி பார்த்து உன் உள்ளங்காலுல முத்தம் தந்தாரு. அப்போ நான் அவர பாத்தேன், அவர் கண் ஓரம் ஒரு சின்ன கண்ணீர் துளி எட்டி பாத்துச்சு, ஆனா
மறைசிக்கிட்டாறு ”. இதை கேட்டதும் என் இதயத்தில் இடி இறங்கியது .

தந்தைக்கு தன் பிள்ளை மேல் பாசம் இல்லை என்ற வலியை காட்டிலும், பாசம் இருந்தும் ஒரு பயத்தினால் வெளிபடாமல் இருப்பது மிக பெரிய வேதனை. பாசம் இல்லை என்று தெரிந்தால் மனம் எதிர் பாக்காது.

‘வானம் அளவு நேசம் இருந்தும்
ஒரு தூறல் கூட சிந்தவில்லை’

ஏமாறும் போது எல்லாம், மனம் குழப்பம் அடையும். இன்று கிடைக்கும் , நாளை கிடைக்கும் என்று முட்டாய்க்கு ஏங்கும் குழந்தை போல் உன் அன்பிற்கு ஏங்கினேன். எனக்கு மிஞ்சியது எல்லாம் உன் வசைகள் தான் . அப்போது எனக்கு தெரியவில்லை, கண்டிப்பும் ஒரு விதமான அன்பு என்று. நீ ஓடி கொண்டே இருந்தாய் அப்பா, சற்றும் திரும்பி பாராமல். எங்கள் தேவை பூர்த்தி செய்ய தான் ஓடினாய், எங்களுக்காகதான் ஓடினாய், காலில் செருப்பும் இல்லாமல் ஓடினாய்.

ஒவ்வொரு சனி கிழமையும் நீங்கள் அலுவலகத்தில் இருந்து மதியம் வெய்யிலில் வருவீர்....காலில் செருப்பு அணிந்ததில்லை....அப்போது நம்மிடம் வண்டியும் இல்லை, எங்களுக்கு வயதும் இல்லை....வெறும் காலில் நீங்கள் வெயிலில் வரும் போது ஓடி சென்று குடை பிடித்து நிழலில் அழைத்து வர துடிக்கும், அதே நேரம் ஏதோ தடுக்கும்... உங்களை செருப்பு அணிவிக்க தாய் எவ்வளவு போராடினால் என்று எனக்கு தெரியும்... தெரியும் அப்பா உன் வேதனை, புரியாமல் தான் போனது.

எங்கள் தேவை பூர்த்தி செய்ய உன் தேவை சுருகினாய். ஏன் என்று வினவிய பொழுது , எங்கள் மீது இருக்கும் பாசத்தை வெளிபடுத்த தெரியாமல் தாய் மீது குற்றம் சொன்னாய். “நீங்க எல்லாம் அளவுக்கு அதிகமா செலவு பண்றீங்க, யாராவது ஒருத்தராவது சிக்கனமாய் இருக்கணும்ல” இந்த பதில் கேட்ட பொழுது எனக்குள் ஒரு குற்ற உணர்வு எழுந்தது. ஐய்யகோ என்னால் என் தந்தைக்கு இத்தனை பெரிய செலவா? என்று , ஆனால் மன்னித்து விடு அப்பா நீ சொன்ன வார்தைக்குமுன் இந்த பாசம் அடிபட்டு போனது .

நான் அப்போது மூணாவது படித்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் என் நண்பர்கள் பள்ளிகூடத்திற்கு தன் அப்பாக்களை அழைத்து வருவார்கள் . நானும் ஆசைப்பட்டேன். உன் விரல் பற்றி சாலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே கதை பேசி, பாடம் படிக்கவேண்டும் என்று. ஆனால் ஒரு நாளும் நீ என் பள்ளிகூடத்திற்கு வந்ததில்லை. அப்போதும் அம்மா தான் என் கேள்விக்கு விடையாய் நின்றாள். “அப்பாக்கு கால் வலிக்கும் டா, அதுனால அப்பாவால அவ்ளோ தூரம் நடக்க முடியாது” எனக்குள்ளே எழுந்த அந்த ஆசைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். ஆனால் இப்பொது தான் புரிகிறது நீ கால் வலியால் வர மறுக்கவில்லை என்று , மன வலியால் வர மறுதிருக்கின்றாய்.

பிள்ளையின் பள்ளிகூடத்திற்கு சென்றால் சக பிள்ளைகள் தன் பிள்ளையை மாற்றுதிறனாளியின் மகள் என்று கேலி பேசுவார்களோ என்று அஞ்சி, நீ வரவில்லை. எத்தனை பெரிய கத்தியை உன் இதயத்தில் இறக்கியிருகிரேன். நீயும் சத்தம் போடாமல் தலையணையை கண்ணீரால் நனைத்தாய், நானும் விசும்பி கொண்டிருந்தேன். ‘படிப்பு மட்டும் தான் வாழ்கை’ என்று போதித்தாய், ஆனால் வாழ்க்கையே ஒரு பெரிய பள்ளிக்கூடம் என்று கற்பிக்கவில்லை நீ. வெறும் பள்ளி புத்தகங்கள் உள்ளே என்னை சுருட்டினாய். நடனத்தின் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது எனக்கு. ஆனால் இசை கற்க சொன்னாய், இசைந்தேன் ஆனால் உன் ஆசைக்கு வளையமுடியாமல் தவித்தேன். வெறும் சரளி வரிசையுடன் முடிந்தது என் இசை பயணம். அப்போதும் உன் மேல் அதீத கோவம் எழுந்தது. பிறகு அறிந்தேன் நீ சிறு பிராயத்தில் படிக்க விருப்பம் இருந்தும் வறுமையினால் படிக்காமல் பணம் ஈட்ட புறப்பட்டதை.

அதன் முடிவாகவே என்னை உன் கனவை சுமக்க வைத்தாய் . வருந்தினேன் உன் பிள்ளை பருவத்திற்காக. இளமையில் வறுமை கொடியது என்று அறிவேன் . ஆனால் நான் அறியாத விஷயம் , திருமண கனவுகளை சுமந்தபடி உன் அக்கா, வேலைக்கான கனவுகளை சுமந்தபடி உன் முதல் தம்பி , படிப்பின் கனவுகளை சுமந்தபடி உன் கடைசி தம்பி, இது எதுவும் அறியாமல் சீட்டுகட்டுக்குள் தன் வாழ்க்கையை தொலைத்த உன் தந்தை. அடுத்தவேளைக்கு சோறு இல்லை என்றல் தண்ணீர் குடிக்கலாம் , வீடே இல்லை என்றால்??? அன்று நடு வீதியில் ஊர் பார்க்க, சுற்றம் சிரிக்க, அரசாங்கம் வீடை ஜப்தி செய்ய, அனைவரும் கையை பிசைந்தபடி நிற்க, எவ்வளவு காயபட்டிருப்பாய்??, எவ்வளவு துடித்திருப்பாய்??. அன்று தான் உன் மனம் இறுகியதோ?? உன் நேசங்கள் முடங்கியதோ??? அன்று முதல் தான் நீ உன் உடன்பிறப்புகளின் கனவை நிறைவேற்ற உன் கனவை கலைத்தாயோ??

ஆடம்பரமாய் வாழ நீ ஓடவில்லை, அடிப்படை தேவைக்காய் நீ ஓடினாய். என்னை கண்டதும் உன் கலைந்த கனவுகள் உயிர்பெற்றிருக்கும். பூரித்திருப்பாய். மன்னித்துவிடுங்கள் அப்பா. இன்று எனக்கு இருக்கும் இந்த புரிதல் 10 வயது பிள்ளைக்கு இல்லாமல் போயிற்று. அன்றே புரிந்திருந்தால், நீ எனக்கு அந்நியமாக இருந்திருக்க மாட்டாய். ஆனால் என்ன செய்ய இருவருக்கும் வாழ்கை கற்று தந்த பாடம் வேறு . நீங்கள் 'மனித மதிப்புகள் இழக்காமல், பிறரை காயப்படுத்தாமல் தன் தேவை பூர்த்தி செய்வது எப்படி' என்று கற்றீர், ஆனால் நானோ மனித மதிப்புகள் இழக்காமல், பிறரை காயப்படுத்தாமல் அன்பு செலுத்துவது எப்படி என்று கற்றேன்.

நமக்கு எது கிட்ட வில்லையோ அதன் மீது தானே அப்பா பிடிப்பு இருக்கும். உங்களுக்கு ரூபாய்கள் கிட்டவில்லை, எனக்கு அன்பு கிட்டவில்லை. இது தான் நமக்கு வாழ்கை கற்று தந்த பாடம். இதில் எதுவும் தவறில்லை . நீங்களும் ‘சரி' தான் நானும் ‘சரி ’ தான் . பின்பு எங்கு எது தவறானது???? தவறு உங்கள் எண்ணத்தில் இல்லை அப்பா, தவறாகி போனது சொற்கள். உங்கள் சொற்கள் ஈட்டியின் கூரிய முனையாய் தாக்கியது. நீங்கள் என்னமோ பூக்கள் என்று நினைத்துதான் அர்சித்தீர்கல், வந்து விழுந்தது என்னமோ தீ பிளம்புகள். இந்த வயதில் வார்த்தைகளுக்கு அர்த்தம் நாம் தான் உருவாக்குகின்றோம் என்று அறிய முடிகிறது . இப்பொது எல்லாம் எந்த வார்த்தையும் சுடுவதில்லை. வார்த்தைகளுக்கு நான் வண்ணம் பூசுவதில்லை, ஆனால் பிள்ளை பிராயத்தில் உங்கள் அணைப்பிற்கு ஏங்கிய பொழுது வார்த்தைகள் என்னை தின்றன.
நீங்கள் சொன்ன இந்த ஒரு வார்த்தை இன்றும் நினைவுள்ளது “ஒன்னு பணம் இருக்கனும், இல்ல அறிவாது இருக்கனும், இல்ல நம்ம கிட்ட அழகாவது இருக்கனும் , இது எதுவுமே இல்லனா எப்படி?” அன்று தான் முதலில் என்னை உற்று நோக்கி கண்ணாடி பார்க்க ஆரம்பித்தேன். 'நான் நிஜமாகவே அழகில்லையோ' என்று அஞ்சினேன். இது எல்லாம் நடக்கும் போது எனக்கு அகவை 11 அப்பா . பெண்மை பற்றிய கனவுகள் ஆங்காங்கு எட்டி பார்க்கும் போதே என் அழகு பற்றிய உங்கள் எண்ணங்கள் அதை வேரோடு புடுங்கி போயிற்று. இப்பொது நான் அறிவேன், ‘அழகு என்பது நான் பார்க்கும் பார்வையில்’, அதற்கென்று தனி வரைவிலக்கணம் இல்லை என்று. ஆனால் இந்த உண்மையை நான் அறிந்துகொள்ள உங்கள் சுடு சொற்கள் என்னை எத்தனை தூரம் முடக்கியது. தவித்தேன் அப்பா. மீண்டும் குற்ற உணர்வு. என்னால் தான் நீங்கள் இவ்வளவு தூரம் துன்பம் அடைந்தீர்களோ என்று? நான் அழகாக பிறந்திருந்தால் சந்தோசம் அடைந்திருப்பீர்களோ என்று?

அறியா பிள்ளை தானே அப்பா, தெரியவில்லை. இப்போது என்னால் என் கைகள் மீது இருக்கும் ரோமங்களையும், என் தாடை மீது இருக்கும் ரோமங்களையும் நேசிக்க முடிகிறது. இவை எல்லாம் சேர்ந்தது தான் இந்த பெண் என்று அறிய முடிகிறது. ஆனால் அன்று நான் பிளவுபட்டு போனேனே அப்பா . சாலையில் செல்லும் போது கூட கைகள் மூடியபடியே சென்றேனே அப்பா, விளங்கவில்லையே அப்போது. சாலையில் ஆண்கள் என் ரோமங்கள் பார்த்து “இது பொண்ணும் இல்லை ஆணும் இல்லை’ என்று கிசுகிசுத்த போதுபோது ஓடி வந்து உன்னிடம் கதறி, ஆறுதல் பெற விரும்பிய போது, உன் சுடு சொற்கள் என்னை தடுத்து நிறுத்தியதே அப்பா. அப்போது தெரியவில்லை அப்பா; மூன்றாம் பாலினம் என்று ஒன்று உண்டு என்றும்; அவர்கள் பிழையாகி போன இலக்கணம் அல்ல என்றும்; இயல்பான கொஞ்சும் தமிழ் என்றும்....

போக வழி இல்லை துடித்தேன். யாரிடம் சொல்லி அழ வேண்டும் என்றும் தெரியவில்லை. என்னை உணர வயதும் இல்ல. என்ன செய்ய. சிந்தித்தேன். நம்மை உணர வயது தடை இல்லை என்று அறிந்தேன். உற்று நோக்க ஆரம்பித்தேன், எனக்குள் நிகழும் மாற்றங்களை . மன்னித்து விடுங்கள் அப்பா, அன்று ஓடி வந்து உன் மடி சாய்ந்திருந்தால் இன்றும் உன் மடி தேடியே என் வாழ்க்கை புதைந்திருக்கும். அன்று நீ என்னுடன் இல்லை, என்னை கேலி செய்தவர்களை நான் உற்று கவனிக்க ஆரம்பித்தேன், அவர்களும் எங்கேயோ காயப்பட்டிருப்பதை உணர்ந்தேன். தெரிந்தோ தெரியாமலோ நீ பூக்களை தான் அர்சித்திருகிறாய். நீ அணைத்திருந்தால் நான் அணைந்தே போயிருப்பேன். இன்று அன்பின் ஜோதியாய் ஒளிருகின்றேன். இன்று என்னை யாரும் கேலி செய்தாலும் அவர்களுடன் சேர்ந்து என்னால் சிரிக்கவும் முடிகிறது, சிந்திக்கவும் முடிகிறது, அவர்களை அணைக்கவும் முடிகிறது. இதற்கு எல்லாம் விதை உன் சுடு சொற்கள் . இன்று நன்றி கூறும் மனது , அன்று சுருங்கியது.

15 வயதில் பூத்தேன். நீ ‘வாழ்த்துக்கள்’ என்றாய். ஆனால் உன் வார்த்தைகள் எனக்கு போதவில்லை அப்பா. ‘என் பக்கத்தில் இருந்து என் தலை தடவி நெற்றியில் வாஞ்சணையாய் ஒரு முத்தம்’ இது தான் அப்பா நான் தேடியது. உன் வாழ்க்கை சூழல்கள் உன்னை சுருக்கியது. ஒரு வேலை உன் தமக்கை பூப்பெய்திய போது, எப்படி பாதுகாப்போம் என்ற கவலையின் தொடர்ச்சியா இது? தெரியவில்லை, அப்போது நான் அறியவில்லை. பிளவு பட்ட நாம் பிரிந்தே போனோம். ‘நான்’ உருவானது என்னுள். ‘நான் வேகமெடுத்தது உன்னுள். என் தேடல்கள் வேறு , உன் தேவைகள் வேறு . நீ பொருத்தி பார்த்தாய்; நான் பொருந்த வில்லை. அக்னி பிளம்புகளாய் வார்த்தை எறிந்தோம். மன்னித்து விடு அப்பா, வார்த்தையின் வீரியம் அப்போது நான் அறியவில்லை.

எத்தனை துடித்திருப்பாய். ஒரே வீட்டுக்குள் அந்நியர்கள் போல் ஆனோம். நம்மை இணைக்கும் பாலம் என் தாய் மட்டும் தான் . உனக்கு வாழ்க்கை பற்றிய பயம் இருந்தது அப்பா. அந்த பயத்திற்குள் அன்பை புதைத்தாய். உன்னால் அந்த பய உணர்வில் இருந்து மீள முடியவில்லை. உனக்கு உதவுவதற்கு அம்மாவின் சூழ்நிலை உதவவில்லை. அந்த பயத்தின் விளைவாகவே எங்களை ஒரு வட்டத்திற்குள் நிறுத்த முற்பட்டாய். சிறகு முளைத்த பிறகு எப்படி அப்பா நிற்க முடியும்.

‘நான் பறக்க நினைத்தேன்,
நீ சிறகுகள் காயப்படும்
என்று அஞ்சினாய்.
சர்கஸ் கிளியாய்
பாதுக்கப்பாய் இரு என்றாய்
வானமே எனது வீடு என்றேன்
எனது வயது கண்டு அஞ்சினாய்'.

என் வயதை உன் கண்டிப்புகள்குள் அடைத்தாய். நான் உடைதுக்கொண்டே இருந்தேன். இடியாய் உன் தலையில் ஒரு செய்தி இறக்கினார்கள். உங்கள் பிள்ளையால் குழந்தை பேறு அடைய முடியாது , அவள் மனதால் பிள்ளை, ஆனால் அவள் கர்பபைக்கோ மூப்பு வந்து பல நாட்கள் ஆயிற்று. மாதவிடாய் அணை திறக்கும் முன் வற்றிவிட்டது. மருத்துவர் இதை சொல்லும் போது எனக்குள் எந்த சலனமும் இல்லை. என் மனம் விரிந்து இருந்தது . வாழ்க்கையை பற்றிய புரிதல் தொடங்கியிருந்தது . அப்போதும் உன்னை எதிர்பார்த்தேன் அப்பா. ஒவ்வொரு முறையும் நான் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்லும் போது நீ துணையாய் வர வேண்டும் என்று ஏங்கினேன். மீண்டும் உன் பயம் உன்னை ஆட்கொண்டது. என் அம்மா, மருத்துவமனையில் தவித்தாள், நீ பூட்டிய நாலு சுவற்றுக்குள் தவித்தாய். இன்று புரிகிறது ஒரு தந்தையின் வேதனை. இன்று தெரிகிறது, பெண்மை வற்றிய ஜீவ நதியாய் பெண் பிள்ளை நிற்கும் போது ஒரு தந்தையின் தவிப்பு, ஆனால் அப்போது தெரியவில்லையே அப்பா.

அப்போதும் நீ உன் பாசத்தை மறைக்க, சுடு சொற்கள் தான் ஆயுதமாய் கொண்டாய். ஆறுதல் தேடிய போது வஞ்சனை மட்டுமே மிஞ்சியது. ‘ நீ ஒழுங்காய் சாப்பிடுவது இல்லை, உன்னால் தான் இவ்வளவு செலவு' இப்படியே நீ வார்த்தைக்குள் சுருங்கினாய். ஆனால் ஒரு நிதர்சனமான உண்மை உண்டு. இந்த வார்த்தைகள் தான் என்னை விரிவடைய செய்தது. இந்த வார்த்தைகள் என் பெண்மை தாண்டி என்னை சிந்திக்க செய்தது . என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது அப்பா, 'தன் பிள்ளைக்கு திருமணம் என்பதே கேள்விகுறி ஆன ஒன்று' என்று தெரிந்தால் ஒரு தந்தையின் மனம் எப்படி துடிக்கும் என்று.

கலங்காதே அப்பா. நான் நெருப்பு ஜுவாலைக்கு பிறந்தவள். நீ எப்படி உன் உடல் இலக்கணம் கடந்து மாற்று திறன் கொண்டு போராடினாயோ அப்படியே நானும் போராடுவேன். நான் என் உடல் இல்லை அப்பா, இந்த பெண்மை நான் அல்ல. கர்பபைக்குள் என் வாழ்க்கை இல்லை, தாலிக்குள் என் கனவு இல்லை. நான் ஓட வில்லை, கழுத்துக்கு தாலி வந்தால் ஏற்றுகொள்வேன், இல்லையேல் ஏங்க மாட்டேன்.

‘நான் ஓடும் நதி அப்பா
தேங்க மாட்டேன்
மலர் வந்தாலும் அழைத்து செல்வேன்
கல் வந்தாலும் உருட்டி செல்வேன்
எதுவும் என்னை
தடுக்காது
வற்றினாலும்
மழையாய் பொழிவேன்’

இந்த புரிதல்கள் வருவதற்கு எத்தனை போராட்டங்களை என் மனம் சந்தித்தது தெரியுமா அப்பா???. போராடி போராடி, தோற்று, துவண்டு, நானே ஊன்றி, சாய்ந்து, செழித்தேன். நன்றி அப்பா. உன்னை, உன் சொற்கள் தாண்டி நேசிக்க ஆரம்பித்தேன், ஆனால் அந்த இடைவெளி அப்படியே இருந்தது. இடைவெளிகளில் உன்னை நான் நேசிக்க ஆரம்பித்தேன். வெறுமைகள் அறிந்தேன், அதை ஏற்றேன். நீயும் என் மேல் உனக்கு இருந்த பிடிப்பை தளர்த்தினாய். என் வழியில் பயணம் தொடர்ந்தேன். உனக்கு என் மீது நிறைய வருத்தங்கள் உண்டு. 'நீ சொன்ன படிப்பை படிக்கவில்லை, நீ சொன்ன வாழ்க்கை முறையை பின்பற்றவில்லை' இப்படி பல வருத்தங்கள். புரிந்து கொள்ளுங்கள் அப்பா...

‘கண்ணின் பயன் பற்றி நீங்கள் உரைக்கலாம்
எங்கே பார்க்க வேண்டும் என்றும்
எப்படி பார்க்க வேண்டும் என்றும்
நான் தானே தீர்வு செய்ய வேண்டும்’

எனக்கான உன் பார்வை இந்த வருத்தங்கள் தோய்ந்தே இருக்கிறது. இன்றும் சில பல வருத்தங்கள் எனக்கும் உண்டு, ஆனால் அவை உன் மீது அல்ல. இன்று நான் பொருள் ஈட்டுகிறேன். என் தேவை போக உன் தேவையையும் கவனித்து கொள்ளும் அளவு மனமும் பணமும் விரிவடைந்து உள்ளது. இன்றும் உன்னை அழைத்துக்கொண்டு நீ பார்க்க வேண்டிய இடங்கள் எல்லாம் காண்பிக்க ஆசை.

சின்ன வயதில் நீ அனுபவிக்க தவறிய சின்ன சின்ன விஷயங்கள் உனக்கு வாங்கி தர ஆசை தான். ஆனால் உன்னை அழைத்தால், ‘எங்கும் செல்ல சாலைகள் சரி இல்லை என்றும் , ஏறுவதற்கு ஏதுவாய் மாடிப்படிகள் இல்லை’ என்றும் கூறுகிறாய். வருத்தம் தான். உன்மேல் அல்ல, இந்த அரசாங்கத்தின் மீது. ஒரு மாற்றுதிறனாளிக்கு ஏதுவாய் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைத்து தராதது குறித்து . ஒரு படம் நீ பார்க்க நான் ரசிக்க வேண்டும் என்று நெடு நாளாய் ஆசை. ஆசை நிறைவேறியது. ஆனால் அந்த திரையரங்கின் இருட்டில், நீ நடக்க சிரமப்பட்டதை பார்த்த போது மனசு வலித்தது. 'சுற்றார் உன்னை ஏளனமாய் பார்கிறார்களோ, உன் குடும்பத்தை ஏளனமாய் பார்கிறார்களோ' என்ற அச்சமும் வேதனையும் உன் கண்ணில் கண்டேன்.

வருத்தம் தான். ‘ஒரு சக மனுஷியாய் ஒரு மாற்றுதிறனாளிக்கு ஏதுவான சுற்றுசூழலை உருவாக்க தவறிவிட்டேன்’ என்று. நான் படித்த படிப்பெல்லாம் ஏட்டோடு போனதே என்று! பெரும் ஆசை உண்டு அப்பா, ‘உன்னை என் வண்டியில் அமர்த்தி உனக்கு பிடித்த வீதியில் அழைத்து செல்ல, உன்னை அழைத்து சென்று விலை உயர்ந்த சட்டை ஒன்றை ஆசையாய் நீ தேர்வு செய்ய நான் பெருமையாக அதை வாங்கி தர, சுற்றுலா தளங்களுக்கு உன்னை அழைத்து செல்ல’ இப்படி பல! ஆனால் எதுவும் இது வரை நிறைவேறியது இல்லை.


அனைத்தையும் தாண்டிய ஒரு பெரு வலி என் நெஞ்சில் உண்டு. நீங்களும் உங்கள் மனைவியும் 65 அகவையிலும் தோழன், தோழியாய் மட்டுமே வாழ்ந்தீர்கள். எங்கள் பிறப்பிற்கு பிறகு, உங்கள் மனங்கள் ஒன்றாக இருந்தன ஆனால் படுக்கைகள் இடம் மாறின. அது இன்று வரை அப்படியே தொடர்கிறது. என் தாயிடமும் உன் அன்பை சுருக்கி கொண்டாய். என்னை போல் நீங்கள் இருவரும் அந்நியமாகவில்லை, ஆனால் தோழமையுடன் மட்டுமே இருந்தீர்கள். பெரும் ஆசை உண்டு. எப்படியாவது, ஒரு 7 நாட்களாவது உன்னையும் உன் மனைவியும் மீண்டும் திருமண வாழ்க்கைக்குள் அனுப்பி கணவன், மனைவியாய் காண வேண்டும்.

உன்மேல் எந்த கோவமும் இல்லை அப்பா. அந்த இளம் பருவத்தில் உன் வார்த்தைகளால் நான் காயப்பட்டேன். புரியவில்லை அப்பா அப்போது, உன் அன்பின் ஆழம். குழந்தைதானே வார்த்தைகளை மட்டும் நம்பிவிட்டேன் . நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் அப்பா, அன்பை வெளிப்படுத்த தெரியாவிட்டாலும் பரவாயில்லை, தவறாய் வெளிப்படுத்த வேண்டாம். குழந்தைகளுக்கு பெரிதாய் புரிந்து கொள்ளும் திறன் இல்லை. தவறான செய்திகள் மட்டுமே மனதில் பதியும் . அது வாழ்நாள் முழுதும் உறுத்தும்.அதில் இருந்து மீள்வது கடினம் . மீண்டு வந்துள்ளேன் அப்பா. உங்கள் துணை தேவை இல்லை என்று சொல்லவில்லை, முன்பு என் மனம் உங்களுக்கு ஏங்கியது, இப்பொழுது இடைவெளிகளில் நேசம் தொடர்கிறது.

உங்களிடம் நான் கற்றுக்கொண்டது அதிகம். எனக்கு தெரிந்து நீங்கள் பொய் உரைத்தது இல்லை. நேர்மை....அதுக்கு பொருள் நீங்கள் தான்...காலம் தவறாமை, நான் உங்களிடம் இருந்து கற்று கொண்டது...இன்றும் கடை பிடிப்பது.....ஒவ்வொரு விசயமும் நீங்கள் நேர்த்தியாக செய்வது உங்களால் மட்டுமே செய்ய கூடிய விஷயம்..... உங்களிடம் நான் பெற்றுக்கொண்டது மிகவும் குறைவு, நான் தந்ததும் குறைவு .

இன்று வரை சத்தியமாய் உங்கள் சம்பாத்தியம் எவ்வளவு என்றோ, எவ்ளோ சேமித்தீர் என்றோ தெரியாது....எந்த வங்கியில் பணம் சேர்த்துள்ளீர் என்றும் தெரியாது...எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான்....நம்பிக்கை...உங்கள் மீதும், வாழ்க்கை மீதும்.....என்னை மன்னித்து விடுங்கள் அப்பா...நான் என்றும் உங்களுக்கு பிடித்த மகளாய் இருந்ததில்லை....உங்கள் கனவுகளை என்னால் சுமக்க முடியவில்லை...நீங்கள் வானத்து நிலா..... இதம் தருவீர், கனவும் தருவீர்....தூரத்தில் நின்று உங்களை தினமும் ரசித்து கொண்டிருகிறேன்....ஆனால் என்னால் உங்கள் அருகில் வர முடியவில்லை...

குறைகள் கண்டே இளம் பிராயத்தை கடந்தோம். இனி நிறைகள் காண்போம் . நம்மை நாம் அப்படியே ஏற்றுகொள்வோம். கடந்து போவோம். அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை மன்னிப்போம். இருவருமே பாடங்கள் கற்றோம். நம் வேற்றுமைகள் தான் நமக்கு சிறந்த பாடமாய் அமைந்தது. இதோ இன்று நீ உன் முழு நரையுடன், இதோ நான் ஆங்காங்கே எட்டி பார்க்கும் நரையுடன். இன்னும் நீங்கள் பூக்கள் என்ன நினைத்து அர்ச்சனை செய்கின்றீர்கள், ஒரே ஒரு வேற்றுமை; நான் அதை பூக்களாகவே ஏற்றுகொள்கிறேன். நான் பெருமதிப்பு கொண்ட ஆண் நீங்கள்....என்னால் என்றும் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாது, ஏன் என்றல் நான் உங்களுக்கு பிறந்தவள், உங்கள் மூலம் பிறந்தவள், ஆனால் வேறு ஆன்மாவால் நிரப்பபட்டிருபவள்....எதையும் எதிர்பாக்காமல் என்னை நேசியுங்கள் அப்பா...

உங்களை மிகவும் பிடிக்கும்..ஆனால் உங்களுக்கு பிடித்த மகளாய் இருக்க தவறிய காரணத்தினாலே நெருங்கி வர முடியவில்லை... என் சுயம் வேறு, என் கலம் வேறு.....

‘இதோ புறப்பட்டு விட்டேன்
என் காயங்களுக்கு மருந்து போட அல்ல
காயங்களின் வேர் அறிந்து
உரம் போட
என் வாழ்க்கைக்கு நானே
பொறுப்பு
இனி எந்த வார்த்தைகளோ
செயல்களோ என்னை தீண்டாது
விரிவடைந்துவிட்டேன்
அண்டத்தை என்னுள் கண்டேன்
என் சாரத்தை
எல்லா உயிர்களிடத்தும் கண்டேன்
எல்லா உயிர்களின் துகளையும்
என்னுள் கண்டேன்
அன்பானேன்
இது வற்றாத ஊற்று
ஓடிக்கொண்டே இருக்கும்
அனைத்தையும் உள் வாங்கி’

நீ எனக்கு கற்பித்த அனைத்திற்கும் நன்றி அப்பா. தலை வணங்குகின்றேன்.

எழுதியவர் : (18-Jun-17, 3:18 pm)
சேர்த்தது : ஆத்மதர்சனா
பார்வை : 633

சிறந்த கட்டுரைகள்

மேலே