தாயின் அவதாரம் ---முஹம்மத் ஸர்பான்

அவரது வியர்வையில்
யுகப் பூக்களும்
நீராடிப் போகிறது
அவரது புன்னகையில்
பறவைகளும்
பசியாறிப் போகிறது
அவரது கண்ணீரில்
எரிமலைகளும்
பனி மலைகளாகிறது
அவரது தூக்கங்கள்
ஓடுகின்ற நதிகளாய்
ஓய்வினை மறந்தது
அவரது காலடிகளை
உலகின் அதிசயமாய்
வரலாறு நினைக்கின்றது
அவரது சோகங்கள்
பிள்ளையின் முன்
மார்கழி நிலவானது

இறைவனிடம் இவர்
யாரென்று கேட்டேன்
'தாயின் அவதாரம்'
என பதிலுரைத்தான்

புரியவில்லை
இறைவா என்றேன்

ஆலயங்களில் உயர்ந்த
ஆலயம் என்றான்

மறுமுறையும்
புரியவில்லை இறைவா

உன் உதிரத்தின் உயிர்
ஓவியம் என்றான்

கண் கலங்கி நின்றேன்
நிழலில் அவர் முகம்

இறைவனை தேடினேன்
என் கண்ணீரைக் கண்டு
கானலாகிப் போனான்

தூரத்தில் ஒரு ஜீவன்
புயலைக் கடந்து
என்னிடம் ஓடி வந்தது

கண்களில் 'தூசா'
விழுந்தது என்று
அவரது சுவாசத்தால்
மருந்து போட்டார்

இப்போது கண்கள்
கலங்கவில்லை
என்னிதயம் அழுதது

இதயத்தில் நான்
அன்னைக்காய் கட்டிய
கோயிலில் இனி மேல்
இவரின் பெயரை
வேதமாக ஓதப்போகிறேன்

அப்பா..அப்பா..அப்பா...,

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (18-Jun-17, 7:14 pm)
பார்வை : 329

மேலே