வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…

வேளாண்மையின் இன்றைய நிலை

நவீன உலகத்தில் அனைவரும் வேகமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை. பொதுவாக நாம் அனைவரும் இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு மாறி விட்டோம். இதில் தற்போது கிராமங்களையும் விட்டு வைப்பதில்லை. கிராமத்தில் இருந்து நகரத்திற்குச் செல்ல வேண்டுமானால் குறைந்தது 1 கிலோ மீட்டர் தூரம் நடந்த பிறகு டவுன் பஸ் படித்து அருகில் உள்ள பெரிய ஊருக்குச் சென்று பின்பு தொலை தூரப் பேருந்து பிடித்து நகரத்திற்குச் செல்வது வழக்கம். இது ஒரு நாள் வேலையாக இருக்கும். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. பல வகையான வாகனங்கள், கையில் எப்போதும் பல்நோக்கு வசதி உள்ள கைபேசி (Cell Phone), உடனுக்குடன் SMS மூலமாக செய்திகள் பரிமாற்றம், Satellite Channel தொலைக்காட்சி என்று தற்போது கிராமங்களிலும் பெரும்பாலான வசதிகள் கிடைக்கப் பெற்றுவிட்டன.

ஆனால் விவசாயத்தில், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல், விதை, உரம், பூச்சி மருந்து, புதிய விவசாய உபகரணங்கள் (Farm MachineMachine) அறிமுகப்படுத்தி அதிக விளைச்சல் உற்பத்தி செய்தலில் நாம் பாரம்பரிய கிராமங்களை விட்டுவிட்டோம். பாரம்பரிய விவசாய பழக்கத்தை மறந்துவிட்டோம். 2000 கிலோ பட்ஜெட் விவசாயம், உழுவாமல் பயிர் செய்ய வேண்டும் என்று பலர் இன்னும் பழமையை பேசிக்கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை.

நம்முடைய சுகத்திற்கு, எளிமையான வாழ்க்கை முறைக்கு, தொழில் நுட்பம், மருத்துவம், பொறியியல் என அனைத்துத் துறைகளிலும் புதுமையை நாடுகின்ற நாம், ஏன் விவசாயத்தில் மட்டும் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்?

மனிதனின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் எந்த ஒரு பொருளானாலும், விளம்பரத்தின்
விளம்பரத்தின் மூலம் அந்த புதிய தொழில்நுட்பங்களை உடனடியாக மக்களிடம் சென்று சேர்க்கிறார்கள். அதனால் மக்கள் தங்களுடைய வாழ்க்கை முறைக்குத் தேவையான புதிய மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவே விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்படும் விதைகள், உரங்கள், விவசாய உபகரணங்கள் பயன்பாட்டில் பல எதிர்ப்புகள் வருகின்றன.

முன்பு ஒரு விவசாயியின் குடும்பத்தில் குறைந்தது 5 முதல் 10 வரை உறுப்பினர்கள் விவசாயத்தை கவனித்து வந்தார்கள். ஒரு வீட்டில் 10 முதல் 20 மாடுகள் வரை இருக்கும். மாட்டுச் சாணம் குப்பைத் தொட்டியில் போட்டு மக்கிய உரம் அந்த வருடத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்குக் கிடைக்கும். வயல்வெளிகளைச் சுற்றி நிறைய மரங்கள் இருக்கும். புங்கம், வேப்பம் போன்ற மரங்களின் தழைகள் நெல் பயிரிடப்படும் சேற்றில் மிதித்து நெல் நடவு செய்வார்கள்.

இந்த நிலையைத் தற்போதைய விவசாய வல்லுனர்கள் இயற்கை விவசாயம், அங்கக விவசாயம் (Organic Agriculture) என்று பல முறைகளாகக் கூறி வருகிறார்கள். தற்போது இயற்கை விவசாயம் செய்ய வேண்டுமானால், எத்தனை விவசாயிகளிடம் உழவு மாடுகள் உள்ளது. அப்படி மாடுகள் இருந்தால் எத்தனை பேர் மாடுகளை வைத்து ஏர் ஓட்டுகிறார்கள். அப்படியே இருந்தாலும் அத்தனை மாடுகளுக்கும் தேவையான தீவனங்கள் கிடைக்கிறதா? எத்தனை விவசாயிகள் ஏர் ஓட்டுவதற்குத் தயாராக உள்ளார்கள்.

மாறுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயத்தை மாற்றாவிட்டால், விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக மாறிவிடும். விவசாயத் தொழில் லாபகரமாக இல்லாமல் போய்விடும். ஒரு காலத்தில் விவசாயம் செய்ய ஆட்களைத் தேட வேண்டிய நிலைக்கு நிச்சயம் செல்ல நேரிடும்.

இயற்கை வேளாண்மையைத் தவறு என்று சொல்லவில்லை. மேல் சொன்னவாறு விவசாயத்திற்கு மாடுகள், தேவையான அங்கக உரங்கள் இருந்தால் அப்படி விளைவிக்கும் பொருட்களுக்கு உண்மையில் கட்டுபடியான விலை கிடைத்தால், கண்டிப்பாக அனைத்து விவசாயிகளும் இயற்கை வேளாண்மையைச் செய்து அனைத்து பொருட்களுக்கும் செயற்கை உரம் போடாமல், பூச்சி மருந்து அடிக்காமல் கொடுத்திருப்பார்கள்.

ஆனால் அனைத்துத் துறையிலும் நாம் உபயோகிக்கும் பொருட்களில் மாற்றங்களை சந்தித்துவிட்டு, விவசாயத்தில் மட்டும் இன்னும் பழைய முறையில் செய்யப்படும் உணவுகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயம்.

இந்திய மக்கள் தொகை 125 கோடியைத் தொட்டுவிட்டது. 40 கோடி மக்கள் கொண்ட புதியதாக சுதந்திரம் அடைந்த இந்தியா (1947) வேறு. அனைத்து இளைஞர்களையும் விவசாயத் துறையில் இருந்து சாப்ட்வேர் துறைக்கு அனுப்பிவிட்டு வயதான காலத்தில் விவசாய பூமியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் 2012ல் உள்ள விவசாயிகள் உள்ள இந்தியா வேறு. அப்போது, 85 சதவிகிதம் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தனர் நம் மக்கள். ஆனால் தற்போது 65 சதவிகித மக்கள் மட்டுமே விவசாயத்தை நம்பி உள்ளனர்.

இத்தனை மாற்றங்களையும் செய்துவிட்டு நான் இன்னும் பழமையை மட்டுமே விரும்புவேன் என்பதில் எந்த பலனும் இல்லை.

கிராமத்து குழந்தைகளை காலை எழுந்த உடன் விடிந்தும் விடியாததற்குள் காலை சிற்றுண்டியை வாயில் திணித்து, பெரிய புத்தகப் பொதி மூட்டைகளை முதுகில் ஏற்றி மதிய உணவையும் அதில் வைத்து, எங்கோ தொலைவில் உள்ள ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய பள்ளிக்கு பல கிலோ மீட்டர் தூரம் செல்லும் பேருந்தில் ஏற்றி விடுகிறோம். பிறகு பள்ளி முடிந்து, டியூசன் முடித்து பொழுது சாய்ந்த பிறகு பல கிலோ மீட்டர் பேருந்தில் பயணம் செய்து கிராமத்தை அடைகிறார்கள். தினமும் இதே நிலையில் உள்ள பல ஆயிரக்கணக்கான கிராமத்து இளைஞர்களுக்கு விவசாயம் என்றால் என்ன என்று கற்றுத்தர வேளாண்மைக் கல்லூரிகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் இருக்கும் கிராமத்து இளைஞர்கள் மீண்டும் விவசாயம் செய்ய வருவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது.

மேலும், கிராமத்து குழந்தைகள் நகரத்துக் குழந்தைகளுக்குச் சமமாக வேண்டும் என்று எண்ணும் கிராமத்து பெற்றோர்கள், உயர்ந்த தியாகத்தின் அடிப்படையில் 1ம் வகுப்பு முதல், தங்கி படிக்கும் (Residential) விடுதிகளில் குழந்தை பருவம் முழுவதையும் பள்ளிக் கூடங்களில் கழிக்க தங்கள் பிள்ளைகளை விடுகின்றனர். இப்படி நகரத்தில் படிக்கும் கிராமத்து குழந்தைகள் பார்க்கும் விவசாயம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டின் விடுமுறை விவசாயம். அவர்களுக்கு இந்த காலத்து விவசாயத்தில் உள்ள நுணுக்கங்களும், விவசாய முறைகளும் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவதில்லை. விவசாய நிலங்களை பார்க்கும் கண்ணோட்டம் அவர்களுக்கு தெரியாததாகி விடுகிறது.

தற்போது உள்ள பெரும்பாலான விவசாயிகள், குழந்தை விவசாயத்தை எடுத்துச் செய்யப் போகிறார்கள். அப்படியே விவசாயம் செய்ய நினைத்தாலும் அத்தகைய விவசாயி,தான் பெற்றகஷ்டங்களைத் தான் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போகிறார்கள்.

ஆதாரம் : செந்தில்நடராஜன் ஆசிரியர்

எழுதியவர் : (20-Jun-17, 5:23 pm)
பார்வை : 222

மேலே