அன்பு தம்பி, அக்காவிற்கு எழுதியது

நீ எங்கே சென்றாய்?
என் இதயத்துடிப்பு வேகமாகிக் கொண்டே செல்கிறது அந்த நாளை எண்ணும் போது.
நான் உனது பெயரையே உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்.
நீ அப்போது என்னை நேசித்தாயா?
இப்போதும் நீ என்னை நேசிக்கிறாயா?
நான் தினமும் உன் நினைவிலேயே வாழ்கிறேன்.
ஆனால் நீயோ வெகுதூரம் சென்றுவிட்டாய்.
எனக்கு தெரியாது,
நீ ஏன் என்னை இவ்வுலகில் விட்டுச் சென்றாயென்று.

நான் நம்பிக்கை கொண்டிருந்தேன், நீ என் இதயத்துடிப்பைப் போல என்றும் என்னுடன் இருப்பாயென்று.
எனக்கு தெரியாது, நீ என்னுடன் இருந்த வரை நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் என்று.

இந்த வலி மிகவும் ஆழமானது,
தினமும் வீட்டில் நீ இல்லாததை உணரும் போது,
உன்னுயிர் பிரிகையில் உன் அருகில் இருந்தும் அதைத் தடுக்க இயலா பாவி நான் உனக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லையே என்று உணரும் போது,
என் இதயம் குத்துப்படுகிறது மீண்டும் மீண்டும்.
அதை உணர்கிறேன் ஆயிரக்கணக்கான கத்திகளால் என் இதயத்தில் குத்துவதாய்...

நீ இருந்த போது உன் அன்பை உணராத மூடனாய் இருந்த நான் நீ சென்ற பிறகு வருந்துகிறேன்.
என் கடந்த கால மூடத்தனம் இப்போதென் மகிழ்ச்சியைப் பாதிக்கிறது..
நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..
என்னைவிட உன்னையே நம் அப்பா, அம்மா நேசித்தார்கள்..
நம்மை பிரித்தது விதி..
உன்னைப் பாதித்த அந்த அம்மை நோய் என்னைப் பாதித்துக் கொன்றிருக்கலாம்...
" அக்கா ", என்று அழைத்தால் உரிமையோடு, " தம்பி ", என்று அழைத்து அன்பு காட்டுபவர் எவருமில்லையென்ற துன்பத்தில் இருந்தாவது விடுபட்டிருப்பேன் அக்கா.
ஆனால், என்னைப் பிரிந்து நீ இந்த உலகில் வாழ்ந்து துன்பப்படுவதைவிட, நான் துன்பப்படுவதே மேல் என்றே தோன்றுகிறது..
உன்னை மீண்டும் காண என் மனம் ஏங்குகிறது...
சென்று வா அக்கா...
நீ வராவிடில் ஒருநாள் நானே அங்கு வருவேன் உன்னைக் காண...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Jun-17, 6:52 pm)
பார்வை : 10511

மேலே