காதல் பிறந்தது

கண்ணும் கண்ணும் கலந்த போது
>>>காதல் பிறந்தது !
எண்ணம் முழுதும் அந்த நினைவே
>>>இனிமை சேர்த்தது !
வண்ண கனவு நாண மின்றி
>>>வளைய வந்தது !
நண்பன் கூட தொல்லை யாக
>>>நாளும் தெரிந்தது !

இணையைக் காண வில்லை யென்றால்
>>>இதயம் தவித்தது !
துணையைக் கண்ட பின்பு தானே
>>>துடிப்பும் நின்றது !
அணைப்பில் தன்னை மறந்த உள்ளம்
>>>அடங்க மறுத்தது !
பிணையைச் சேர்ந்த மானாய் மகிழ்ந்து
>>>பெருமை கொண்டது !

மலர்ந்த பூவில் மதுவை உண்ணும்
>>>வண்டாய்ப் பறந்தது !
கலந்த அன்பில் கனிந்தே உருகி
>>>களித்துச் சிலிர்த்தது !
புலன்கள் ஐந்தும் அடங்க மறுத்தும்
>>>புரிதல் தொடர்ந்தது !
சுலப தவணை முறையில் அச்சம்
>>>துடைத்துப் போனது !

விழிகள் பேசும் காதல் கதையோ
>>>வேகம் மிகுந்தது !
மொழிகள் மறந்த மௌனம் கூட
>>>மோகங் கொண்டது !
வழியைத் தேடி இறையை வணங்க
>>>வரமும் கிடைத்தது !
பொழியும் மழையாய் நெஞ்சம் குளிர்ந்து
>>>புனிதம் அடைந்தது .....!!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Jun-17, 1:07 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : kaadhal pirandhadhu
பார்வை : 86

மேலே