உலகத்தமிழ்கல்வி பற்றிக் கவி பாரதி

மொழியும் கல்வியும் ஏறக்குறைய ஒரே தன்மையன. கல்வி, தனி மனித வளர்ச்சிக்கு வழி; தனி மனிதனைச் சமுதாயத்தோடு இணைக்கும் இணைப்பு. எல்லாக் காலப் பெரியவர்களும் கல்வியின் தேவையை, சிறப்பை எடுத்துக் காட்டினர்கள்.

ஆல்பர்ட் சுவைட்சர் என்ற உலகப் பெருந் தொண்டர், பேரறிவாளர், ‘மானுடத்தின் நறுமலர் திருக்குறள், உலகத்தின் தலைசிறந்த நீதிநூல்’ என்றார், அந்நூல் கூறுகிறது. ‘யாதானும நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்தணையும் கல்லாதவாறு’ என்று. கிரேக்கஞானி அரிஸ்டாட்டிலும் இப்படியே கூறுகிறார்.

பேரரசுகளின் தலையெழுத்து இளைஞர் கல்வியிலே இருக்கிறது. ஆளும் கலையைப் பற்றி ஆய்ந்தவர்கள் அனைவரும் இம் முடிவிற்கே வந்தனர்.

ஆளும் கலையைப் பற்றி, மன்னர் மன்னன் நெப்போலியனுக்கு மேல் யாரே சிந்தித்தார்? நெப்போலியன் சொன்னார்:

‘ஆட்சியின் முதல் நோக்கம் ‘பொதுக்கல்வி’யாக இருக்கவேண்டும்’ என்று.

கல்வியின் பெருக்கத்தோடு, தரமும் தேவை. இதையே பிரஞ்சு அறிஞர் மாண்டேயன், ‘யார் நிரம்பப் படித்தவர் என்று கேட்பதைவிட, யார் நன்றாகப் படித்தவர்’ என்று கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

இவற்றை மாநாட்டின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

பாண்டிய மன்னர், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பினைக் கோடிட்டுக் காட்டுவதையும் காட்டினேன்.

தமிழ் மறையாம் திருக்குறள், கல்விக்கே முதலிடம் கொடுத்திருக்கிறது. கல்விக்குத்தான் நான்கு அதிகாரங்கள்; நாற்பது குறட்பாக்கள். அவையும், சமுதாயப்பாலாகிய பொருட் பாலில் இடம் பெற்றிருப்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பொருட்பாலிலும், இறை மாட்சிக்கு அடுத்து வைத்துள்ள நுட்பத்தையும் உணர வேண்டும்.

கல்வியைப் போற்றும் நல்லோர் மரபில் வந்தவர், தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார். அவர் தமிழ் நாட்டைப் போற்றிப் பாடி மகிழும் போதும்,

கல்வி சிறந்த தமிழ் நாடு- புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
பல்வித மாயின சாத்திரத் தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

என்றே பூரிக்கிறார். இது, அவருக்குக் கல்வி, கவிதை, பல்கலை ஆகியவற்றின்பால் இருந்த பேரார்வத்தைக் காட்டுகிறது.

கல்வி பற்றிப் பாரதியின் கருத்தென்ன?

பன்னருங் கல்வியாக இருக்க வேண்டும், ஏன்?

படிப்பவர் பல வகையினர். எனவே பலவகையாக அமைய வேண்டும். கல்வி வழுக்கையாக இருக்கலாமா? ஆகாது. அது தேர்ந்த கல்வியாக வேண்டும். கல்விப் பெருங்கடலாக விளங்க வேண்டும். அதில் மாணவர் தமக்கு வேண்டியதைத் தேடிப் பெற வேண்டும் மற்றவர் உமிழ்வதை அள்ளிக் கொள்வது கல்வியா என்ன?

பாரதி, ‘தேடுகல்வி’ என்று கூறுவதை ஆழ்ந்து உணர்வோம். ‘ஓது பல்பலநூல்வகை’ என்று ஆணையிடுவதையும் சிந்திப்போம். அத்தகைய தேடிப் பெற்ற கல்வியின் விளைவு எதுவாக வேண்டும்? பல்கலைத் திறமையாக, பல்விதமாயின சாத்திர வழியாக விளைய வேண்டும். அத்தகைய கல்வி, வாழ்க்கைக் கல்வி. இத் தகைய கல்வியைப் பெற்றாரா பாரதியார்?

அவர் பெற்றது குறுகிய கல்வி. வாழ்க்கைக்கு உதவாத கல்வி; அடிமை உணர்ச்சியை ஊட்டும் கல்வி; பயனற்ற கல்வி. தாம் பெற்ற கல்வியை, ‘பேடிக்கல்வி’ ‘அற்பர் கல்வி’, ‘மண்படு கல்வி’ என்றெல்லாம் குறை கூறுகிறார் பாரதியார், தம் பள்ளிக்கூடக் காலத்தைப் பற்றிப் பாடும்போது.

‘தந்தைக்கு ஓராயிரம் செலவு. ஆயினும் தனக்கு எள் துணையும் பயனில்லை’ என்று வேதனைப்படுகிறார் பாரதியார்.

‘கல்வி பயனற்றதாக உள்ளதே! இதை அழித்து விடு, என்று கூறவில்லை பாரதியார். மாறாக, கல்வியை எல்லோருக்கும் உரிமையாக்க ஆணையிடுகிறார், பழமைப் பிடிப்பால் கல்வியை அலட்சியப் படுத்துபவர்கள் இருப்பார்கள் என்பதை உணர்கிறார். அவர்கள்மீது பொங்கியெழுகிறார். கல்வியிலாதோர் ஊரைத் தேடிக் கண்டு பிடிக்கக் கட்டளையிடுகிறார். அதைச் சுட்டுப் பொசுக்கி விடச் சொல்லுகிறார், அத்தகைய ஊர் அவமானத்தின் அடையாளம் என்று கருதினர் போலும், இவற்றை அறிஞர் சிந்தனைக்குப் படைத்தேன். கல்வி வளர்ச்சிக்குத் துணைநிற்க வேண்டினேன். கல்விச் சீர்திருத்தத்திற்குத்தோள் கொடுக்க வேண்டினேன். என் கட்டுரை ஆங்கிலத்கில் இருந்தது. அதைப் படித்து முடித்ததும் தொடர்ந்து தமிழில் அதே தலைப்பில் பேசி னேன். அப்போது பாரதி பாடல்கள் சிலவற்றை ஒப்பு விக்க நல்வாய்ப்புக் கிடைத்தது.

கல்வி எல்லோருக்கும் ஆம், பெண்களுக்கும், சரிநிகர் வாய்ப்புக் கொடுக்கக் கட்டளையிடுகிறார். ‘எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்று பாடுவதை இப்போது நினைவிற்குக் கொண்டு வாருங்கள்!

கல்வி முறையில்இருந்த குறையை நன்றாய் உணர்ந் தார் பாரதியார். மெய்யாய் உணர்ந்தார் பாரதியார். தம் இயலபுக்கேற்பப் பச்சையாகக் காட்டுகிறார். ஆயினும், மண்படு கல்வி என்று சொல்லி ஏழை மாணவனை ஏமாற்றித் திசை திருப்ப முயலவில்லை.

மனித உரிமையிலும் கல்வி உரிமையிலும் அவருக்கு அளவுகடந்த பற்றுதல். உள்ளத்தைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற தெளிவும் இருந்தது. அவருக்குத் தொலைநோக்கு. அலை ஒய்ந்து தலை மூழ்க முடியாது, கல்வி மாற்றத்திற்காக கல்வி பெறுதலைத் தள்ளிப் போடுவது தவறு என்பது தெரிந்தது.

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல், ஆலயம் பதினாயிரம் காட்டல் இவற்றைவிட, ‘ஒரேழைக்கு எழுத்தறிவித்தல், சிறந்த புண்ணியம்’ என்பது பாரதியார் கருத்து. அதைப் பாரிசில் விரித்தேன். இங்கும் விரிக்கிறேன். கொள்வாருண்டோ?

உலகத்தமிழ் ஆசிரியர் டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு‎

எழுதியவர் : (21-Jun-17, 2:05 am)
பார்வை : 117

மேலே