எனக்குப் பிடித்த எழுத்தாளரின் சிந்தனை எழுத்துகளிலிருந்து

எனக்குப் பிடித்த எழுத்தாளரின் சிந்தனை எழுத்துகளிலிருந்து...

************************************************************

பகைவனிடம் கோபமும், கொதிப்பும், வெறுப்பும் எழுவதும், வஞ்சம் தீர்த்தாக வேண்டும் என்ற எண்ணம் வெறி அளவு ஓங்குவதும் இயல்பு.
ஆனால், பகைவனிடமும் பரிவு
எழுகிறது - எழ முடியும் என்று எடுத்துக்காட்ட மிகச் சிலருக்கு மட்டுமே முடியும் - அது பொது இயல்புக்கு மாறானது; உலகில் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டுள்ள முறைக்கு முரணானது. எனவே தான் அதனை கூறுவதற்குத் தனியானதோர் திறமை தேவைப்படுகிறது.

நம் நாட்டினை வேறோர் நாட்டினர் தாக்கிடும் போது - போர்
மூண்டிடும் போது, நாட்டுப்பற்று உணர்ச்சிதான், மற்ற எந்த உணர்ச்சியையும் விட, மேலோங்கி
நிற்கிறது.
நம் நாடு
தாக்கப்படுகிறது!
நமது தன்மானம் பகைவனிடம் கோபமும் தாக்கப்படுகிறது!! என்ற
எண்ணம் உள்ளத்தை எரிமலையாக்குகிறது;
வெடித்துக் கொண்டு கிளம்புகிறது கோபம், கொதிப்பு, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம், பகைவனை அழித்தொழிக்க வேண்டும் என்ற துடிப்பு.
போர் மூண்டிடாத போது எவையெவை 'வெறி' என்று கருதப்படுமோ அவை யாவும், தேவைப்படுவனவாக, வரவேற்கப்படுவனவாக, போற்றப்படுவனவாக ஆகிவிடுகின்றன. "இப்படியா இரக்கமின்றி அடிப்பது. அவனும், பாவம் மனிதன் தானே" என்று மனம் உருகிப் பேசிடும் நல்லோர் கூட, மெல்லியலார் கூட, "சுட்டுத் தள்ள வேண்டும்! வெட்டி வீழ்த்த வேண்டும்! பூண்டோடு அழிக்க வேண்டும்!" என்று பேசுகின்றனர் - போர் மூட்டிவிடும் வெறி உணர்ச்சி காரணமாக! அந்த உணர்ச்சியை வெறி என்று கூடக் கூறிடத் துணிந்திடார்! கவிதைகள் இயற்றப்படுகின்றன, அந்த 'எழுச்சி' பற்றி. நாடு வாழ்ந்திட எதனையும் செய்திடுவேன்! - என்ற பேச்சுக்குப் பெரியதோர் மதிப்புக் கிடைக்கிறது. எதனையும் செய்திடுவேன்! படுகொலைகள் கூட! பச்சிளங்குழந்தைகளைக் கொன்றிடும் பாதகம் கூட! போர்க்களத்தில், "கொல்லு! இல்லையேல் கொல்லப்படுவாய்!" என்பது தான் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கணம் - போரிடும் இரு நாடுகளிலும்!

ஒரு நாடு மற்ற நாட்டின் மீதே எல்லாப் பழிகளையும், எல்லா
கெடுநினைப்பினையும் ஏற்றி வைக்கும்; காட்டுமிராண்டிகள்! கொலைபாதகர்கள்! வெறியர்கள்! மனிதமாண்பு அறியாதவர்கள்! - என்று கண்டனக்கணைகள் கிளம்பிடும், இருபுறமுமிருந்தும். போர் ஓய்ந்து, ஓர் புது உறவு ஏற்பட்ட பிறகு தான், உண்மை வெளியே தலைகாட்டும், தைரியமாக! போர் துவங்கியதும், உண்மை ஓடி ஒளிந்து கொள்கிறது. வெறி பிடித்தலையும் சிலரால்
மூண்டது இந்தப் போர் என்று, போர் ஓய்ந்த பிறகு தான் பேசப்படும் - போர் நடக்கும் போது அந்த நாட்டு மக்கள் அனைவரையுமே வெறியர்கள், காட்டுமிராண்டிகள், இரத்தம் குடிப்பவர், பிணம் தின்பவர், கற்பழிப்பவர், கயவர் என்று தான் பேசுவர் - ஒருவர் தவறாமல். யாரேனும் ஒருவர் இவ்விதம் பொதுப்படையாக ஒருநாட்டு மக்கள் எல்லோரையும் மொத்தமாகக் கண்டிப்பது முறை அல்ல என்று கூறிடின், அவனுடைய நாட்டுப்பற்று பற்றிய பலமான ஐயப்பாடு எழும்; அருவருப்பு கிளம்பும்; அவன் 'தேசத்துரோகி' ஆக்கப்பட்டு விடுவான். தேசத்துரோகி - நாட்டைக் காட்டிக் கொடுப்பவன் - எதிரிக்கு உளவாளி - எதிரியைவிடக் கொடியவன் - இழிமகன் - என்றெல்லாம் அவன் கண்டிக்கப்படுவான்; தனது நிலைமையை விளக்கிட அவன் முனைந்தாலோ, மக்களின் ஆத்திரம்
மேலும் வளரும்; அவனை வெட்டி வீழ்த்திடக் கிளம்புவர். இந்தக்கரத்தால் - இந்த வாள் கொண்டு பகைவர்
இருபதின்மரைக் கொன்றேன். துரத்தினேன்! அவன்
ஏற்கனவே அடிபட்டவன்.
ஆகவே வேகமாக ஓடிட
முடியவில்லை.

களத்திலே இருள் கப்பிக் கொண்டிருந்தது. படை கிளப்பிய
தூசியால்!
எதிரில் யானை விரண்டோடி வருவது அவன் கண்களில் படவில்லை - சிக்கிக் கொண்டான்;
காலின் கீழ் போட்டு... ஆ! என்றான் ஒருமுறை;... ஒரே ஒரு முறை...
பிறகு... கூழ்! கூழாகிப் போனான்!
இப்படிப் பல நிகழ்ச்சிகளைத் தன் வீரத்திற்குச் சான்றுகளாகக் கூறுவான், களம்
சென்று திரும்பியவன்; கேட்போர் மகிழ்வர்; அவனை நாட்டைக் காத்த நாயகன் என்று பாராட்டுவர். பகை உணர்ச்சி கிளம்பிவிட்டால் அது தடுப்பாரற்று வேகமாக வளரும்; வளர்ந்திடுவது
போரின் போது மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகி விடுகின்றது.

நாட்டுமக்கள் அனைவரும் அந்தப்பகை உணர்ச்சியைக் கொண்டு விடுகின்றனர்; பொறி ஏதோ ஓர் இடத்தில் தான் விழுகிறது; தீயோ
எங்கும் பரவி, எல்லாவற்றையும் பிடித்துக் கொள்கிறது அல்லவா.

இன்முகம் காட்டுதல், நன்மொழி பேசுதல், அன்பு வழங்குதல், அறநெறி கூறுதல், இரக்கம் கொள்ளுதல் ஆகிய பண்புகள் அவ்வளவும் போர்ச்சூழ்நிலையில் அடியோடு மறைந்துபோய், 'தாக்கு! அழி! வெட்டு! குத்து!' - என்ற உணர்ச்சியை அனைவரும் பெற்றுவிடுகின்றனரே; அப்படியானால் அந்தப் பண்புகள் - மனிதத் தன்மை - அடியோடு மடிந்து போகின்றனவா?
மடிந்து விடுகின்றன
என்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில் போர் முடிந்து வேறோர் புதிய நிலை
ஏற்பட்டதும், மீண்டும்
மெள்ள மெள்ள அந்தப் பண்புகள் மலருகின்றன; சமுதாயத்துக்கு மணம்
அளிக்கின்றன. மடிவதில்லை; ஆனால், அந்தப்பண்புகள் மங்கி விடுகின்றன; மறைந்து
விடுகின்றன. பகைவனிடம் மூண்டுவிடும் வெறுப்புணர்ச்சி, அந்தப் பண்புகளை மூலைக்குத்
துரத்திவிடுகின்றன! கண் சிமிட்டிக் களிப்பூட்டும் விண்மீன்களைக் கருமேகம் மறைத்து
விடுவது போன்ற நிலை!

போர் முடித்ததும், புது உறவு ஏற்பட்டாலும் அதில் நம்பிக்கையற்ற எண்ணமே இருநாட்டு மக்களிடமும் காணப்படுகிறது.
அதிக காலம் தம்மிடம் நட்பாக பழகி தமது நிறுவனத்தில் கடமையுணர்வுடம் வேலை பார்த்தவர்களைக் கூட அவர்கள் நாட்டிற்குத் துரத்திவிடுகிறது, மனதில் எழுந்த வெறுப்புணர்ச்சி!

இந்த உலகில் இனம், சாதி, மதம், மொழி, நாடு போன்ற பல பாகுபாடுகளால் வெறி பிடித்து அலையும் மனிதர்களில்லா நாடு இல்லவே இல்லை...
கூடி வாழ்வது போல் தோன்றினாலும் அவர்களின் மனதில் ஒரு மூலையில் அந்த வெறுப்புணர்ச்சி வளர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது...

போர்க்குணம் என்பது செயற்கையானது.
மனித்தன்மை என்பதே இயற்கையானது..
இதை அறியத்தவறிய மனிதர்களாலே உலகிலே மனித இனம் அழிக்கப்படுகிறது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Jun-17, 8:36 pm)
பார்வை : 481

சிறந்த கட்டுரைகள்

மேலே