ஊட்டியின் உறவு

விடுமுறை தினங்களை எதிர்நோக்கியதும்,
அதே ஆறிப்போன கேள்வி,
இம்முறை கழிப்பது எப்படி?!

மனத்தின் ஓரத்தில் கண் சிமிட்டினாள்,
கல்லூரி சுற்றுலாவில் சென்ற ஊட்டி.
மலைகளின் ராணி!
அழகுதான் என்றாலும் புதிதாய் இல்லை!
புழங்கியவைகளைப் மறுமுறை புழங்க,
கடந்ததை அசைபோட,
கிழவனும் இல்லை நான்!

மீண்டும் கண் சிமிட்டி,
மயக்கம் தரும் நடை நடந்து,
அழைத்தாள் மலைராணி!
"சொன்னா கேக்க மாட்டாய்?
உன்னையே பார்த்துக் கொண்டிருந்தால்
மற்றவைகளை எப்போ பார்ப்பது?"
குரல் உயர்த்தினேன்!
"கிட்டத்தட்ட பத்து வர்ஷம் ஆகுது என்ன பாத்து!
என்னை ஞாபகம் இருக்கா இல்லையா?"
கோபம் கொண்டாள்!
நான் செவிசாய்க்காததால்,
மேலும் கோபமுற்றாள்!
"வேண்டாம் வேண்டாம்
சொன்னால் கேள்"
என்று முடிப்பதற்குள்,
ஊட்டியில் உலவிய
காட்சிகளை திரையாய் விரித்தாள்!
பக்கவாதம் வந்தாற்போல்,
என் பிடி நழுவி காண்கிறேன்!

காலை
பனி தூங்கும் தேயிலை மேல்,
அதன் தூக்கத்தை கலைக்காமல்,
படம் பிடிக்கிறேன்!
மந்திர வாசனை!
படர்ந்து விரிந்த,
அவளின் பச்சை மார்பில்,
காமிரா எறும்பு நான்!
என்னைத் தட்டி உதறாமல்,
உலவ விடுகிறாய்!
ஆக்சிஜன் இங்கே கால் தூசி!

நூறடி மேலே ஒரு
ஓட்டை டீ கடை!
இன்னும் திறக்காத
அதன் ஈர மரவாசல் ஜன்னலுக்கு,
கொல்லும் குளிரில்,
பல்லும் நடுங்க,
புல்லும் பூவும் பனித்துளியும்,
படம்பிடித்து காத்திருக்கிறேன்!

வெறிச்சோடிய சாலையை
மலைப்போடு பார்க்கிறேன்!
மலை ராணி அவளை,
மணமுடிக்க நினைக்கிறேன்!
தூரத்தில் நாய் ஒன்று ஓடுகிறது!
கிளைகளில் குரங்குகள் தாவுகிறது!
சைக்கிள் பெல் எதிரொலிக்க,
கையில் பாலுடன்,
டீ கடை சொர்க்கவாசல் திறந்தார்,
எலும்பும் தோலுமாயுள்ள,
கடைக்காரர்!

பொத்தல் லுங்கியை தூக்கிக் கட்டி,
கழுவாத குவளையில்,
மீளாத கவலையில்,
தேநீரை நீட்டினார் கடைக்காரர்!
அவர் முகம் பார்க்க மாட்டேன்,
அவர் சோகம் கேட்க மாட்டேன்,
ஆணவச் சுற்றுலாப் பயணி நான்!கொஞ்சமாய் துருப்பிடித்த,
குவளையின் உதட்டில்,
கொஞ்சமும் தாமதிக்காத
என் உதடு பட்டதும்,
"உலகத்ல இந்த மாதிரி டீ எங்க கிடைக்கும்?"
என்னை நானே கேட்டுக் கொண்டேன்!
அழுக்காய் கிடைக்கும் அளவில்லா அமிர்தம்!
மூக்கும் வாயும்
பக்கத்து பக்கத்தில் இருப்பதன்
உபயோகம் உணர்கிறேன்!

காலை காதலித்தது,
மாலை மந்திரிச்சி விட்டது!
சுற்றிய களைப்பில்,
ரோட்டோர மைல் கல்லில்,
என் சக்தியெல்லாம் உறிஞ்சி
ஓங்கி நிற்கும்
யூக்கலிப்டஸ் மரங்களின் முன்னால்
உட்கார்ந்ததும் பார்த்தேன்,
எதிரில் வேகவைத்த வேர்க்கடலை!

ஆவி வாசனை மூக்கைத் துளைக்கிறது!
மிஞ்சிய சக்தியை ஒன்று திரட்டி நெருங்குகிறேன்!
"அண்ணே ஒண்ணு குடுங்க" என்றதும்,
விளையாடியது அவரின் கைகள்!
தினப்பழக்கத்தின் உச்ச கட்டம் தொட்டு, அவரின்
தசை ஞாபகங்கள் தம்பட்டம் அடிக்க,
பச்ச மாங்காய் தூவுவதோடு,
முடிவுக்கு வந்தது
அவரின் சர்கஸ்!
பாராட்ட மாட்டேன்!

கடலையுடன் கடலை போடும் மனதிற்கு,
சுற்றும் தெரியவில்லை,
சூடும் தெரியவில்லை!
நெருப்பே மென்றாலும்,
வாய் ஒன்றும் சொல்லாது!
மெல்கிறேன்! கரைகிறேன்! உருகுகிறேன்!
மாவாய் மாறும் வெந்த கடலை,
வாய் ஒன்பதும்மூடி அனுபவிக்கிறது!

காட்சித் திரை மூடினாள்!
சிரித்தாள்!
"இப்போ வருவல்ல?
உன்னால இதெல்லாம்
மறக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்"
என்று புருவம் நகர்த்தினாள்!
"மலைராணி என்ற கர்வமா?
உன் வேலைய காட்டிடல்ல?!" என்கிறேன்,
நக்கலாய் அமர்ந்து,
கால் மேல் கால் போடுகிறாள்!

"உறுதியாய் ஒன்று கேள்.
இம்முறை உன்னைப் பார்க்கப் வரப்போவதில்லை!
மேற்குப் பக்கம் செல்கிறேன்.
உன் அப்பன் இமையனைப் பார்க்க!!
நேபாளம் செல்கிறேன்.
ஆறு நாட்கள்!!"
என்று அடுக்கினேன்!
அதிர்கிறாள்!
"உண்மையாவா??"
கண்வழி கேட்டாள்!
"ஆமாம்"
கண்வழி சொன்னேன்!

உண்மையை உணர்ந்து,
உடைந்தவள் தூர நடந்தாள்!
"என்னை மன்னித்துவிடு,
உன்னை மறக்கமாட்டேன்,
மீண்டும் கண்டிப்பாய் சந்திப்போம்" என்கிறேன்
கேட்காமல்
அதே மன ஓரத்தில் அமர்ந்து மறைந்தாள்!

- ஒளி முருகவேள்

எழுதியவர் : ஒளி முருகவேள் (22-Jun-17, 11:51 am)
பார்வை : 1656

மேலே