பசுவும் சிங்க ராஜாவும்

விவசாயி ஒருவன் நாலு பசு மாடுகள் வளர்த்து வந்தான். அவற்றை மேய்ச்சலுக்கு தினமும் அழைத்து செல்வது அவன் வழக்கம். விவசாயி மரத்தின் அடியே இசைத்தபடி இருப்பான் ஒரு சின்ன புல்லாங்குழலை. பின் சிறிது நேரம் ஓய்வெடுப்பான் அந்த மரத்தின் அடியிலே.

குட்டி தூக்கம் கலையும் போது அவன் பசுக்கள் வயிறு ரொம்ப உண்டிருக்கும். அவன் கூப்பிட்டதும் அன்பாய் ஓடிவந்து அவனை மகிழ்ச்சியாய் பின் தொடரும் பசுக்கள் .

இப்படி மகிழ்ச்சியா வாழ்ந்த பசுக்களுக்கு திடீர் சோதனை ஓன்று வந்தது. அது என்ன என்றால் அவர்களின் மேய்ச்சல் நிலத்தில் எருது ஓன்று வந்து அவர்களை தொந்தரவு செய்தது . ஒரு நாள் இல்லை பல நாளாக இந்த எருதுகளின் தொல்லை தாங்க முடியவில்லை.

வயதான ஒரு பசு பொறுமையாக எருதிடம் சொல்லி பார்த்தது. தம்பி எருது தம்பி நீங்கள் அந்த பக்கம் மேய்ந்து கொள்ளுங்கள். நாங்கள் இந்த பக்கமாக மேய்ந்து கொள்கிறோம் என்றது. ஆனால் திமிர் பிடித்த எருதுவோ தினம் இவர்களை வந்து இடித்தது மேய விடாமல் தடுத்தது. அன்று இளம் பசுங்கன்றை தன் கூறிய கொம்பால் காயப்படுத்தியது. வலி தாங்காமல் அது கத்த விவசாயி விழித்து கொண்டான்.. அவன் தடியை எடுத்து வருவதற்குள் எருது ஓடி விட்டது.

அன்று இரவு அந்த குட்டி பசு வலியால் துடித்தது.இதை கண்டதும் வயதான பசுவின் பொறுமை பறந்து போனது.இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்ட வேண்டும் என முடிவு எடுத்து தன் தொலைபேசியை எடுத்து பேசியது. தன் பழைய நண்பனான காட்டு ராஜா சிங்கத்துக்கு தொலைபேசியில் கூப்பிட்டது!!!!.

தன் நண்பனின் கஷ்டத்தை கேட்டு வருந்திய சிங்கம் மேய்ச்சல் நிலத்தின் முகவரியும் எருதுகள் வரும் நேரத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு நாளை கட்டாயம் வருவதாக சொன்னது.பல நாட்களுக்கு பிறகு பசு நிம்மதியாக உறங்கியது அன்று.

மறுநாள் வழக்கம் போல எல்லா பசுக்களும் மேய்ச்சலுக்கு புறப்பட்டனர். குட்டி பசு மட்டும் பயத்தால் வர மிகுந்த தயக்கம் காட்டியது. என் நண்பன் வருவான் தைரியமாக நீ வா என்று சொல்லி அழைத்து போனது வயதான பசு.

வழக்கமான சீண்டலுடன் எருது தொந்தரவு செய்ய வர அங்கு புதருக்குள் ஒளிந்திருந்த சிங்கம் நாலு கால் பாய்ச்சலில் எருது மேல் தாவி பாய்ந்து அதன் கழுத்தை கவ்வியது .இதை சற்றும் எதிர்பாராத எருது சிங்கத்தின் பிடியில் அடங்கி உயிர் விட்டது .

பசு நன்றியோடு சிங்க ராஜா வின் முன் சென்று அடிபணிய நண்பன் சிங்க ராஜா பசுவை தன் தோளோடு சேர்த்து கொண்டது. பசு கூட்டம் நன்றி நன்றி என்று மீண்டும் சொல்லி பூரித்து நின்றது. சிங்க ராஜாவோ எனக்கு எருது விருந்து அளித்த உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்றது . எருதை நன்றாக ஆசை தீர சாப்பிட்டு முடித்த சிங்கம் குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள இடத்தில நான் அதிக நேரம் நிற்பது நல்லதல்ல. உனக்காக தான் வந்தேன் நண்பா விடைபெறுகிறேன் என்று காட்டு புதருக்குள் ஓட துவங்கியது காட்டை நோக்கி.

பசுக்கள் அன்று முதல் அச்சம் இன்றி மேய்ந்து திரிந்தது அந்த நிலத்தில்.

பின் குறிப்பு:
பசுவுக்கு சிங்கம் நண்பனா எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது பெரிய கதை. அதை இன்னொரு சந்திப்பில் கூறுகிறேன்,
கதை முழுவதும் கற்பனையே. ஒரு குழந்தையாக மாறி கதையை வாசியுங்கள் .முடிந்தால் இந்த கதையை ஒரு குழந்தையிடம் கொண்டு சேருங்கள்.

என் எழுத்துக்கள் உங்களோடு எதாவது பேசியிருந்தால் என்னோடு பேசுங்கள்.
யாழினி வளன்..

எழுதியவர் : யாழினி வளன் (23-Jun-17, 1:55 am)
பார்வை : 1226

மேலே