எனக்கு அம்மாயில்லை

''அம்மா இருந்திருந்தா நான் ஸ்டிக்கர் விக்க வந்திருக்க மாட்டேன்கா - கலங்கும் சிறுமி.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மின்சார ரயிலுக்காக எல்லோரின் கண்களும் வழித்தடத்தில் காத்திருக்க, என் கண்கள் அந்தச் சிறுமியையே பார்த்துக்கொண்டிருந்தது.

ஒரு கையில் மஞ்சள் பை; மற்றொரு கையில் விநாயகர், முருகர், ஏசுநாதர்,மெக்கா போன்ற கடவுள்களின் ஸ்டிக்கர்ஸ்.

அழுக்குப் பாவாடையும் பள்ளிச் சீருடை சட்டையையும் அணிந்திருந்தாள்.

ரயிலுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று, கையில் இருக்கும் ஸ்டிக்கர்களைக் காட்டுகிறாள். எல்லோரின் பார்வையும் சில நொடிகளில் அதை நிராகரிக்கிறது.

நம்பிக்கை தளராமல் அடுத்தடுத்து நகர்கிறாள். முதலில் வாங்க மறுத்தவர்கள், அடுத்தடுத்த முறை வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மீண்டும் காட்டுகிறாள்.

அந்தச் சிறுமியிடம் பேச அந்த நம்பிக்கை ஒன்றே போதுமானதாக இருந்தது. அவள் அருகே சென்றதும், “அக்கா ஸ்டிக்கரு வேணுமாக்கா? புக்குல, வீட்டு சொவத்துல ஒட்டிக்கலாம்கா. ப்ளீஸ்க்கா ஒண்ணாவது வாங்குங்க்கா என்றாள் எதிர்பார்ப்பு நிறைந்த குரலில்.

''சரி, நான் வாங்கிக்கறேன். நீ ஸ்கூலுக்குப் போறியா?” என்று கேட்டேன்.

“இன்னிக்கு சண்டே. அதனாலதான்...” என்றவளிடம் தொடர்ந்து பேச முற்பட்டபோது திடீரென, “அக்கா உங்களுக்கு ஸ்டிக்கர்தானே வேணும்? எதுக்கு என்னைப் பத்தி கேக்குறீங்க. நீங்க ஸ்டிக்கரே வாங்க வேணாம். நான் போறேன்” என்று நகர்ந்துவிட்டாள்.

அதற்குள் ரயில் வந்துவிட கூட்டம் அடித்துப் பிடித்து ஏறியது. சில நிமிடங்களில் பிளாட்பாரத்தில் கூட்டம் குறைந்துவிட்டது.

சரி நீ பேச வேண்டாம்.. ஸ்டிக்கர் மட்டும் கொடும்மா என்றபடியே ஸ்டிக்கர்களை வாங்கினேன். கொடுத்துவிட்டு சிறிது தூரம் சென்றவள் திரும்பி வந்து

'நீங்க எங்க வேல பாக்குறீங்க... என்ன பத்தி தப்பா எழுத மாட்டீங்கள்ல' என்றபடியே பேச ஆரம்பித்தாள்.

“எம் பேரு சுதா (பெயர் மற்றும் வசிப்பிடத் தகவல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).கோயம்பேடுல வீடு. என் அம்மா ஆக்சிடென்டுல இறந்துட்டாங்க. அப்பா வெளியூர்ல இருக்காரு. வேற கல்யாணம் பண்ணிடுச்சு. நான் என் பெரிய அக்கா வீட்டுல தங்கி, பக்கத்துல இருக்குற கவர்மென்ட் ஸ்கூல்ல ஆறாங்கிளாஸ் படிக்கிறேன். தெனமும் காலையில் சீக்கிரமே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துருவேன். கொஞ்ச நேரம் ஸ்டிக்கர் வித்துட்டு, ஸ்கூலுக்குப் போவேன். சாயந்திரம் வந்ததும் மறுபடியும் ஸ்டிக்கர் விற்பேன். ராத்திரி தூங்கறதுக்கு மட்டும்தான் வீட்டுக்குப் போவேன். இங்கே நான் மட்டும் தனியா இல்லே. என் ரெண்டாவது அக்காவும் வருவாங்க. அவள் வேற ஸ்டேஷன்ல விற்கும்போது நான் இங்கே விற்பேன். இப்படி மாறி மாறி விப்போம்” என்றாள்.

''இதுல என்ன காசு கிடைக்கப்போகுது? ஒழுங்கா ஸ்கூலுக்குப் போய் படிச்சாதானே நல்ல நிலைக்கு வரலாம்'' என்றதும் உதடு பிரியாமல் சிரிக்கிறாள்.

“எனக்கும் நல்லாப் படிக்கணும்னு ஆசைதான். அதனாலதான், கரெக்ட்டா ஸ்கூல் போய்ட்டிருக்கேன். என்கிட்ட நிறைய காசு கிடையாது. கையில் இருக்கிற காசுக்கு ஏத்த மாதிரிதானே பொருளை வாங்கி விற்க முடியும். இந்த ஸ்டிக்கர்களை அஞ்சு ரூபாய்க்கு வாங்கி, ஆறு ரூபாய்க்கு விற்குறேன். எப்படியும் ஒரு நாளைக்கு அறுவது ரூபா சேர்த்துடுவேன். அதைக் கொண்டுபோய் அக்காகிட்ட கொடுப்பேன். அவங்க சேர்த்து வெச்சுப்பாங்க.

தெனம் தெனம் சாமி படங்களை விக்குறேன். ஆனாலும் எனக்கு ஒரு ஆசை. என் அம்மா படத்தை இந்த மாதிரி வரைஞ்சு ஸ்டிக்கராக்கி, வீட்டுல ஒட்டணும். அவங்க இருந்திருந்தா நானும் என் சின்ன அக்காவும் ஸ்டிக்கர் விற்கவே வந்திருக்க மாட்டோம். அம்மா இறந்து போயிட்டாங்கக்கா இங்க என்னைப் பாக்குறவங்க எல்லாம் 'இப்புடி தனியா சுத்துறியேமா... பயமே இல்லையா?'னு கேட்பாங்க.

நான் எதுக்குக்கா பயப்படணும்? என் கையிலதான் எல்லா சாமிங்களும் இருக்காங்களே. அவங்க துணையா இருப்பாங்க'' என்றபடி ஸ்டிக்கர்களை இறுகப் பற்றிக்கொள்கிறாள்.

பிச்சைக்காக கையேந்தாமல் உழைத்து பணம் சேர்த்து முன்னுக்கு வரணும்னு நினைக்கிற அந்த சிறுமியின் மீது மரியாதை வருகிறது.

தேவையில்லை என்றாலும் சில ஸ்டிக்கர்களை வாங்கிக்கொண்டேன். நமக்கு வெறும் படமாகத் தெரியும் அந்த ஸ்டிக்கர்கள் அவளின் வாழ்வாதாரம் மட்டுமல்ல; தைரியமும் நம்பிக்கையும், பாதுகாவலும் கூட..!

சற்று நேரத்தில் எனது ரயில் வர ஓடிசென்று ஏறுகிறேன். மனதில் ஏதோஒரு தவிப்பு.

இன்றைய சமூகத்தில் அவள் சீரழிக்கபடாமல் கடைசிவரை அவள் நம்பும் தெய்வங்கள் அவளை காப்பாற்றுமா என்ற கேள்வியோடு நான் ரயிலில் ஏறுகிறேன்..

ரயில் புறப்படுகிறது...
அவள் சொன்ன "எனக்கு அம்மா இல்லை" அந்த வார்த்தை ரயிலின் சத்தத்தை மீறி என் காதில் ஒலித்து கொண்டேயிருக்கிறது ..!

(உண்மை நிகழ்வு)

எழுதியவர் : முகநூல் (23-Jun-17, 3:53 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 449

மேலே