இதயமெல்லாம் விடமே

பிறக்கும் போது நீ அரசனாவாய், இராணியாவாய் என்று ஆசையென்னும் விடத்தை விதைத்து வளர்த்துவிட்டு,
ஒழுக்க நெறியைத் தகர்த்தெறிந்து அன்பை வேரறுத்து வீரமென்று பாவமாற்றிக் கருணையற்ற செயல்களை புரித்து அதையே இதிகாசமென்று புனைந்து மக்களைக் குழப்பி ஆண்டவன் அருள் செய்தானென செப்புகின்ற மொழியினில் எவ்வித ஈர்ப்பும் உண்டாகவில்லை எனதன்பே...

தர்ம, அதர்மப் பாதைகளுக்கிடையே பயணிக்கப் பகுத்தறிவு துணையாயிருக்க, மனச்சாட்சி தீர்ப்பளிக்க,
அன்பே ஞானமென உணராத ஞானில மக்களிடையே நீதியும், நியாயமும் செத்துவிட்டது எனதன்பே...

பொறாமை ஒளிரும் கண்களுடைய நெஞ்சில் குடி கொண்டிப்பதோ சுயநலமே எனதன்பே...
சாபங்கள் வழங்கேன்...
காலம் தரும் தீர்ப்பில் யாரிட்ட சாபமோ என்றே இந்த சமுதாயம் புலம்பும் நாள் வெகுதூரமில்லை எனதன்பே...

வழிந்தோடும் இரத்தம்,
தாகம் தீர்க்கக் குடிநீரில்லா நிலை,
பிள்ளை தின்னும் மிட்டாயிலும் கலந்திருக்கும் விடம்,
கெடுதி செய்யும் கெடுமதியுடையோர்,
சுவாசக் காற்றில்லா நிலை,
அதிலாபமே உயிரைக்குடிக்க,
அரசாங்கம் ஆட்சியாளர்களின் சொத்தாகி, ஏழை எளியோரின் இரத்தம் குடிக்க, விவரிக்க முடியாத நரகமே என்று உலகமே மாறிவிடப் போகிறது எனதன்பே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Jun-17, 9:37 am)
பார்வை : 380

மேலே