பணம்

பணம் - சிறுகதை
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள், வர்தா புயலால் பாதிக்கப்பட்டு மின்வசதி இல்லாமல் சென்னையின் பல இடங்களில் தொலைபேசி டவர்கள் சரிவர இயங்கவில்லை. சந்திரன் தனது கைப்பேசியில் உள்ள இரண்டு சிம் கார்டுகளிலும் சிக்னல் இல்லாததை பார்த்து விட்டு, வெறுப்புடன் தனது ஸ்விப்ட் காரை சாலையில் ஓட்டிக்கொண்டு இருந்தான். பின்புறத்தில் அவனது நண்பர்கள் அருண் மற்றும் ஜார்ஜ் அமர்ந்திருந்தனர்.
அது சென்னையின் புறநகர் பகுதி என்பதால் புயல் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. இருப்பினும் சாலையின் இருபுறங்களிலும் ஆங்காங்கே மரங்கள் தரையோடு படுத்துக் கொண்டிருந்தன. “சார், உங்க போன்ல சிக்னல் இல்ல, என் போன்ல சுத்தமா சார்ஜே இல்ல. ஏரியால ரெண்டு நாளா பவர்கட். ஏதோ மரம் சாய்ந்து ட்ரான்ஸ்பார்மர் மேல விழுந்துருச்சாம், எப்ப சரியாகும்னு கூட தெரியல.” என்று சந்திரனிடம் புலம்பினான் ஜார்ஜ்.
உடனே அருண் இருவரையும் பார்த்து “ஹும்ம்! ஊரே புயல் வந்து சின்னா பின்னமா போச்சு, இதுல நாம என்னன்னா வேலைய விட்டுட்டு விருந்து சாப்பிட போறோம்?”, சார் தெரியும்ல கைல சுத்தமா காசு இல்ல, நான் இன்னும் என்கிட்ட இருக்குற பழைய 500, 1000 ரூவா தாள மாத்தவேயில்ல” என்றார் அருண். “என்கிட்டயும் ஹார்ட்கேஷ் இல்ல. பட் நோ பிராப்ளம், எதுக்கு கேஷ், என்கிட்ட கார்ட் இருக்கு. பீட்சா ஷாப்னா கண்டிப்பா ஸ்வைப்பிங் மெஷின் இருக்கும்.” என்றார் சந்திரன்.
“என் கைலயும் காசு இல்ல சார், நீங்கதான் பாத்துக்கணும், நேத்து ஏ.டி.எம் ல முக்கா மணி நேரமா நின்னு, கிட்ட போகும் போது காசு காலியாகிடிச்சு, ஹ்ம்ம், நான் சம்பாதிச்ச காசையே என்ன எடுக்க முடியாம பண்ணிட்டானுங்க, நாசமா போறவனுங்க” என்று வினவினான் ஜார்ஜ்.
இதை கேட்டுகொண்டே சந்திரன் காரை ஓட்ட , அந்த காரில் இருந்த டிஜிட்டல் கடிகாரம் மணி 1:09 PM என காட்டியது. அந்த மதிய வேளையிலும் சூரியன் மந்தமாகவும், மேகங்கள் வானத்தில் சூழ்ந்து மழை வருவது போலவும் இருந்தது. வழக்கமாக அலுவலகத்தில் 12.30 மணிக்கே சாப்பிடுவதால் இப்பொழுது மூன்று பேருக்கும் சரியாக பசி எடுத்துக்கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் பீட்சா ஷாப் சாலையின் ஓரத்தில் தென்பட்டது. சந்திரன் நேர்த்தியாக காரை வளைத்து பார்க்கிங்கில் நிறுத்தினான். மூவரும் உள்ளே நுழைந்தனர்.
உள்ளே நுழைந்ததும் அவ்விடத்தில் பரவியிருந்த பீட்சா தயாரிக்கும் வாசனை மூவரின் மூக்கையும் பதம் பார்த்தது. அவசரமாக சென்று கவுண்டரை சில விநாடிகளில் அடைந்தனர். “யெஸ் சார்” என்று ஆங்கிலத்தில் பெண்ணொருத்தி கேட்டாள். அங்கே இருந்த மெனு கார்டை எடுத்து மூவரும் பார்த்தனர். “எனக்கு ஒரு பெப்பி பன்னீர் பீட்சா” என்றார் சந்திரன். “உனக்கு எந்த பீட்சா வேணும்” என்று ஜார்ஜை பார்த்து கேட்க, அதற்கு அவன் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் “நீங்களே ஏதாவது ஆர்டர் பண்ணுங்க சார்” என்றான்.
“எனக்கு ஒரு சிக்கன் பீட்சா ஆர்டர் பண்ணிடுங்க சார்” என அருண் கூற, சந்திரன் அப்பெண்ணை நோக்கி “எக்ஸ்கியூஸ்மீ, ப்ளீஸ் மேக் திஸ் ஆர்டர், ஒன் பெப்பி பன்னீர் பீட்சா, ஒன் சிக்கன் சலாமி பீட்சா தென் ஒன் கோல்டன் டிலைட் பீட்சா” என்றார். பின்பு அருணை பார்த்து “குடிக்க என்ன வாங்கலாம்?” என கேட்க, ஜார்ஜ் சந்திரனிடம் “சார் எனக்கு ஒரு கோக் வேணும்” என்றான். “எனக்கும் கோக் போதும்.” என அருணும் பதிலளித்தான்.
சந்திரன் தனக்கு வேண்டிய மிராண்டாவையும் சேர்த்து அப்பெண்ணிடம் ஆர்டர் செய்தான். “ஓகே சார், ஆர்டர மறுபடியும் சொல்றன் செக் பண்ணிகோங்க, ஒன் பெப்பி பன்னீர், ஒன் சிக்கன் சலாமி தென் ஒன் கோல்டன் டிலைட் அண்ட் டூ கோக் அண்ட் ஒன் மிராண்டா, கரெக்ட்” என்று அப்பெண் முடிக்க “யா, கரெக்ட்.” என்று கூறிக்கொண்டு அப்பெண்ணை பார்த்து புன்னகைத்தார் சந்திரன்.
பிறகு அப்பெண் தனக்கு முன் இருந்த கணினியை பார்த்துவிட்டு பின்பு சந்திரனை பார்த்து “ஒகே சார், டோட்டல் 1280 ருபீஸ், வாட் ஒரு 159.50 அண்ட் சர்வீஸ் டேக்ஸ் 66 ருபீஸ் அண்ட் த கிரான்ட் டோட்டல் இஸ் 1506/- ருபீஸ் என்று கூறியபடியே பில்லை எடுத்து சந்திரனை பார்த்து “சார் , கேஷ்ஆ? இல்ல கார்டா?” என்று கேட்டாள்.
“கார்டு” என்று கூறியபடியே சந்திரன் தனது பர்சில் இருந்த எச். டி. எப். சி கார்டை எடுத்து அப்பெண்ணிடம் நீட்டினான். அப்பெண் அந்த கார்டை வாங்கி ஸ்வைப்பிங் இயந்திரத்தில் செருகி ஒரு தேய் தேய்த்து சில பொத்தான்களை அழுத்தினாள்.தீடிரென அவள் இன்முகம் சற்று மாறியது. மீண்டும் அந்த இயந்திரத்தில் சந்திரனின் கார்டை தேய்த்தாள். பலன் ஏதும் இல்லை. “சாரி சார், நெட்வொர்க் ப்ராப்ளம்!” என்றாள் சந்திரனை பார்த்து. அவனுக்கு திடீரேன தூக்கி வாரி போட்டது போல் இருந்தது.
“என்ன மேடம் சொல்றீங்க, இன்னொருவாட்டி ட்ரை பண்ணி பாருங்க” என்றார் அருண். மீண்டும் முயற்சித்து பார்த்துவிட்டு, “சாரி சார், டவர் கெடைக்கல” என்றாள். மூவருக்கும் அதிர்சியாகத்தான் இருந்தது.ஏற்கனவே பசியில் வாடிக்கொண்டு இருந்த அவர்களுக்கு இச்செய்தியை ஏற்பதற்கு முதலில் அவர்கள் வயிறு தயாராக இல்லை.
இதுவரை தனது கார்டை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பணப் பரிவர்த்தணைகளை, சந்திரன் செய்துள்ளான். ஆனால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்ததில்லை. “அப்போ இவ்வளவு நேரம் ஆர்டர் செய்தது அனைத்தும் வீணா? வெறும் வயிற்றோடுதான் வீட்டிற்கு செல்ல வேண்டுமா? தேவையில்லாமல் இவர்களை வேறு அழைத்து வந்துவிட்டேனே . என தன் மனதில் நினைத்துக்கொண்டு, “ப்ளீஸ் மேடம், இன்னொரு தடவ ட்ரை பண்ணி பாருங்க, நாங்க ரொம்ப பசியோட இருக்கோம்” என்றான்.
“ஐ அம் எக்ஸ்டீரிம்லீ சாரி சார், உங்களுக்குத்தான் தெரியுமே, வர்தா புயல் வந்ததால செல்போன் டவர் எல்லாம் பவர் இல்லாம வேலை செய்யலன்னு, எப்டி செல்போன் சிக்னல் இல்லையோ, அதே மாதிரி இந்த ஸ்வைப்பிங் மெஷினுக்கும் சிக்னல் கெடைக்கல சார். நீங்க வேணும்னா கேஷ் பே பண்ணிடுங்க” என்றாள்.“கேஷ் இருந்த பே பண்ணமாட்டோமா” என அப்பெண்ணை முறைத்துக் கொண்டு மனதில் நினைத்துக்கொண்டான் ஜார்ஜ்.
பின்பு மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து செய்வதறியாது முழித்தனர். பசியில் என்ன செய்வது என்று தெரியாமல் ஜார்ஜ் அப்பெண்ணிடம் “மேடம், செக் கொடுத்தா வாங்குவீங்களா?” என புலம்பினான். அதற்கு அப்பெண் புன்சிரிப்புடன் இல்லை என்பது போல் தலையாட்டினாள். சந்திரனும், அருணும் ஜார்ஜை முறைத்தனர்.
சற்று தூரத்தில் இருந்த டேபிளில் நான்கு இளைஞர்கள் பீட்சாவை ருசித்து சாப்பிடுவதை கண்ட அருண் அதை பிடுங்கி தின்பதை போல் நாக்கில் எச்சில் ஊற முறைத்துப் பார்த்தான். “தனது அக்கவுண்டில் நாலரை லட்சம் இருந்தும், சமயத்தில் பசிக்கு ஒரு ஆகாரம் வாங்கி உண்ண முடியவில்லையே!” என சந்திரன் மனதில் வருந்தினான். அப்பொழுதான் சந்திரனுக்கு உரைத்தது பணமில்லா பரிவர்த்தணை எங்கேனும் ஒருநாள் கைவிடும் என்று.
“சரி ஓகே, தேங்க்ஸ் என அப்பெண்ணை பார்த்து சந்திரன் கூறிவிட்டு, மூவரும் அந்த உணவகத்தை விட்டு ஏமாற்றத்தோடு வெளியேறினர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கோபத்தில் காருக்குள் ஏறும் முன்பு அருண் “டிஜிட்டல் இந்தியா வாழ்க!” என பசியோடு கத்திவிட்டு உள்ளே ஏறினான். முற்றும்.
-அகரன்.


(ஜூன் 2017, சென்னை. +91 9941189319.)

எழுதியவர் : அகரன் (24-Jun-17, 11:15 am)
சேர்த்தது : அகரன்
Tanglish : panam
பார்வை : 508

மேலே