ம் - கோபி சேகுவேரா

'ஒரே பாதையில் நடந்திருக்கிறோம்
ஒரே அழகியல் ரசித்திருக்கிறோம்
ஒரே கனவுகள் கண்டிருக்கிறோம்
ஒரே இடங்களில் நின்றிருக்கிறோம்
ஆனால்
அவளும் நானும்
யாரென அறிந்திடாமலே..

இத்தனை பெரிய உலகம்
எத்தனை காலம் எடுத்துக்கொண்டது
இரு துருவம் இணைய..

எங்களிடமிருந்து
இந்த தாமதத்திற்கு பழியும்
இப்பவாது
இணைத்தமைக்கு பெருங்காதலும்
இந்த காலத்திற்கு உண்டு..'

நினைவுகள்தான் எவ்வளவு சுகம். எல்லாத்தையுமே எளிமையாக கடந்து விடமுடியாது. எளிமையானதுதான் எல்லாம். கடந்துவிடலாம் கண்ணீர் கசிந்து காதலுருகி. நம் நினைவின் ஆழமே நினைவின் காதலை தீர்மானிக்கிறது.

எங்களை பற்றி எழுத நான் மட்டும் போதுமா என்ன? என் உணர்வுகளை நான் எழுதுகிறேன். அவள் உணர்வுகளை அவளாய் மாறி எழுதுகிறேன் அவளின் அனுமதியோடு.
எங்கள் நினைவுகள் கிளறிவிடுகின்ற சிலவற்றை ஒரு காதல் பாடலைபோல ஒலிக்கவிடுகிறோம். எங்கள் காதுகளில் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது. யுவன் குரலில் 'அநியாய காதல் வந்ததே.....'

எங்களில் இருக்கும் அவன் அவளில், இப்போது அவள் சொல்கிறாள் அவனை பற்றி.. 'அவ்வளவாக அப்போதெல்லாம் எதையும் நம்பியதில்லை. எதையும் உண்மையென நினைத்தில்லை. நிறைய காதலுண்டு அதில் நிறைய பெண்களும் உண்டு. கிரிக்கெட் பிரியன். இசை வெறியன், ராஜா யுவனென எல்லாமே அறிமுகமானது இவனால்தான். அது புத்தக ஆர்வம் முளைவிட்ட பருவம். எளியோரின் எளியவன்'

'இதுவரை எத்தகைய எண்ணமுமில்லை. எந்த காதலுமில்லை எந்த நபர்களுமில்லை. மிக எளிய பிள்ளை. கலங்கமில்லா உள்ளம். எல்லாவற்றிலும் தைரியம். எல்லாமே நம்பும் மனம். ஒவ்வொரு சொல்லும் அன்பின் மணம்' அவளை பற்றி அவன்.

இவைகள்தான் முதலாக நாங்கள்.. எங்களை பற்றி தெரிந்துகொண்டவைகள். பள்ளி முடிந்து கல்லூரியின் மடியில் தவழ தொடங்கிய நாட்கள். வெளி உலக பரிட்சியம் அவ்வளவாக இல்லை. முகங்கள் தெரியா சாயல்களை சேமித்து கிடந்தகாலமது. பள்ளி தோழியின் மூலமாக அறிமுகமான.. காலம் சேமித்த காதலது. மழையென விழும் வானமாய் மகிழ்ச்சி மயக்குவதை எப்படி சொல்ல. அப்படித்தான் அவனுக்கு அவள் கார்முகி என.. அவளுக்கு அவன் கார்க்கி என.. அறிமுகமானோம்.

பக்கத்து பக்கத்து ஊர்தான் ஆனால் பார்த்து இல்லை. அவள் படித்த பள்ளி அவன் தினமும் பயணித்த அதே பாதையில்தான். ஆனால் சந்திக்கவே இல்லை. அவள் படித்துவந்த அதே பள்ளியில் அவன் சேரும்போது அவள் வேறு பள்ளி மாறுகிறாள். நினைத்துகூட பார்க்க முடியவில்லை இத்தனை பெரிய உலகம்... எத்தனை காலம் எங்களை சந்திக்கவே விடவில்லை. வன்மமென காலம் பிரிக்கையில் அங்கே புறாக்கள் பறந்துகொண்டிருந்தது கண்களுக்கு தெரியாமலே.

280 கி.மீ தொலைவில் எங்களின் கல்லூரிகள். தூரங்களெல்லாம் உடல்களுக்குதானே.. மனதில்கில்லையே. குரல்களில் சாயல் மட்டுமே தெரியும். 'உன் குரலை முத்தமிடுவது எப்படி' என எங்கயோ படித்த ஞாபகம். இந்த வரிகளுக்கு கள்வெறி கொல்லும் மனது பித்து பிடித்து திரிந்தது.

குறுஞ்செய்தி கதைகள் பரிமாற.. நித்தமும் வார்த்தைகளின் வாசங்களால் நாட்கள் அழகானது. இத்தனை வார்த்தைகளை இதுவரை யாரிடமும் பேசியதே இல்லையென சொன்னபோது... வருகிற ம்ம்ம் எத்தனை அழகானது...

உன் 'ம்'களில் பெயர்ந்து கிடக்கிறது ஒரு நாவலின் சங்கதி....

ம்ம்ம்... தொடரும்

எழுதியவர் : கோபி சேகுவேரா (25-Jun-17, 7:56 pm)
பார்வை : 260

மேலே