பருவத்தில் காதல்-கங்கைமணி

பருவத்தில் படரும்
பதினாறில் வளரும்
பாரென்று சொல்லும்
பார்க்காமல் கொள்ளும்.
யாரென்று தெரியாது
அவளென்னம் அறியாது
தேர் எற இருக்கும்
தெய்வம் போல் துள்ளும்.
அடிபோட்டு நகர்த்தும்
முட்டிபோட்டு முடிக்கும்
கிறுக்காக்கி அவனை
செருக்காக்கி அவளை
தெருவோரம் வீசும்.
பாவாடை சத்தம்
படிப்பின் மேல் யுத்தம்.
அரும்பும் சிறு மீசை
அதன்மேல்தான் ஆசை.
பருவப்பெண் பருவும்
பால்மேனி பொலிவும்
பாரென்று ஈர்க்கும்
பார்த்தாலே வேர்க்கும்
படபடக்கும் நெஞ்சம்
தடதடக்கும் இதயம்
பயம் பற்றிக்கொள்ள
சுயம் விட்டுச்செல்ல
அசையாத விழியில்
அசைகின்ற கிளியை
அசைபோட்டு கிள்ளும்.
அவள் பார்வை திரும்ப
இவன் பக்கம் அரும்ப
திடுக்கிட்ட நெஞ்சம்
திகைப்போடு துள்ளும்
இடிபட்ட இடமாய்
தீ சுட்ட உணர்வாய்
அனிச்சையும் அடங்கும்
ஆனென்ற பிறப்பு
அப்போது இனிக்கும்.

விழியெல்லாம் ஓடும்
வழியெல்லாம் தேடும்
கடைத்தெருவில் காணும்
கருவிழியும் நானும்
கைக்குட்டை நழுவும்
கருங்கூந்தல் அவிழும்
கடைக்கண்ணில் பார்க்கும்
கண்டு அவனை இரசிக்கும்.
தோழியரை நெருங்கும்
தோல் தொட்டு அழைக்கும்
தாழ்போட்ட எண்ணம்
தடைவிட்டு அகலும்
நீ இன்று அழகு …
நீதான் என் உறவு…,
நெருங்கித்தான் பேசும்
நெஞ்சோடு உரசும்
நிலையறியா தோழி
உழைநீராய் கொதிக்க
அதையெல்லாம் பெரிதாய்
அலட்டாத மனது
அகப்பூட்டை திறந்து
அவன் நினைவை மாட்டும்.,
கனிதேடும் அணிலை
கடியென்று நாடும்,
மலர்கின்ற மலரை
மயக்கத்தில் ஆழ்த்தி
இமயத்தை இழுத்து
இதயத்தில் வைக்கும்.
ஆனாலும் பெண்மை
ஆனந்த மழையில்
அன்றாடம் செழிக்கும்.

எதோ ஓர் தெய்வம்
எய்துவிட்ட அம்பு
இருபுறமும் எரிய...,
ஜாதியெனும் அரக்கன்
சவப்பெட்டி செய்ய....,
பணமென்னும் பேதம்
படுகுழியை திறக்க.....,
உறவென்னும் கயிறு
குரல்வளையில் இறுக....,
கேடுகெட்ட காதல்
பருவத்தில் முளைக்கும்!!.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (26-Jun-17, 2:36 am)
பார்வை : 136

மேலே