தமிழ் அந்தாதி

தமிழ் அந்தாதி
`````````````````````````
காப்பு
````````
அன்னை மொழியை அழகியவெண் பாக்களால்
நன்றாய் யியற்ற நலங்கொடுப்பாய் ! - முன்னை
முதல்வ ! வணங்கிடுவேன் முத்தமிழா லுன்றன்
பதமலர் போற்றிப் பணிந்து .
நூல்
******
இனிமை மொழியாய் இளமை மொழியாய்
தனித்து விளங்கும் தமிழ்தான் !- பனிபோல்
புனிதம் மிகுந்து புவியையே ஆளும்
மனிதா வுணர்ந்து மதி .1.

மதிப்பிற் குரிய வரமாம் தமிழில்
உதித்தன யாவும் வரமாய்ப்! - பொதிந்து
கிடக்கும் புதையலாய்க்! கேட்டே யுணர்ந்தால்
அடங்குமோ நெஞ்சம் அறி. 2.

அறிவைப் பெருக்கும் அமுத தமிழின்
செறிவினைக் கண்டால் சிலிர்க்கும் !- பிறிதோர்
மொழிக்கிங்கே யில்லை முதலிட மென்றும்
வழிகாட்டி யிஃதே மலைப்பு . 3 .

மலைத்தேனாய்த் தித்திக்கும் மங்காத செல்வம்
குலையாதக் கட்டானக் கோலம்! - தொலையாத
ஞான மருளிடும் நற்றுணை யாய்வரும்
ஊன மகற்றும் ஒளி. 4 .

ஒளியாய் விளங்கும் உலகிற்கே என்றும்
எளிதாய்ப் படிக்க இயலும் ! - களிப்பளிக்கும்
கோடிகளாய்க் கொட்டிக் கொடுத்தாலும் கிட்டாதே
ஈடிதற் குண்டோ இணை ! 5 .


இணையத்தில் முந்திவந்த இன்மொழி யாகத்
துணையா யிருக்கும் துடிப்பாய் - அணைத்தே
அறிவியல் ஆற்றலை அள்ளித் தெளிக்கும்
தெறிக்கும் கவிநயம் தேன் . 6.

தேன்பாக்கள் தந்தநம் தெய்வப் புலவனின்
வான்புகழுக் கீடுண்டோ வையகத்தில்? - மேன்மைமிகு
நூற்பல கொண்டது நூதன மாய்விளங்கும்
ஏற்ற மிகுந்த திது. 7.

இதுபோல் புவியி லெதுவுமே யில்லை
மதுரம் நிறைந்ததிதன் மாண்பு! - முதுமொழி
கற்க இனித்திடும் கற்கண்டாய்; முத்தமிழும்
அற்புதஞ் செய்யு மழகு . 8.

அழகாம் ழகரம் அதனின் சிறப்பே
பழம்பெருமை வாய்ந்தது பாரில்! - தொழவே
நினைக்கும் மனமும் நிறைவாய் வணங்க
நனையும் இதயம் நயந்து . 9.

நயந்துசொல்லும் செம்மொழியை ஞாலத்தில் போற்ற
மயக்கம் தெளியும் மனத்தில்! - முயன்றால்
முடியாத தொன்றில்லை மூத்த மொழியால்
இடிபோல் முழங்கி(டு) இனி .10.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Jun-17, 1:31 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 267

மேலே