மிலாவும் மின்மினி பூச்சி கனவுகளும்-02 - திராட்சை தோட்டம்

மிலா கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் தூக்கம் வராமல். அருகில் வந்த அன்னை அவளை நன்கு போர்த்தி விட்டு அருகில் படுத்தபடி தலையை கோதி விட்டாள்.மிலா, கதை சொல்லுமா என்று ஆரம்பித்தாள்.

அம்மா ஒரு ஊர்ல என்று ஆரம்பித்தாள். அந்த ஊர்ல ஒரு நரி இருந்ததாம் . மிலா, கண்களை மூடி கேட்க ஆரம்பித்தாள். அம்மா சொல்வதை அப்படியே உருவக படுத்த ஆரம்பித்தாள், இதுவும் அம்மா சொல்லி தந்தது தான்.ம் ஊரு வந்துச்சா என்றாள் அம்மா அப்புறம் நரி வந்தாச்சா என்றாள் அம்மா. நரி அண்ணா வந்தாச்சு வாலாட்டிக்கிட்டே என்று சொல்லி சிரித்தாள் மிலா, .

நரி நடந்து போகும் பாதையில் திராட்சை தோட்டம் ஓன்று கண்டதாம். திராட்சை நரியின் நாவில் நீரை வர வைத்ததாம் . நரிக்கு தன் நாக்கை அடக்க முடியவில்லையாம் மெல்ல வெளி தாண்டி குதித்து உள்ளே சென்றதாம். அருகில் சென்றதும் தொங்கும் திராட்சைகளை தின்ன துள்ளி துள்ளி பார்த்ததாம் . முடியாமல் விழுந்ததாம். சே சீ இந்த பழம் புளிக்கும் என்றதாம் . வருத்தததோடு ஓடி போனதாம் என்று அம்மா முடிக்கும் போது அவள் தூங்கி போயிருந்தாள். The

கொஞ்ச நேரத்தில் அவள் கனவுகளின் உலகம் மெல்ல திறக்க தொடங்கியது. அவளின் கனவுகள் குட்டி சிறகுகள் கொண்டு திராட்சை தோட்டத்தை நோக்கி பறக்க தொடங்கின.

மிலா, அற்புதமான ஆடைகளை உடுத்தி இருந்தாள். அதில் முழுவதும் அழகு அழகாய் திராட்சைகள் தொங்கின. ஆங்காங்கே திராட்சை கொடியின் பச்சை இலைகளுமாய் வெகு அழகாய் இருந்தது அந்த உடுப்பு. அவள் காற்றில் பறக்கும் திராட்சை தேவதையாய் மாறி இருந்தாள்.

மெல்ல அவள் இறங்கினாள் திராட்சை தோட்டத்தின் நடுவில். உள்ளே போனதும் தொங்கும் திராட்சையின் அழகை கண்டு அவளையும் அறியாமல் என்ன அழகு என்ன அழகு என உதடுகள் முணு முணுத்தது அதிசயித்து நின்றது.

அம்மா சொன்ன நரி கதை எனோ இப்போது நினைவு வர சிறுமி நாலா பக்கமும் பார்த்தாள். அந்த நரியோ அல்லது அந்த நரியை போல வேறு நரியோ தோட்டத்தில் இருக்கிறதோ என்ற அச்சத்தில் தான் அந்த பார்வை பார்த்தாள். நரியும் இல்லை வேறு யாரும் இல்லை என தெரிந்ததும் அவள் சிரிப்போடு கலந்த பெருமூச்சு எட்டி பார்த்தது .

இனி கவலையின்றி திராட்சைகளை சாப்பிடலாம் என நினைத்த அவளுக்கு அப்பொழுது தான் தோன்றியது நரி அண்ணனுக்கு எட்டாத திராட்சை நமக்கு எப்படி எட்டும் என்று. இந்த எண்ணம் வந்ததும் மிலாவின் முகம் ஒரு நொடி வாடிப்போனது உலர் திராட்சையை போல .

முயற்சி செய்து பார்க்கணுமும் எப்பவும் என்று அம்மா அடிக்கடி சொல்லுவது எப்போ மிலாவின் நினைவில் திடீரென ஒரு வெளிச்சம் போல வந்து வெட்டி சென்றது.எப்படியாவது முயற்சி செய்து பார்த்து விட வேண்டுமென்று நினைத்தாள். மிலா, மெல்ல பந்து போல துள்ளி துள்ளி பார்த்தாள். பந்து போல அவள் கீழாய் வந்து சேர்ந்தாளே தவிர திராட்சை எட்டின பாடில்லை.

கொஞ்சம் அயர்ந்து போன சிறுமி ஒரு நிமிட யோசனைக்கு பின் சுற்றும் முற்றும் எதாவது கம்பு கிடைக்குமா என தேடினாள்.கம்பு வச்சு திராட்சையை கீழே தட்டி விட்டாவது சாப்பிட்டு விடும் ஆசையில் தான் கம்பு தேடினாள் . கிடைத்த கம்பை மேல்நோக்கி நீட்ட அதுவோ ரப்பர் போல வளைந்து தலை கீழாய் வந்து அவளை பார்த்து சிரித்தது. கீழே கிடந்த கம்புகளோ திராட்சையின் கிளைகளாய் இருந்ததினால் மிகவும் மெலிதாய் இருந்ததால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது,

மிலா ஏமாற்றத்தின் உச்சியை எட்டி விட்டாள். நாமும் அந்த நரியை போல சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லி விட்டு போக வேண்டியது தானா என வருத்தத்தோடு நினைத்தபடி அந்த திராட்சை தோட்டத்தை நிராசையோடு ஒரு பார்வை பார்த்தாள். இப்போது மிலாவின் கண்ணில் திடீர் மின்னல்.

ஆஹா தோட்டத்தின் ஓரத்தில் வலிய ஏணி ஓன்று தென்பட்டது. அதை நகற்ற வலு இல்லாவிட்டாலும் அங்கு ஏறியே திராட்சை பறிக்கலாமே .ஹையா என்ற சத்தத்தோடு இப்போது மிலா ஏணியை நோக்கி ஓட தொடங்கினாள் ஒரு புள்ளி மானை போல .

ஏணியின் அருகில் சென்றதும் சந்தோசம் மறைந்து சின்னதாய் ஒரு பயம் ஒட்டி கொண்டது. தொங்கிய திராட்சைகளை எட்டி பார்த்த கண்களில் பயம் கரைந்து போய் கொஞ்சம் தைரியமும் நிறைய ஆசையும் வந்து ஒட்டிக்கொள்ளவே எதுவும் யோசிக்காமல் மெல்ல ஏற தொடங்கினாள் சிறுமி .ஏணி கொஞ்சமும் அசையவில்லை அது அசைந்தாலும் இப்போது அவள் பொருட்படுத்தப்போவது இல்லை.

ஏணியின் உச்சியில் ஆறியதும் திராட்சைகள் அவள் முகம் அருகிலே . கண்களுக்கு அருகில் திராட்சை கொடிகள் அவள் கண்கள் சிரித்தன . அடக்க முடியாத ஆசை கொண்ட உதடுகள் திராட்சையை முத்தமிட்டு உள்வாங்கி கொண்டது .ம் மிலா, கையில் பறிக்காமலே சில பல திராட்சைகளை அப்படியே செடியிலே கடித்து சாப்பிட ஆரம்பித்தாள். ம் ம் aha என்று சொன்ன மிலாவின் உதடுகள் திராட்சை வேட்டையை நிறுத்தி கொண்டன .

ஆசை தீர்ந்தததோ அல்லது இரவின் இருளை அவள் உணர ஆரம்பித்தாளோ தெரியவில்லை கிளம்ப எத்தனித்தாள்.போகு முன் வீட்டுக்கு கொஞ்சம் பறித்து செல்ல ஆசைப்பட்ட அவளுக்கு ஒரு கூடையோ பையோ இல்லையே என்ற வருத்தம் வந்தாலும் முடிந்த அளவு கொத்துக்களை பறித்து தன் உடுப்பிலே கட்டி கொண்டு மெல்ல கீழே இறங்க ஆரம்பித்தாள் . திராட்சைகள் விழுந்துவிட கூடாது என்ற அக்கரையில் அசைந்தாடும் தேரை போல மிக கவனமாக இறங்கினாள். அந்த திராட்சை தேர் சாமியை சுமக்கும் தங்க தேரை போல மெல்ல அவள் வீடு நோக்கி புறப்பட்டது.
....யாழினி வளன்
என் எழுத்துக்கள் உங்களோடு எதாவது பேசியிருந்தால் நீங்களும் என்னிடம் எதாவது கூறிவிட்டு செல்லுங்கள்

எழுதியவர் : யாழினி valan (27-Jun-17, 3:12 am)
பார்வை : 237

மேலே