திசவரதராசன் - ஈழ இலக்கியத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர்

சிறந்த இலக்கியவாதியும் ஈழ இலக்கியத்தில் முக்கியப் படைப்பாளியுமான தி.ச.வரதராசன் (T.S.Varadarasan) பிறந்த தினம் இன்று (ஜூலை 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* யாழ்ப்பாணம் அருகே உள்ள பொன்னாலை என்ற ஊரில் பிறந்தார் (1924). தந்தை, வர்த்தகர். மூளாய் சைவப்பிரகாச வித்யாசாலை உள்ளிட்ட பள்ளி களில் பயின்றார். சிறு வயது முதலே வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

* பல அரிய இலக்கியங்களை தேடித் தேடிப் படித்தார். மகாபாரதம், ராமாயணம், புராணம், இதிகாசம் எனத் தொடங்கி, பல்வேறு இதழ்கள் என எதையும் விடாமல் வாசித் தார். இதுவே அவருக்கு எழுதும் ஆர்வம் பிறப்பதற்குக் காரணமாக அமைந்தது. ஒரு அச்சக மேலாளராகப் பணியாற்றினார்.

* 'கல்யாணியின் காதல்' என்ற இவரது முதல் கதை 1943-ல் 'ஈழகேசரி' இதழில் வெளிவந்தது. அதே ஆண்டில் இவர் எழுதிய 'ஓர் இரவினிலே' என்ற வசன கவிதையே ஈழத்தின் முதல் புதுக்கவிதை எனக் கருதப்படுகிறது. ஈழகேசரியில் கல்வி தொடர்பாக பல கட்டுரைகளும் எழுதினார்.

* சக எழுத்தாளர்களை இணைத்து எழுத்தாளர் சங்கம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். தொடர்ச்சியான முயற்சி களால் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சி சங்கம்' உருவானது. இந்தச் சங்கம் முதன்முதலில் 1946-ல் 'மறுமலர்ச்சி' என்ற இதழை வெளியிட்டது. இவர், அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றினார்.

* ஈழத்து சிறுகதைகளுக்கும் 1950-களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் இந்த இதழ் அடித்தளமிட்டது எனப் போற்றப்பட்டது. 'ஆனந்தன்', 'வெள்ளி', 'புதினம்', 'அறிவுக் களஞ்சியம்' ஆகிய இதழ்களையும் நடத்தி வந்தார். 1955-ல் கவிதைகளுக்காகவே 'தேன்மொழி' என்ற இதழைத் தொடங்கினார். இதுவே ஈழத்தில் கவிதைக்காகவே வெளிவந்த முதல் பத்திரிகை.

* மற்றவர்கள் படைப்புகளையும் வெளியிட்டு ஈழ இலக்கியத்துக்கு பெருந்தொண்டாற்றியவர் என புகழப்பட்டார். தனது 'வரதர் வெளியீடு' மூலம் நிறைய நூல்களை வெளியிட்டார். பண்டிதமணி சி.கணபதிபிள்ளை எழுதிய 'இலக்கிய வழியே' என்ற நூல்தான் இதில் முதன் முதலாக வெளிவந்த நூல்.

** 'அறிவுக் களஞ்சியம்' என்ற இதழை மாணவர்களுக்காகவே தொடங்கினார். குறைந்த விலையில் அறிவுத் தகவல்களை உள்ளடக்கிய இது மாணவர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. 'வரதர் கதை மலர்' தொடரில் சிறுவர்களுக்கான 5 நூல்களை வெளியிட்டார்.

* 'வரதரின் பல குறிப்பு' என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து தான் எழுதிய கட்டுரைகளை 4 தொகுதிகளாக வெளியிட்டார். 'கயமை' என்ற தலைப்பில் இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 1960-ல் வெளியானது. தொடர்ந்து 'நாவலர்', 'மலரும் நினைவுகள்', 'பாரதக் கதை', 'யாழ்ப்பாணத்தார் கண்ணீர்' உள்ளிட்ட பல நூல்களை எழுதினார்.

* 'இலங்கையில் வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து, சிக்கல்களுக்கு மருந்து தேர்ந்தெடுத்து, அவற்றை தம் கதைகளில் படைத்துக் காட்டுவதில் ஆர்வம் கொண்டு எழுத்துத் தொண்டு புரிந்து வருபவர்களுள் ஒருவர் தி.ச.வரதராசன்' என்று டாக்டர் மு.வ. குறிப்பிட்டுள்ளார். இவரது இலக்கிய சேவைகளைப் பாராட்டி, இலங்கை கலைக் கழகம், 'சாகித்ய ரத்தினம்' என்ற பட்டத்தை வழங்கியது.

* இலக்கியத்தின் அனைத்துத் துறையிலும் முத்திரைப் பதித்தவரும் ஈழ இலக்கியத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப்போற்றப்பட்டவருமான தி.ச.வரதராசன் 2006-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 82-வது வயதில் மறைந்தார்

எழுதியவர் : (28-Jun-17, 5:40 am)
பார்வை : 31

மேலே