ஊனமுற்ற ஒருத்தியோடு காதலுற்ற காதலன்-கங்கைமணி

(நண்பர் முகம்மது சர்பான் அவர்களின் கதை நிகழ்வுக்கான கவிதை இது )

(அவன்)
முகில் விட்ட மழைத்துளியாய்
மழைவிட்ட மண்வாசமாய்
எனக்கும் தெரியாமலும்
அவள் சம்மதமும் இல்லாமல்
எப்படியோ கசிந்துவிட்டது
அவளின் நினைவுகள்
எனது நெஞ்சுக்குள்.,
அது..
உள்ளேயே இருந்து
உணர்வுகள் வருடி
விருட்சமாய் படர்ந்து
வேர்விட்டு நிலைத்துவிட்டது,என்
இதய அறைகளில்
இருக்கும் சுவர்களில்.

அவளென்னுள் இருக்க
அகமெல்லாம் சிலிர்க்க
கால்கொண்டு பறந்தேன்
கை கொண்டு நடந்தேன்

கண்மூடி மகிழ்ந்தேன்
கரம் கோர்க்க நினைத்தேன்
கனிந்திட்ட காதல்
கை அள்ளி நடந்தேன்.

விஞ்ஞானம் அறியா
விடைபோல நானும்
மனம்முடித்து அவளை
மகிழத்தான் துடித்தேன்.

ஒளியற்ற உலகு.
வழிகாட்டி விரிய
வயப்பட்ட நானோ
வரம்தேடி விறைந்தேன்

ஒளிக்கீற்றால் விளக்கி
வெளிவந்த நிலவாய்.,
காற்சிலம் புடைத்து
கழன்றுவந்த முத்தாய்.,
திரைச்சீலை விலக
தெரிகின்ற சிலையாய்.,
மாம்பழ சுளையாய்
மலர்ந்திருந்த அவளை
மலைக்கொம்பு தேனாய்
மனம் அள்ளிப்பருகி
நெஞ்சுடைத்த காதல்
சொல்லுடைத்து சொன்னது.,

எனை ஏற்றுக்கொள்!...

சிறு மௌனமங்கே
சிறைபிடித்துக் கொள்ள
இதயத்தின் சத்தம்
இயல்பற்று இசைத்தது.

அவள் மௌனம் களைந்தாள்
எனை மெல்ல புதைத்தாள்...,

கல்லெறிஞ்சால் ஓடையில்
கலக்கம் தீரும் வினாடியில்.
சொல்லெறிஞ்சாள்! சுடுமென்று
அறியாத பேதையவள்.

(அவள்)
ஊனம் என்னுடலில்
உறவுக்கண் விடுமா..?
கிளைமரத்தின் நிழலை
கொடிமரம்தான் தருமா..?!

(அவன்)
பிறைநில வழகை
முழுநில வறியா !.
நிறைமனதழகை
குறைசொல்வோ ரறியா !

உடல் ஒச்சம் அடையும்
அணில் கடி பழமும்
உயர் சுவை தருமே
உலகினறறிவர்.

அசைந்தாடும் தேரழகு
அடைபட்டால் தெரியாது
அகமாளும் உன்னருமை ,என்னை
அடையாமல் புரியாது.

(அவள்)
மரம்கொத்திப் பறவைகள்-என்
மனம் கொத்தி இரசிக்கும்
உன் மனம் நித்தம் வலிக்கும்.
உயிரோடு ஓர் நாள்…,
எனை உன்னுள் புதைக்கும்.

(அவன்)
மோகமுற்று தழைத்த
காதலல்ல இது!.
முந்தானை மறைவில்
முளைத்ததல்ல இது!.

உலகோரை நினைத்தாய்
உறவோரை பழித்தாய்
உன்காதல் மனதை
என் கண்முன்னே மறைத்தாய்.

(அவள்)
நானென்ற நதிநீரை
நீயள்ளி பருகாதே!-என்
ஆன்மீக கடல் தேடும்
பயணத்தை தடுக்காதே!

(அவன்)
உடல் தாகம் தீர்க்காத
நீரென்ன நீர் -உந்தன்
உணர்வள்ளி எரிக்கின்ற
ஆன்மிகம் வீண் !

(அவள்)
இது அடிபட்ட ஓடம்
இதை அடைந்தாலே பாவம்
நான் காட்சிக்கு உதவாது-
கலைகின்ற கோலம்

உயிர் காத்த உறவே
எனை விட்டு போ.
உன் வருங்கால வாழ்வை-
உன் உறவோடு வாழ்!.

(அவன்)
என்னுள்ளக் கருவே !
உடைந்திங்கு நொறுங்கு
உனக்கான காலம்
வரும்வரை ஒதுங்கு!

என்காதல் கவிதை
கண்முன்னே கலங்க
காவியத்து கவிகள்
நெருப்பேற்று எரிக!

உடல்தானே பேதம்
அதுதான் உன் வாதம்.
கவிவடித்த சிலையே
செவிமடுத்து கேள் !.

உடல் ஊனமடைவேன்
உயிரோடு வருவேன்
உன்காதல் மனதை
எனதாக்கி அடைவேன் !.

உயிர் பூக்கள் அதிர
உணர்வெல்லாம் உதிர
ஒளிந்திருந்த காதல் -அவள்
விழிநீராய் வழிந்தது!.

கரமேந்து என்னை...!
கைகூப்பி பெண்மை
அவன்மீது சரிந்தது.

உலகென்னும் ஊஞ்சல்
இரு உள்ளத்தை ஏற்றி
மெதுவாக அசைந்தது.

புயலோடு தென்றல்
புதுவடிவமெடுத்து
கரம்கோர்த்து நடந்தது.

சமுதாய பேதங்கள்
சருகாகி பறந்தது.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (28-Jun-17, 9:44 am)
பார்வை : 277

மேலே