மீளா காதலர்கள் -நிலமும் நிலவும்

சுற்றி சுற்றி வருகிறாய் ,
பூமியாய் எனையே-
அங்குலம் விடாமல் அலசுகிறாய்!

கதிர் வீச்சு பொழிகிறாய் ,
குளிர்ந்தது தான் என்றாலும் -
காதல் சூட்டில் கொடுமையே அதுவும் !

நாளுக்கு நாள் வளர்கிறாய்- வானத்தில் மட்டுமா?
அகத்திலும்!
நகைத்து நெருங்கும் வேளையில் -
அலட்டி தேய்கிறாய்!

வேண்டாம் விளையாட்டு என -
வேண்டும் வேளையில்,
அமாவாசை என மறைந்தே போகிறாய் !

வேண்டாம் வேதனை என,
மனதிற்கு புத்தி புகட்டும் வேளையில்-
மீண்டும் அணைக்கிறாய் அன்பு கரங்களால் !

கொஞ்சம் நஞ்சமா -
நாளுக்கு நாள் கொட்டி தீர்க்கிறாய்!

உச்சமாய் நீயும் பௌர்ணமி அடைய,
நெகிழ்ந்து நானும் இன்பத்தில் மிதக்க,
நிறைந்து நாமாய் உலாவும் வேளையும்,
நாளொன்றே நிலைக்கிறது -நியாயம் தானோ ? சொல் நீயே!

வளர்ந்து தேய்கிறாய்,
தேய்ந்து வளர்கிறாய்.
இன்பத்தில் மிதக்கிறேன்,
துன்பத்தில் தவிக்கிறேன் !

ஆனால் ..

மக்கள் சொல்கின்றனர் -
நீ தேய்வதில்லையாம் -என்
நிழலே உன்னை மறைக்கிறதாம் !

புரியவில்லை ஒன்றும்,
புரிந்தது ஒன்றே -
நீ என்னையே சுற்ற,
நான் உன்னையே நோக்க,
காலத்தின் சுழற்சியில் -
பிரிவென்பதே நமக்கில்லை!

எழுதியவர் : மகா!!! (28-Jun-17, 10:00 pm)
சேர்த்தது : mahakrish
பார்வை : 96

மேலே