மீட்டிடுவேன் அன்பாலே

மலரோடு மலரானாள்
மனத்தோடு மணமானாள்
நிலத்தோடு நடைபோடும்
நிழலாகத் துணையானாள்
புலர்காலைப் பொழுதினிலே
புதுக்கவிதை போலானாள்
உலவாத மலைமீதில்
உருமாறும் முகிலானாள் !

இரவோடு நிலவானாள்
இதயத்தின் துடிப்பானாள்
சுரமெழுள் ஒலியானாள்
சுகமான இசையானாள்
பிரதான மூச்சானாள்
பிரியமான சகியானாள்
விரலோடு வீணையைப்போல்
விளையாடும் உறவானாள் !

துவளாத கொடியானாள்
துவர்க்காத கனியானாள்
கவலைக்கு மருந்தானாள்
கருணைக்கு மொழியானாள்
உவமைக்குக் கருவானாள்
உயிருக்கும் உயிரானாள்
புவனத்தில் பூப்போலே
பொலிவான பெண்ணானாள் !

வயலோடு வளிவீச
வருடிவிடும் சிலிர்ப்பினைப்போல்
கயலாடும் விழியாலே
காதலுடன் அவள்பார்க்க
மயங்கிவிட்ட இதயத்தால்
மன்மதனாய்க் கிறங்கிநின்றேன்
வியக்கவைக்கும் மெல்லிசையாய்
மீட்டிடுவேன் அன்பாலே !!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Jun-17, 12:04 am)
பார்வை : 65

மேலே