எழுதுவது ஏன்

"எதற்குக் கவிதை எழுதுகிறாய் ?"
. என்றே என்னைக் கேட்கின்றார்
இதற்கென் றெதனைச் சொல்லுவது ?
. இமயம் போல இங்குளது !
கதவைப் பூட்டும் தாழ்ப்பாள்போல்
. கவிஞன் நெஞ்சில் ஒன்றிருந்தால்
இதனை எழுதிக் கிடப்பேனோ ?
. இயற்றும் கவியில் திளைப்பேனோ ?

அழகைப் பார்த்தால் என்கைகள்
. அடடா என்றே வரைகிறது !
குழந்தைச் சிரிப்பில் கடவுளவன்
. குணத்தைக் கண்டு விரைகிறது !
இழப்பை எல்லாம் நினைப்பதில்லை !
. இருப்ப தன்மேல் விருப்பமில்லை !
விழைந்து சேர்க்கப் பொருளுமில்லை !
. விசித்திரம் தான் கவிஞன்நிலை !

அற்பப் பொருளைக் கண்டாலும்
. அழகோ அழகென் றுரைத்திடுவேன் !
சொற்க ளுக்கும் உயிரூட்டிச்
. ஜோடி சேர்த்து வைத்திடுவேன் !
கற்றோர் காணும் இன்பத்தைக்
. கல்லா தோர்க்கும் தந்திடுவேன் !
அற்புதம் தான் கவிஞன்நிலை
. அதனால் கவிதை எழுதுகிறேன் !

வார்த்தைக் குள்ளே தீமூட்டி
. வாழ்நாள் குளிரில் காய்ந்திடவும்
பார்க்குள் அந்த நெருப்பாலே
. பார்க்க ஒளிதான் செய்திடவும்
ஈர்க்கும் எதையும் நானெழுதி
. இன்பம் பெற்றுத் தந்திடவும்
யார்க்கும் ஞானம் சேர்ந்திடவும்
. யாண்டும் கவிதை எழுதுகிறேன் !

புனலைப் பார்த்தால் புதுக்கவிதை
. புரண்டு புரண்டு வந்தணைக்கும்
கனியை இலையை மரநிழலைக்
. கண்டு விட்டால் கவிதைவரும்
மனிதக் குற்றம் பார்த்திடிலோ
. மனத்துக் குள்பாத் தீமூளும்
இனியது அன்றோ இவையெல்லாம்
. இதற்குக் கவிதை எழுதுகிறேன் !

ஏன்நீர் மூச்சு விடுகின்றீர் ?
. ஏன்தான் உணவு கொள்கின்றீர் ?
ஏன்கண் மூடித் துயில்கின்றீர் ?
. எதற்காய் இதயம் துடிக்கிறதோ ?
ஏனேன் என்றே நான்கேட்டால்,
. எதுவாய் இருக்கும் உங்கள்பதில் ?
நானும் அதற்கே எழுதுகிறேன் !
. நாளும் கவிதை எழுதுகிறேன் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (29-Jun-17, 11:11 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
Tanglish : ezhuthuvathu aen
பார்வை : 73

மேலே