இந்த மொட்டுக்கள் இதழ் விரிப்பதில்லை

தொலைக்காட்சியில்
இன்று வந்தது
ஒரு தலை ராகம்
காதல் காவியம்
கண்களை கடந்து
இதயத்தை வருடி
முடிந்து விட்டது

அவ்வப்பொழுது வந்த
இடைவேளை பொழுதுகளில்
மனம் எதை எதையோ
ஓட்டி பார்த்தது

விரும்பியும் விழுங்கிய
காதலை அப்படம்
கச்சிதமாய் காட்டியது
கண் எதிரில்

மனம் சொன்னது
முன்பே பார்த்திருக்க
வேண்டிய திரைப்படம்
என்று ஏனோ

நிச்சயமாக சொல்லமுடியும்
இவள் மட்டுமல்ல
விருப்பம் அரும்பியும்
விருப்பத்தை விழுங்கிகொள்ளாதவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்

இருக்கையை விட்டு
நகரவில்லை நான்
இதயத்தை விட்டு
நகரவில்லை நினைவுகள்

அப்பாவுக்காக அண்ணனுக்காக
தனக்கு பின்னிருக்கும் தங்கைக்காக
தன் பொல்லாத சாதிக்காக
தான் பிராத்திக்கும் மதத்துக்காக
தான் பின்பற்றும் மரபுகளுக்காக
தன் குடும்பத்தின் பழக்கங்களுக்காக
தன் சமுதாயத்தின் வழக்கங்களுக்காக
என எத்தனையோ காரணங்களுக்காக
என எத்தனையோ பெண்கள்
இறுக்க பூட்டித்தான்
இதயத்தை வைத்திருக்கிறார்கள்

இந்த மொட்டுக்கள்
இதழ் விரிப்பதில்லை
இதயம் விரும்பினாலும்

இமைகளோடு நிறுத்திக்கொண்டு
இளமையை பிடித்துக்கொண்டு
இருட்டிலே நடித்துக்கொண்டு
எல்லாம் தெரிந்தும்
இதழ்கள் திறப்பதில்லை
எல்லாம் உணர்ந்தும்
இதயத்தையும் திறப்பதேயில்லை

தேவைற்ற நினைவுகள்
என நினைத்தாளோ
என்னவோ தெரியவில்லை
எல்லாவற்றையும் மூட்டைகட்டி
வெளியே வீசியதாய்
நினைத்து கொண்டாள்
அவளையும் அறியாமல்
அது அட்டைப்பூச்சியாய்
அவள் இதயத்தின்
அடியிலே வந்துதான்
ஒட்டி கொண்டது
நகரும் நாட்கள் தந்த
நினைவுகள் மூடிபோட்டது
ஆழத்தில் அமிழ்ந்துகிடந்த
அந்த அசைவுகளை

தவறோ சரியோ இது
ஒரு தலை ராகங்களின் இசை
கேட்டு கொன்டே இருக்கிறது
பலரது இதயத்தில் அவ்வப்பொழுது
அதன் காரணம்
மனதை தொட்டுச்செல்லும்
அழகிய பாடல் வரியோ
அந்தி வான அழகோ
எதுவாகவும் இருக்கலாம்

எத்தனை காலங்கள் ஆனாலும்
எத்தனையோ இதயங்களில்
சொல்லாத காதல்களும்
உதிர்க்காத புன்னகைகளும்
பரிமாறப்படாத பேச்சுகளும்
ஒதுக்கமுடியாத நேசமும்
எங்கோ ஒரு ஓரத்தில்
ஒளிந்து கிடக்கும்
எவரும் அறியாமலே
ஏன் அவர்களையும் அறியாமலே கூட

நினைவுகள் தட்டி
எழுப்பப்படுகிற தருணங்கள்
அழகிய நினைவு
அலைகளின் வர்ணங்கள்
கொஞ்சம் சுகம்
அதிகம் ரணம்

தவறோ சரியோ இது
ஒரு தலை ராகங்களின் இசை
கேட்டுகொண்டே இருக்கிறது
பலரது இதயத்தில் அவ்வப்பொழுது !!

சொல்லாத சொல்லப்படாமல் மறைக்கப்பட்டும்
வாழும் காதல்கள் பிரபஞ்சத்தை நிறைத்தபடி !!!!

யாழினி வளன்...

எழுதியவர் : யாழினி வளன் (7-Jul-17, 2:27 am)
பார்வை : 173

மேலே