காத்திருந்த பொழுதுகள்

உனக்காக நான்
காத்திருந்த பொழுதுகள்
ஒருவேளை நான்
எண்ண தொடங்கியிருந்தால்
கடற்கரை மணலைக்கூட
எண்ணி முடித்திருக்க கூடும்

காத்திருந்த காலங்கள்
கடந்து போனாலும்
கோர்த்திருந்த கனவுகள்
கலைந்து போனாலும்
நான் சேர்த்துவைத்த
நினைவுகள் மட்டும்
மீண்டும் மீண்டும்
கடல் அலையாய்
திரும்பி திரும்பி வந்து
என்னிடமே அடைக்கலம் தேடுகிறது

பல நேரங்களில்
போய் தொலைந்தது
உன் நினைவுகள் என
நிம்மதி கொள்கிறேன்
சில நேரங்களில்
அலையாய் அதுவர
அணைத்து கொள்கிறேன்
அபிஷ்டு நான்
அப்படிதான் நான்

உன் நினைவுகளில்
மட்டுமே மிதந்து
செல்கிறது என்
காதல் படகும்
கவிதை படகும்

உன்னோடு சிறு படகைபோல
மிதந்து வரவும் ஆசை
உனக்குள் ஆழமாய் முத்துப்போல
மூழ்கிவிடவும் பேராசை

என் கடற்கன்னியே
உனக்கான சூரியனாக
என்னை ஏற்காவிட்டாலும்
உனக்குள் வாழும்
எத்தனையோ சிறுமீன்களுள்
ஒன்றாக ஒரு ஓரமாவது
ஒண்ட சிறு இடம் கொடு

உன் தண்ணீரையும்
என் கண்ணீரையும்
குடித்து வாழ்ந்துவிட்டு
போகட்டும் அங்கு
என் காதல் மீன்கள்

காதலோடு கலந்து
நான் விடும்
மூச்சு குமிழிகளின்
முத்தம் என்றாவது
உன் உதடுகளை
தட்டி கூப்பிடும்
அன்பே என்று

ஒருவேளை எனக்குள் வந்த காதல்
வரலாம் உனக்கும் அன்று

கடல் வேண்டாம்
என்று தள்ளும்
சிப்பிக்காக கடற்கரையில்
காத்திருக்கும் சிறுவனைப்போல
காத்திருப்பேன் கண்மணி
என் காதல் கண்மணி

உனக்கும் எனக்குமான
காதல் சாம்ராஜ்யத்தை
கனவுகளில் கட்டியபடி
கைகளில் மணல்வீடு கட்டிக்கொண்டு
காத்திருக்கிறேன் கண்மணி
என் காதல் கண்மணி

எழுதியவர் : யாழினி வளன் (7-Jul-17, 10:27 am)
பார்வை : 257

மேலே