இனித்திடும் இன்பசுவை

அமைதியில் அனுதினமும் காணும்
அன்பான தோழியை காண சென்றேன் ,
அகிலம் தாண்டி அல்ல - என்
அழகிய வீட்டின் மாடிக்கு ,
அழைத்ததால் வந்த தோழி அல்ல ,
அழியாது என்றும் உடனிருக்கும்
அழகோவிய தோழி அவள் ,
அவளின் பெயர் இயற்கை !

வானம் பார்த்தபடி வண்ணக்கனவோடு
வாட்டம் ஏதுமின்றி மெல்ல மெல்ல ரசித்தேன் ,
விரல்கோர்க்க பல நொடி ,கோர்த்து உடனே விலகும்
வினோதம் கண்டேன் அப்படி என்ன
விரிசலோ இரு மேகத்தின் இடையில் !

வண்ண பறவைகள் கண்டேன் - சற்றும்
வாடாது பறந்து திரியும் அவை - சோகமில்லை
வாசம் மட்டுமே வாழ்க்கை முழுதும் போல என்று
வியந்த நொடி வாடிய ஒரு பறவை
விட்டதில் சுற்றி பார்த்தவண்ணம் ,
வருத்தம் என்னவோ என்று எண்ணும் முன்னே
விண்ணோடு உயர பறந்து சென்றது !

காற்றின் ஓசை கேட்டேன் ,
காதில் மெலிதான இன்னிசையது,
கண்ட நான் மட்டுமல்ல
கால்களில்லா மரங்களும் இசைகேட்டு
காற்றொலிக்கேற்ப அசைந்ததைக்கண்டேன் !

கிளைகளது அசைந்தது - அதில்
குடியிருக்கும் பறவைகளும் , குயில்களும்
கவிப்பாட முற்றிலுமாய் கனவுலகிற்கு நான் சென்றேன் !

கனவு காணாது கண்திறந்து பார் என்பது போல் ,
குளிர்க்காற்று எனை உரச ,
கன்னத்தில் ஒரு மழைத்துளி !
கண்ட யாவும் மெலிதாக மறு ரூபமெடுக்க - அட
கவியல்ல கானமே இணையும் !

வெளிச்சத்தில் நான் கண்ட மேகங்கள்
வெள்ளை எங்கே என தேடும்வண்ணம் இருண்டது !
வாள்வீசி ஊடல்கொண்ட மேகங்களும்
விரல்பிடித்து கூடல்கொண்டது,
வீணைமீட்ட பதமக்கொண்ட காற்று
வீரம்கொண்டு எழுந்தாற்போல வெட்டி வீசியது !

அசந்த மரங்களும் ஆட்டம்க்கொண்டது ,
ஆடித்திருந்த பறவைகளும் - இடமே
அறியாதவண்ணம் மறைந்துபோனது !
அனைத்தையும் கண்டுக்கொண்டிருந்த என்னையும்
அதட்டி உள்செல் என்றது
அபார இடி ! அப்பப்பா
அதனை சொல்ல எப்படி ?
அத்தனை பெரிதான ஒலியது,
அதனோடு இணைந்த மின்னலும் ,

மிரட்டி எனை துரத்த ,
மருளி குளிர் தாளாது ,
மாடிவிட்டு இறங்கி சன்னல் வழியே ,
மாறாது ரசித்துக்கொண்டிருக்கிறேன் !

சென்று காணுங்கள் வானத்து மங்கையவள்
சின்ன சின்னதாய் பொழிய தொடங்கி ,
சிறு பூஅவள், அருவியென
சீறி பாய்கிறாள் !!!!

எழுதியவர் : ச.அருள் (9-Jul-17, 7:06 pm)
பார்வை : 272

மேலே