As I am suffering from kadhal - வசன வன்முறை

As I am suffering from kadhal - சமீபத்தில் வெளியான வலைத்தொடர் இளைஞர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது . ஆங்கில வலைத்தொடர்களுக்கு அடிமைகளாய் இருந்த வலைத்தொடர் ரசிகர்களை இந்த வலைத்தொடர் மூலம் தமிழுக்கு திரும்ப வைத்த பாலாஜி மோகனுக்கு வாழ்த்துக்கள்.

தமிழில் ஒரு வலைத்தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற செய்தியை கேட்ட உடனே அதனை பார்க்க ஆர்வம் தொற்றிக்கொண்டது.காட்சிகளும் ஒளிப்பதிவும் அவ்வளவு நேர்த்தி பார்க்க மிக அழகாக இருக்கிறது மீண்டும் பார்க்க தோன்றுகிறது.நடித்திருக்கும் அனைவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கதைக்களம் நாம் ஏற்கனவே பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதை காட்சி படுத்தியிருக்கும் விதம் தமிழுக்கு மிகவும் புதியது. 10 காட்சிகளையும் ஒன்றாகவே பதிவேற்றம் செய்திருக்கிறார்கள் ... சராசரியாக ஒரு காட்சி 22 நிமிடம் இருக்கிறது. சாதாரண கதையை விறு விறுப்பாக எடுத்து சென்றிருப்பதால் அடுத்தடுத்த காட்சிகளை உடனே பார்க்க தோன்றுகிறது கடைசி காட்சி எல்லா காட்சிகளை விடவும் அழகு ... எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது.

இவ்வளவு அழகான வலைத்தொடர் ஆனால் பார்த்த அனைத்து காட்சிகளிலும் ஒரு வித நெருடல் மனதில் தொற்றிக்கொள்கிறது . வசனங்களில் ஏன் இவ்வளவு வன்முறை என்று தெரியவில்லை .
வலைத்தொடர் என்பதால் எவ்வித வசனங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று இயக்குனர் நினைத்திருந்தால் நிச்சயம் அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

கேட்க தகாத அத்தனை வார்த்தைகள் எச்சரிக்கை குழல் ஒலி( beep sound) கூட
இல்லாமல் கதை முழுக்க மிக எளிதாக உலா வருகிறது.இவ்வார்த்தைகள் என்னதான் நடைமுறையில் இருந்தாலும் பலர் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்த தயங்குகின்றனர் என்பதே நிதர்சனம். ஆனால் இத்தகைய மாபெரும் வரவேற்பை பெற்ற வலைத்தொடரால் இவை இளைஞர்கள் மத்தியில் மிகவும் இயல்பான வார்த்தைகளாக மாறிவிடும் இது அடுத்துவரும் தலைமுறைக்கு நிச்சயம் சாபக்கேடு தான்.

இணையம் இன்று அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது ... குழந்தைகள் முதல் அனைவரிடமும் இன்று இணையம் எளிதாக பயன்பாட்டில் இருக்கின்றது jio போன்ற நிறுவனங்களின் உதவியால் இது இன்னும் எளிதாகிவிட்டது இந்த சூழ்நிலையில் மிகவும் தரம் குறைந்த வார்த்தைகள் ஒரு தமிழ் வலைத்தொடரில் நிறைந்திருப்பது இருப்பது வேதனை.

இயக்குனர் இதனை இளைஞர்களுக்கத்தான் உருவாக்கியிருக்கிறார் ஆனால் நம் நாட்டில் இணையத்தை பயன்படுத்த எவ்வித வயது வரைமுறையும் இல்லை என்பதால் இயக்குனருக்கு சமூக அக்கறை கொஞ்சமாவது இருக்க வேண்டும்... இவர் கடைசியாக இயக்கிய படத்தில் கதாநாயகன் கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலும் புகைபிடிப்பார். இயக்குனர் இது போன்ற காட்சிகளையும் வார்த்தைகளையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

ஒரு நடிகர் பாடிய பீப் பாடலுக்கு அவரை தூக்கில் போட வேண்டும் என்று சொன்னது ஒரு கூட்டம். அந்த கூட்டத்தின் கண் வழியே எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லாமல் இந்த வலைத்தொடரை பார்த்தால் இயக்குனர் பாலாஜி மோகன் குறைந்தது 15 முறை தூக்கு மேடையில் இருப்பார். பாடல்களில் மட்டுமல்ல இத்தகைய கேவலமான வார்த்தைகளை எங்கு பயன்படுத்தினாலும் தவறுதான்.

இயக்குனருக்கு ஒரே ஒரு வேண்டுகோள் இத்தகைய கலைத்திறமையை கொண்ட நீங்கள் நிச்சயம் சமூக நலனிலும் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (11-Jul-17, 5:51 pm)
பார்வை : 339

மேலே