அன்புள்ள மான்விழியே

அன்புள்ள மான்விழியே அன்னத்தின் மறுவடிவே
உன்னை நினைத்தே உலவுகிறது என்நிழலே
ஓடையில் பாய்ந்தோடும் நீரென உணர்வுகள்
ஓடிடும் உள்ளத்தில் ஓராயிரம் கனவுகள்...


ஆசையில் நெஞ்சம் ஆகாயமாய் விரிகிறது
பூசைகள் செய்திடப் பூமகளைத் தேடுகிறது
தூங்கும் இரவுகள் அனலாய்க் கொதிக்கிறது
வாங்கும் கனவுகள் புனலாய் அணைக்கிறது...


உன்ஞாபக அலைகள் செம்புனலில் எழுந்திட
மென்தளிர் இலையாய் இதயம் துளிர்த்திடும்
உன்காலடி ஓசைகள் வாசலில் கேட்கிறதோ?...
என்காதோடு விழிகளும் தினந்தினம் தவமிருக்கும்...


தீங்கனியும் நாவினில் வேம்பாய்க் கசந்திடும்
மாங்கனி பார்த்தால் மதிமுகமாய்த் தோன்றிடும்
நின்னைப் பிரிந்து நானிங்குச் சிலையாய்
தென்றலும் தேகம் தீண்டும் முட்களாய்...


வருவாய் என்றன் வாழ்வின் வானவில்லே
தருவாய் ஆனந்தம் பொங்கும் வசந்தமே
தனிமையும் தகர்ந்து தழுவிடும் பூங்கரத்தால்
இனிமை தந்தெனது இன்னுயிர் காப்பாயா?...


மஞ்சள் மலரே அனுப்புகிறேன் என்மனதை
நெஞ்சின் தாழுடைத்து நன்மொழி சொல்லிடு
கரைதேடும் கடல்மீது படகாய்த் தவிக்கிறேன்
விரைந்து வந்துவிடு என்னில் உறைந்துவிடு......

எழுதியவர் : இதயம் விஜய் (12-Jul-17, 1:04 pm)
பார்வை : 611

மேலே