டெல்லிக்கு போறேன் நான்

மணி பத்து அரை. இரண்டு பிரயாண பைகளோடு நான் காத்துக்கொண்டிருக்கிறேன் இன்னும் சில மணி நேரங்களில் வர போகும் டெல்லி விமானத்துக்காக. என்னாலே என்னை நம்ப முடியவில்லை. எத்தனையோ முறை அவன் அழைத்தும் எனக்கு போக தோன்றவும் இல்லை. விமானத்தில் பயணம் செய்யும் துணிவும் வரவில்லை. வருடத்துக்கு ஒரு முறை பண்டிகை கால விடுமுறையில் வந்து பத்து நாட்கள் என் வீட்டையும் மனசையும் நிறைத்து விட்டு செல்வான்.

கடந்த வருடம் அழைத்த மாதிரியே அம்மா வாயேன் மா ஒரு முறை நான் இருக்குற ஊரு பக்கம் என்றான் போன மாதம். வழக்கம் போல நீ வா பா என்று சொல்லி வைத்தேன் தொலைபேசியை. இந்த முறை என்ன நினைத்தானோ அவன் விடுவதாயில்லை. எப்போதும் அவன் அழைப்புகளை ஏற்க அஞ்சும் என்னை எதோ ஓன்று வா வா என்று அழைத்தது.

நான் எப்படிப்பா வந்து கிடுவேன் என நான் பாவமாய் கேட்டு கொண்டிருக்க தொலைபேசியில் தொற்றி கொண்டது மழலை குரல் ஓன்று. பாட்டி பாட்டி என்றது. என்னடா கண்ணு என்று கேட்டேன். வா வா பாட்டி வா வா என்றது. ஓன்று அரை வயது பேத்தி நிஷா செல்லம் குழைந்தாள். அதை விட அதிகம் பேச தெரியாமல் அப்பா சொல்லி கொடுத்த இரு வார்த்தைகளையும் அழகுபட சொல்லி சிரித்தது. அன்று இரவு கண்கள் மூடும் வரை அவள் குரல் எனக்குள் ஒலித்து கொன்டே இருந்தது. பாட்டி வா என்று .

மறுநாள் மகன் பேசியபோது வரேன் மவனே என்று சொல்லி விட்டேன்.கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகவே ஆகிவிட்டது இளைய மகன் வெளிஊர் பக்கமாக வேலை தேட சென்று . மும்பையில் சின்ன வேலையில் சேர்ந்து அப்புறம் படிப்படியாக உயர்ந்து இப்போது டெல்லியில் இருக்கிறான் . தனியே இருக்கும்போது, கல்யாணம் முடிந்த போது, குழந்தை பிறக்கையில் என எத்தனையோ முறை அவன் அழைத்தும் நான் போகவில்லை. இந்த ஊரு மூத்த மகனோட வீடு இரண்டு பேர குழந்தைகள் னு எனக்கான குட்டி கூட்டை விட்டு வெளியே வர தோன்றவில்லை.

ஆனால் அந்த குட்டி தேவதையின் குரல் அதை செய்தது. அவள் தான் தைரியம் தந்தாள். குடும்பத்தோடு ஊருக்கு வந்து முதல் பிறந்தநாளோடு மொட்டை போட்டு விட்டு சென்றனர் கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையோடு. அந்த குட்டி மொட்டை முகம் தான் இப்போது மனசில் நிற்கிறது. ஆறு மாசம் ஆகிவிட்டது பார்த்து. மகன் அனுப்பும் புகைப்படங்களில் வளர்ந்தது போல தோன்றுகிறாள். என் மகனை உரித்து வைத்திருந்தாள் கருப்பு வண்ணத்திலும் அழகிய முட்டை கண்களிலும். அந்த குட்டி கண்களை காணும் ஆசையில் அவளுக்கு பிடித்த பிடிக்காத என அறியாத தின்பண்டங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு எனக்கு இயன்ற சில சின்ன விளையாட்டுகளையும் வாங்கி கொண்டு கிளம்ப தயாரானேன் ஆசையோடு .

முதல் விமான பயணம் மனதில் திகில் எழுப்பியது. மகன் டிக்கெட் போட்டு விட்டு ஒண்ணுமில்லைமா தனியா வந்திருலாம் மா என்றபோது அவனை காண போகும் மகிழ்ச்சியும் விமான பயணத்தின் பயம் எல்லாம் சேர்த்து மனதில் தொற்றி கொண்டது. நான் டெல்லி போறேன் என்று சொன்னபோது மறுக்காத ஆனால் ஆச்சரியமாக பார்த்த மூத்த மகன் இப்போது அம்மா அதை எடுத்தீங்களா இதை எடுத்தீங்களா என்று அக்கறையோடு ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி கொண்டிருந்தான். என் கண்ணாடி பெட்டி வரை வைத்தாயிற்று. என் வீட்டு செல்லங்கள் இரண்டுக்கும் முகம் நிறைய முத்தங்கள் கொடுத்து பாட்டி ஒரு மாதத்தில் வந்திடுவேன் என்று விடைபெற்றேன். ஒரு வயது ஆகாத இளையது குழி விழ சிரித்தது. ஆறு வயதான பேத்தி விவரம் தெரிந்ததாலோ அல்லது பள்ளி போய் வந்த களைப்பிலோ முகம் கலையில்லாமல் கை அசைத்தாள்.

எங்க ஊரிலிருந்து ஒன்றே முக்கால் மணி நேர டாக்ஸி பயணத்துக்கு பின் மெல்ல வந்து சேர்ந்தோம் திருவானந்தபுர விமான நிலையத்துக்கு. பயணசீட்டில் குறிப்பிடுறிந்த நேரத்துக்கு இன்னும் மூன்று மணி நேரம் கிடந்தது. அதனால் மெல்ல எந்த பரபரப்பும் இல்லாமல் நானும் என் மூத்த மகனும் நடக்க துவங்கினோம். ஆஹா இருளில் திருவிழா விளக்கையும் பட்டாசு வெளிச்சத்தையும் கண்டு ரசித்த என் கண்களுக்கு இந்த வெளிச்ச அழகு வித்யாசமாக இருந்தது. கூடாரத்தை போன்ற கட்டமைப்பு எல்லாம் எனக்குள் பிரமாண்டத்தை காட்டியது புதுமுகமாய்.

என் அச்சத்தை கண்டு சக்கர நாற்காலி வேண்டுமென மகன் கேட்டுருப்பதாய் சொன்னதால் பாதி நிம்மதியோடும்
இரு பயண பையோடும் உள்ளே நுழைந்தேன். உள்ள போனதும் வெளிச்சம் இன்னும் அதிகமானது. கண்ணாடி மாளிகைக்குள் ஒரு குட்டி பயண சீட்டோடு திரு திருவென முழித்து நின்ற என்னை யாரும் எட்டி பார்க்கவில்லை. வேகமான நடைகள், உருளும் பைகள், நிரம்பிய கூட்டம் என காட்சி என் முன் கட கடவென ஓடி கொண்டிருந்தது. தலைசுற்றல் வரவே கடவுளே என கண்ணை மூடி திறக்க எதிரில் மேடம் எதாவது உதவி வேண்டுமா என்று தமிழ் கலந்த மலையாளத்தில் உதவியாளர் ஒருவர் கேட்க கடவுளே என்று அவர் கையில் டிக்கெட்டை கொடுத்து டெல்லி போகணும் தம்பி என்றேன்.

டிக்கெட்டை பார்த்தவன் ஒன்னும் பிரச்னையில்லை நான் கூட்டி போறேன் என்றான் . என் பைகளை தூக்கினான் . பயண சீட்டை காண்பித்து சக்கர நாற்காலி வாங்கி உட்கார வைத்தான். நான் குழந்தையாய் உட்கார்ந்து கொன்டேன் . அடுத்து விமானம் என்று நினைத்த என் சக்கரம் எங்கெல்லாமோ சென்றது. பைகளை தூக்கி எங்கோ வைத்தான். கணம் பார்த்தார்கள். எதோ ஸ்டிக்கர் ஓட்டினார்கள்.

சக்கரம் நகர ஆரம்பித்தது. சிறிது நேரத்துக்கு பின் எங்கோ நின்றது. படங்களில் நான் பார்த்த சோதனை எதோ ஒரு கருவியை வைத்து எனக்கும் செய்தார்கள். எனக்கு வயிற்றில் புளியை கரைத்து. சக்கரம் நெடு தூரம் போனது. பேருந்து நிலையம் மட்டுமே கண்ட நான் விமானமும் நம்பர் பார்த்து சட்டென ஏறி விடும் வாகனம் என்று நினைத்தது தப்பாக தெரியவில்லை. நீண்ட நேர உருட்டலுக்கு பின் சக்கரம் நின்றது. விமான நிலையத்த்துக்குள் இவ்வளவு தூரம் இருக்குமா என்று உருண்டு பார்த்து கொண்டிருந்த கண்களும் நின்றது. கைப்பையை தூக்கி கொண்டு இறங்கிய நான் நன்றி தம்பி என்று இரண்டு நூறு ரூபா தாளை அவன் கைகளில் திணிக்க அவன் சிரிப்போடு நகர தொடங்கினான்.

அவன் அடையாளம் காட்டிய வரிசையில் நின்று சீட்டை காட்டி விமானத்தில் ஏற துவங்கினேன். விமானத்தில் இல்லை ஒரு குறுகிய பாதையில் போனேன்.அப்படியே மந்தையோடு செல்லும் ஆட்டை போல கூட்டத்தோடு நடக்க ஆரம்பிதேன். புன்னகையோடு இரு பெண்கள் வரவேற்க படியில் ஏறும்போது தான் தெரிந்தது ஓ விமானம் என்று, பரபரப்பு ஒருவாறு அடங்கியது. இருக்கை எண்ணை தேடிய எனக்கு வழிய வந்து உதவினாள் அழகு பெண் ஒருத்தி. அவளை போல சினிமா கதாநாயகிகளை போல இந்து ஆறு பெண்கள் இருந்தனர் என பிறகு தெரிந்துகொன்டேன்.

இருக்கையில் அமர்ந்ததும் காற்று போன பலூனை ஆனது மனசு எல்லா பயமும் எங்கோ பறந்தது போல இருந்தது. சின்ன புன்னகையோடு என் மகன் வயசு ஒத்த இளைஞன் ஒருவன் என் அருகில் வந்து அமர்ந்தான். எது எதுவோ ஆங்கிலத்தில் சொன்னார்கள் . அவன் பெல்ட் அணிந்து கொண்டான். எனக்கு தெரியாத காரணத்தால் நான் சும்மா அமர்ந்து கொண்டேன். அப்புறம் சரிபார்க்க வந்த பணிப்பெண் நான் விழிப்பதை பார்த்து அவளே போட்டு விட்டு சென்றாள்.ஆங்கிலத்தில் என்னென்னவோ அறிவுப்பு சொல்லி கொண்டிருந்தனர். எதுவும் புரியாததால் விமானம் பறக்க துவங்கும் போது எழும்பும் சத்தம் காத்து வலி உண்டாக்கும் என மகன் சொன்னதால் பஞ்சை கொண்டு காதை அடைத்து கொண்டேன். வாயில் பபுள் காம் வேற மெல்ல சொல்லியிருந்தான் மகன். எப்ப வாயில் போட என தெரியாமல் அதையும் பயத்தையும் பிடித்தபடி அமர்ந்திருந்தேன்.

எதோ கொஞ்சம் பஞ்சயும் தாண்டி சத்தம் கேட்க வாயில் மெல்ல போட்டு மெல்ல தொடங்கிய போது ஜன்னலில் பார்க்க தொடங்கிய போது வானம் என்னருகில் தெரிந்தது. கை நீட்டினால் ஒரு வேளை மேகத்தை தொட முடியுமோ என்று தோன்றியது. கொஞ்சம் கீழாய் பார்த்தால் எதோ எறும்பு போன்று கரும் புள்ளிகள் தெரிந்தன. அது தான் பூமியோ என நினைத்தேன்.இதுவரை கீழிருந்து விமானத்தை இந்த மேகங்களை எத்தனை முறை ரசித்திருப்பேன். இன்று தூரமாய் நின்று ரசித்த விமானத்துக்குளிருந்து இந்த மேகங்களை தொட நினைப்பது அழகு தான் என்று நினைத்த மனசு ரொம்ப லேசானது.

விமானம் கிளம்பிய போது எழுப்பிய பெரும் சத்தம் தான் அப்புறம் பெரிதாக ஒன்றும் இல்லை. நம் வீட்டு நாற்காலியில் அமர்ந்திருந்ததை போல இருந்தேன். என்ன செய்ய என்று தெரியாமல் தம்பி எங்கு போற என்று கேட்டேன். டெல்லி கு கொஞ்சம் முன்னாடி என்று எதோ ஒரு இடம் பெயர் சொன்னான். மிட்டாய் கையில்ஆ கிடைக்காத குழந்தையின் முகமாய் மாறியது என் முகம். உணர்ந்தானோ என்னவோ.ஆனா டெல்லி விமான நிலையத்தில் தான் இறங்குவேன் என்றதும் பயணம் அழகானது எனக்கு.

அப்புறம் பெரிதாக அவன் எதுவும் பேசவில்லை .சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்க வந்தாள் பணிப்பெண். அவள் சொன்னது பெரிதாக புரியவில்லை ஆனால் மகன் ஏற்கனவே சொல்லி பரிச்சியப்பட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தினாள். வெஜ் நான் வெஜ் என்று நான் எனக்கு தெரிந்தாப்ல வெஜிடபிலே என்றேன். இரண்டு ப்ரெட் நடுவில் தக்காளியை வைத்து இன்னும் எதையோ வைத்து ஒன்றை தந்தார்கள். சாப்பிட்டு கொன்டேன். ஜூஸ் என்றதும் ஆசையாய் வாங்கி கொண்டேன். ஆனால் அதை வாயில் வைத்தபோது அந்த குளிரில் என் பல் கூச்சத்தில் சத்தம் போட அப்படியே வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டேன். அடியே உனக்கு இது தேவையா என கேட்டு சிரித்தது என் பற்கள்.

இந்த ஓன்று அரை மணி நேர பயணத்தில் இடையில் ஒருமுறை மணி எத்தனை தம்பி என்று கேட்டு கொண்டேன். இன்னும் முக்கால் மணி நேரம் என தெரிந்ததும் என் கையில் இருந்த ஜெப மாலையை உருட்ட ஆரம்பிதேன். அவன் காதில் மாட்டியபடி எதோ பாடல்களுக்குள் மூழ்கி போனான். அவன் எதாவது கொஞ்சம் பேசியிருக்கலாம் என்று எனோ நினைத்தது மனசு. ஆனால் இங்கு யாரின் பேச்சு சத்தமும் கேட்கவில்லை பேருந்து போல.இடையில் சிறுநீர் கழிக்க தோன்ற எல்லாரும் செல்லும் இடம் எட்டி பார்த்து நானும் தெரிந்துகொண்டு சென்று விட்டு வந்தேன். தண்ணீர் இல்லை . என்ன செய்ய என்று தெரியவில்லை. அதனால் இருந்தது இருந்தபடி வந்து அமர்ந்தேன். அப்பாடா என்ற உணர்வுடன் தொடர்ந்தது பயணம்.

திடீரென மறுபடியும் முதலில் வந்த அதே அறிவுப்பு சத்தம். பெல்ட் அணிதல் என தொடர்ந்தது., அந்த பேரிடி போன்ற சத்தமும் கேட்க நான் பஞ்சை எடுத்து சடாரென சொருகி கொண்டேன் காதில். எல்லாரும் இறங்க நான் எழும்பவில்லை பெரு முயற்சி செய்து கொண்டிருந்தேன் பெல்ட் கழற்ற தான். நான் தவிப்பதை பார்த்த ஒரு பெண் கழற்றி விட நானும் இறங்கி கொன்டேன். நான் தான் கடைசி போல.

இனி என்ன பையை தேட வேண்டும் . ஒரு பேருந்தில் ஏறி இறங்கினால் மகன் வந்து விடுவான். மகன் சொன்னதை மனம் உருப்போட்டு கொண்டிருக்கும்போது முதலிலே இறங்கிய என் பக்கத்துக்கு இருக்கை தம்பி வாங்க ஏன் இவ்ளோ நேரம் மா என்று அக்கறையோடு கேட்க நான் காரணம் சொல்ல அவன் அப்படியா ? உங்களுக்கு கழற்ற தெரியாது னு நினைக்கல என்று இயல்பாய் சொல்லலை வாங்க பய் எடுத்தருவோம் என்றான். இப்போது அவன் அந்நியனை போல தெரியவில்லை மகனை போல தெரிந்தான். பையின் வண்ணம் கேட்டான். எதோ சுற்றி கிறங்கி வந்ததில் இருந்து இலகுவாய் உருவி தந்தான். அதில் ஒன்றை அவன் தள்ளு சூட்கேஸ் மேல வைத்து இழுத்தான் இன்னும் ஒன்றை கையில் பிடித்து கொண்டான். இன்னும் ஒரு பேருந்து தான் என்றான். அப்பறம் மகன் வந்து விடுவான் என்றான்.

கொஞ்சம் அல்ல நீண்ட நடைக்கு பிறகு ஏறிக்கொண்டோம் அந்த பேருந்தில்.விமான பயணம் என்றால் நடை பயணம் கூட சேர்ந்தது தான் என்று நினைத்து கொன்டேன். விமானத்தின் ஒரு டெர்மினல் அடுத்து டெர்மினல் செல்ல வரும் இணைப்பு பேருந்து அது. நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று சொன்னதோடு எல்லாவற்றையும் இறக்கி என்னையும் இறக்கி விட்டான். கொஞ்ச தூரத்திலே நீல சட்டையோடு சொன்ன மாதிரி காத்திருந்தான் ஏன் கண்ணன். எண்ணை கண்டதும் அந்த முட்டை கண்கள் சிரிப்பில் விரிவது தெரிகிறது எனக்கு. எனக்கு ஒரு முத்தம் தந்து அவனோடு கைகுலுக்கி நன்றி சொல்லி விடைபெற்றான் மகன்.

நான் ரொம்ப நன்றி பா என்றதும். இருக்கட்டும் மா என்று நகர தொடங்கினான் வேகமாக. ஒருவேளை அலுவலகம் செல்லும் அவசரமாக இருக்கலாம். கேட்காமலே புரிந்து கொண்டு தானாக உதவிய அவன்.. எனக்காக காத்திருந்து உதவிய அவன்.. அவன் முதலில் அந்நியனாக பின் பக்கத்துக்கு இருக்கையை எட்டி கூட பார்க்காமல் பாடலுக்குள் ஒளித்து கொண்ட சிலந்தியை போல தோன்றிய அவன் இப்போது எனக்கு சாமியாக தெரிந்தான். இந்த பயணம் ஒன்றல்ல பல சாமிகளை எனக்கு காட்டியது. மனித உருவில் கடவுளை... மனிதனுக்குள் இன்னும் குறையாத மனிதத்தை...

மகனின் கரம் பிடித்து நடக்க ஆரம்பித்தேன் உற்சாகமாய் குட்டி தேவதையை காண...

யாழினி வளன்..

எழுதியவர் : யாழினி valan (13-Jul-17, 3:31 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 374

மேலே