தாமரை பெண்

என்ன இது
இதுவரை
குளத்தில் நீந்தும்
தாமரை பூக்கள்
காற்றில் தலையாட்டும்
அழகை ரசித்திருக்கிறேன்

இன்று தாமரை
ஓன்று கரையில்
வந்து அமர்ந்து கொண்டதோ
குளக்கரையில் அது
கதைகள்பேசி
கால் நனைத்து
தலையாட்டி சிரித்து
கொண்டிருக்கிறது

தோழிகளோடு கால்நனைத்து
கதை பேசிக்கொண்டிருக்கும்
என் தாவணிதேவதை

இதுவரை குளத்தோடு
ஒட்டிக்கிடந்த தாமரைகள்
எல்லாம் இப்போது
இவளோடு தோழிகளாய்
ஒட்டிக்கொள்ள எத்தனித்தன
அவள் தோள்சாயும்
தோழியை கண்டு
பொறாமைகொள்ளும்
என்னை போல!

குளத்து மீன்கள்
கரையேறி அவள்
கைசேர துடித்து
தோற்று போய்
அவள் கால்களை
அவள் அறியாமல்
முத்தமிட்டு கொண்டிருந்தன
அவளோடு கலந்துவிட
விரும்பியும் வழிதெரியாமல்
எப்போதும் அவளை
முத்தமிட்டு கொண்டிருக்கும்
என் கண்களை போல !

காற்று இல்லாமலே
குளத்து பாசிகளெல்லாம்
மெல்ல நகர்ந்து வந்து
இவளை அருகில்
பார்த்த திருப்தியில்
வேகமாக நீந்த தொடங்கின
அவ்வப்போது அவளெதிரே வந்து
அவள் அருகாமையை அனுபவித்து
அற்ப சந்தோஷம்கொள்ளும்
இந்த இளங்காளையை போல !

குளத்து நீரில்
விழுந்த உன் பிம்பத்தை
விழுங்கிக்கொள்கிறது அப்படியே
அந்த அழகிய குளம்
உன் பிம்பத்தை
கண்ட முதல் நாளே
கண்ணுக்குள் மட்டுமல்லாது
இதயத்துக்குள்ளும் விழுங்கிக்கொண்ட
இந்த இளையவனை போல !

நீர்ச்சுழிகள் நகர
கொஞ்சமும் விருப்பமின்று
வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன
உன் காலடிகளை மட்டும்
குட்டி போட்ட பூனையாய்
உன்னை தேடி அலையும்
என் கால்களை போல!

கதைகள் பேசிமுடித்து
குடத்தோடு எழும்பியதும்
உன்குடத்துக்குள் குடிபுக
போட்டா போட்டியிட்ட
சருகுகளையம் இலைகளையும்
சர்வசாதாரணமாக சின்ன
ஒருகையசைவில் தள்ளிவிட்டு
நீரைமட்டும் அள்ளிச்செல்கிறாய்...
மணிக்கணக்காய் உன்னை மட்டுமே
வெறித்து பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு
வெறுமென உணர்ச்சிகளற்று நீ தரும்
ஒற்றை பார்வையை போல!!


அவள் அமர்ந்துசென்ற பாறை
எந்த சிற்பியும் செதுக்கமாலே
சிலையாய் மாறி இருந்தது இப்போது
எனக்குள் நுழைந்த அவள்
நினைவு சுவாசங்கள் மட்டுமே
புதுமனிதனாய் மாற்றி போட்ட
பரதேசி என்னை போல!!!

ஒரு குடம் நீரை மொண்டு செல்வதாய்
நினைத்து இயல்பாய் நகர்கிறாய் நீ
உன்னில் மயங்கிய இந்த குளம்
தான்தாகம் தணிக்கும் வழி அறியாமல்
நாளை நீ வரும் நேரம் வரை
தவித்து காத்துக்கிடக்கபோவதை அறியாமல்
என்னை ஒவ்வொரு முறை
கடந்து செல்லும் போதும்
இயல்பாய் என்மேல் படரும்
உன் பார்வைகளின் நிழலில்
என் காதல் ஒவ்வொரு நாளும்
வாழ்ந்து கொண்டிருப்பதை போல!!!

எழுதியவர் : யாழினி வளன் (14-Jul-17, 3:08 am)
Tanglish : thamarai pen
பார்வை : 612

மேலே