தண்ணீர் ஊசிகள்’ கவிதைத் தொகுப்பு

நிலம் கிழிந்தால் நீர் தைக்கும். நிலத்தை யார் கிழிக்கிறார்கள் என்பதொரு பெரும் கேள்வி. சௌந்தர மகாதேவன் தையல்காரர். திருநெல்வேலியின் அத்தனை தெருக்களிலும் தன் தையல் இயந்திரத்தைத் தள்ளிக்கொண்டே போயிருக்கிற ஒருவர்.

கவிதை என்பது அவருக்கு நினைவின் அடையாளம். நிறைய வாழ்ந்தவருக்கு நிறைய நினைவுகள். நிறைய அடையாளங்கள். நிறையக் கவிதைகள். எல்லாம் வாழ்ந்து வாழ்ந்து, பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து எடுத்த புகைப்படங்கள்.

ஒரு கவிதைத் தொகுப்பின்/ தொகுப்புக் கவிதைகளின் சுவர் மீது, இத்தனை சனங்களின் கதையை எழுத அவசியமில்லை. ஆனால் சனங்கள் எப்போதுமே அழகானவர்கள். எதன்பொருட்டும் தள்ளுபடி செய்யமுடியாதவர்கள். அப்பாவின் மைக்கூடு அழகானது. அடுப்பின் மொழியறிந்த சாரிப் பாட்டி இனியவள். திம்மராஜபுரத்துக்காரி தொட்டுவைத்துப் போயிருக்கிற மோர்க் கணக்கு, உத்திரத்துக் கொக்கி, முக்குத் திரும்ப முனகும் தேர், காலம் ஆடும் அப்பத்தா காதுப் பாம்படம், பழைய கதவு, பாத்திரப் பாற்கடல், தற்படம் எடுத்துக்கொள்கிறவனின் தனிமை, அடிபம்பின் கைப்பிடித் தேய்வு, அதிகாலைக் கனவு, பன்னீர் தெளிக்கும் மண்டபப் பொம்மைகள், எல்லாம் சரிதான். ஆனால் இதைவிட முக்கியம் ‘மலையைவிடக் கனமான மலைத்து நிற்கும் ஒற்றைக் கணம்’

ஒற்றைக் கணம்தான் கவிதை.

- ‘தண்ணீர் ஊசிகள்’ கவிதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் வண்ணதாசன் எழுதிய முன்னுரையிலிருந்து சில பகுதிகள்

எழுதியவர் : (15-Jul-17, 5:22 pm)
பார்வை : 186

சிறந்த கட்டுரைகள்

மேலே