ஒரு மரத்தின் காதல் கதை

மரங்கள் காதல் கொள்ளுமோ
ஒருவேளை மரங்கள் காதல் கொண்டால்

நெடுவென நெடுவென
வளர்ந்திருந்த மரத்துக்கு
ஏனோ இப்போதெல்லாம்
பக்கத்துக்கு தோட்டத்து
விளிம்பு மரத்தின்
மேலொரு மயக்கம்
கண்டதும் கிறக்கம்

அது இவ்வளவு காலமாக
அங்கே தான் இருந்தது
அனால் இப்போது மிக
அதிக அழகாக தெரிந்தது
ஒருவேளை அது வயதுக்கு வந்ததோ
இல்லை நான் வயதுக்கு வந்தேனோ
குழப்பத்தில் தலையை சிலிர்த்தது

இந்த சிலிர்ப்பின் சத்தம்
கேட்டதோ என்னவோ
அந்த விளிம்பு மரம்
இதை திரும்பி பார்க்க
பற்றி கொண்டது பார்வைகள்
இன்னும் கொஞ்சம் நேரம் பார்த்தால்
நிஜமாகவே பற்றக்கூடும் தீ
வேண்டாம் விபரீதம்
என தலையை தாழ்த்திக்கொண்டது
மரம்

மரத்தின் கண்கள்
மெல்ல அளவிட்டது
அவர்கள் இருவருக்குமான
இடைவெளி தூரத்தை
கொஞ்சம் ஏக்கத்தோடு

எப்படியாவது அதன்
அருகில் செல்ல வேண்டும்
எப்படியாவது என்
காதலை சொல்ல வேண்டும்
இப்படியாக குழம்பி
தீர்த்தது நம் மரம்

அதன் காதலை சொல்லி
அதன் வலியை சொல்லி
கடிதம் ஓன்று எழுதி
இலை ஒன்றை சருகாக்கி
இனியவளுக்காக உதிர்த்தது.

போக மனமற்று
தன் மரத்தடியிலே
ஒட்டிக்கிடந்த சருகிடம்
கோபம் கொண்டது
இதற்காகவா நான்
காயம்கொண்டு
காதல் கடிதம்
எழுதினேன் என்று

வந்த கோபத்தில்
வீசி தீர்த்தது
வேகமான காற்றை
அதில் பரந்த சருகு
போய் ஒட்டிக்கொண்டது
விளிம்பு மரத்தின் காலடியில்

விளிம்பு மரம்
ஒருநொடி படபடத்தது
மெல்ல எடுத்து
சருகை படித்தது
அதன் இலையில்
படர்ந்திருந்தது அந்த
அதிகாலை பனித்துளியா
அதன் விழிநீரா என்று
அது மட்டுமே அறியும்

அந்த சருகை தன்
தண்டோடு சாய்த்தது
நேசம்கொண்டதன் தோள்
சாய்ந்ததாய் நினைத்ததோ
ஒரு நொடி கண்கள்மூடி
ஒரு மூச்சி விட்டது

தன் மனதை கலைத்தவனின்
மனதில் தான் இருப்பதை
காட்டிய காதல் கடிதத்தை
தன் காலடியில் இட்டது
பிறர் கண்படாமலிருக்க
தன்வேர்கொண்டு அதை
மறைத்து வைத்தது
பின்னொருநாளில்
தனக்கு உரமாக்கி
தன் உயிருக்குள்
எடுத்து கொண்டது

விளிம்பு மரமும்
பதில் எழுதியது
இதுநாள் வரை
ஒளித்துவைத்திருந்த
நேசத்தை சொல்லி

காதல் கொண்ட
கன்னி மரங்கள்
சருகுகள் துறந்தன
காதலை சொல்லி..
காற்று இருவரையும்
பார்த்து சிரித்தது
தவறாமல் கடிதத்தையும்
கொண்டு சேர்த்து
காற்றுக்கு இது
வாடிக்கையாகி போனது

கடிதங்கள் அனுப்புதலும்
கடிதங்களை ஒழித்தலுமென
கதைகள் தொடர்ந்தன

கடிதங்களை தாண்டி
காதல் மரத்தை
கிட்டசென்று பார்க்கும்
ஆசை கொண்டது
வழியறியாது நின்றது
நம் மரம்

என்ன நினைத்ததோ
இப்போதெல்லாம் அது
சூரியஒளியை அதிகமாக
உள்வாங்க தொடங்கியது
தண்ணீரை தேடிதேடி
தன் வேர்களை அனுப்பியது
தன் கிளைகளின்
வளர்ச்சியை ஏனோ
அளக்கத்தொடங்கியது
தன் இலைகளிடம்
வேகமாக படரசொன்னது

தன் கிளை நீட்டி
அதன் காதலியை
ஆசையோடு தீண்டும்
ஆவல் வந்தது
விளிம்பு மரத்தோடு
கைகோர்க்கும் நாளை
எதிர்பார்த்து காத்திருந்தது

நாட்கள் நகர்ந்தன
மாதங்கள் மறைந்தன
வருடங்கள் வந்துபோன
விளிம்பு மரத்தின்
பூவாசத்தை சுவாசித்தும்
இலைகளின் அசைவுகளிலும்
இம்மரத்தின் காலங்கள் கடந்தன

எல்லா கிளைகளும்
அம்மரமிருந்த திசைப்பார்த்தே
வளர தொடங்கியது
பிற்பாடு இம்மரமே
விளிம்பு மரத்தை
பார்த்தே மொத்தமாய்
சாய தொடங்கியது

ஒருநாள் இம்மரத்தின்
இடைக்கிளை ஓன்று
எல்லா கிளைகளுக்கும்
முன்சென்று அவள்
அருகில் சென்றது
அதன் இலைகள்
அவள் இலைகளை
தீண்டிய தீண்டலில்
அன்று மழைக்கண்டது
நெடுநாள் மழைகாணாத
அந்த தோட்டம்
விடாத அடைமழையானது
அன்றய நாள்

இவர்களின் இலைகள்
இட்டுக்கொண்ட
இதழ் முத்தத்தில்
இப்போதெல்லாம் அதிக
பூக்கள் பூக்கின்றன

பூக்கள் வாசத்தை
பரிமாறி முடித்து
பழங்களாகி பூரித்தன
விளிம்பு மரம்
இப்போது முன்பைவிட
மிக அழகானது
இந்த மரத்தோட்டத்தின்
தேவதை ஆனாள் அவள்

அதிக அன்பில் கனிந்த
அழகு கனிகளின் விதைகள்
சில விழுந்தன மண்ணில்
பின் செடியாய் எழுந்தன
இவர்களின் காதல்
கதைகளை சொல்ல...

காலங்கள் கடந்தன
பூப்பு ஓய்ந்து
காய்ப்பு தீர்ந்து
காலம் கரைந்திருந்து
இலைகளின் அசைவும்
மெல்ல குறைந்திருந்தது
கிளைகளின் ஆட்டம்
கொஞ்சம் குறைவுதான்
பச்சை இலைகளின்
அழகும் குறைவுதான்
முதுமைகளின் சுவடுகளோ
என்னவோ தெரியவில்லை
விளிம்பு மரம்
சிலநேரம் தோல் உதிர்த்தது


காலம் கரைந்திருந்து
காதல் கொஞ்சம்
உள்ளுக்குள் மறைந்திருந்தது
ஆனால் அது
கொஞ்சமும் குறைந்திருக்கவில்லை

தேடல்கள் நிற்கவில்லை
இம்மரத்தின் வேர்கள்
என்றிலிருந்தோ
தேடுகொண்டிருக்கின்றன
விளிம்பு மரத்தின் வேர்களை
எனோ கிடைக்கவில்லை
இன்று வரை

இன்று அந்த
விளிம்பு மரத்தின்
வேர்கள் சிலிர்க்கின்றன
தூங்கி கொண்டிருந்த
அவை விழித்துக்கொண்டன
அது புதுதீண்டலை
உணர்கிறது
தன் காதல் மரத்தின்
வேர்கள் தீண்ட
அதன் வேர்கள்
மறுஉயிர் கொண்டு
எழுகிறது
இன்று முளைத்த
புது செடியாய்
அது சிரித்தது

இப்போது இவர்களின்
இதழ்இலைகள்
முத்தமிட்டுக்கொள்வதில்லை
எப்போதும் இறுக்க
அணைத்தபடி கிடக்கிறது
அந்த வேர்கள் மட்டும்
அவை அன்பின் ஆழங்கள் !!


யாழினி வளன்...


பி.கு :
என் தோட்டத்தில் சாய்ந்தே வளர்ந்த மரமொன்று காற்றோடு கலந்து என் காதில் சொல்லி விட்டு போன காதல் கதை இது :-)

எழுதியவர் : யாழினி வளன் (16-Jul-17, 7:04 pm)
பார்வை : 108

மேலே