திருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்

திருக்குறளைப் பாராட்டி 53 புலவர்கள் பாடிய பாடல்கள் திருவள்ளுவ மாலையில் இடம் பெறும். இதைத்தவிர அவ்வையார், இடைக்காடர் ஆகிய இருவர் பாடல்களையும் சேர்த்து 55 பாடல்கள் என்றும் கொள்வர். இதில் பல புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதத்துடன் ஒப்பிட்டு திருக்குறளை தமிழ் வேதம் என்று அழைக்கின்றனர். அவர்கள் சூட்டிய பெயர்தான் தமிழ் வேதம். இதோ அந்தப் பாடல்கள்:



ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந்திதனினிது

சீரியதென் றொன்றைச் செப்பரிதா – லாரியம்

வேதமுடைத்துத் தமிழ்திரு வள்ளுவனா

ரோது குறட்பா வுடைத்து

— வண்ணக்கஞ் சாத்தனார்
சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறப்புடைத்தென்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் முடியாது; சம்ஸ்கிருதம் வேதமுடையது; தமிழ் திருவள்ளுவர் தந்த குறட் பாக்களை உடையது.



இங்கு சம்ஸ்கிருதத்துக்கு வேதத்தால் பெருமை; தமிழுக்கு திருக்குறளால் பெருமை என்று வண்ணக்கஞ் சாத்தனார் கூறுகிறார்


காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கூறுகிறார்:-



ஐயாறு நூறு மதிகார மூன்றுமா

மெய்யாய வேத பொருள்விளங்கப் – பொய்யாது

தந்தானுலகிற்குத் தான் வள்ளுவராகி

யந்தா மரை மேலயன்



அதிகாரம் நூற்று முப்பத்து மூன்றுமாம், உண்மையான வேதப்பொருள் பொய்யாது விளங்க அழகிய தாமரை மலர் மேல் வீற்றிருக்கின்ற பிரம்மா, வள்ளுவராகி உலகில் வந்தான்.



பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து நான்கு வேதங்கள் வந்தன என்று புராண, இதிஹாசங்கள் விளம்பும். அது போல திருக்குறள் என்னும் தமிழ் வேதத்தை அளித்ததும் அவனே— என்பார் காரிக்கண்ணனார்.



வெள்ளி வீதியார் சொல்வார்

செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த

பொய்யா மொழிக்கும் பொருளொன்றே — செய்யா

வதற்குரியா ரந்தணரே யாராயி னேனை

யிதற்குரியா ரல்லாதாரில்



ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் —–(அபௌருஷேயம்=வேதங்கள் மனிதன் இயற்றியது அல்ல) —திருவள்ளுவாரால் அருளிச் செய்யப்பட்ட பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே. ஆராய்ந்து பார்த்தால் செய்யப்படாத அந்த வேதம் ஓதுதற்குரியோர் அந்தணர் மட்டுமே; ஆனால் திருக்குறளை ஓதுதற்குரியவர் எல்லோரும் ஆவர்.



நாமகள் செப்பியது

நாடா முதனான் மறைநான் முகனாவிற்

பாடா விடைபாரதம் பகர்ந்தேன் — கூடாரை

யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாற பின்

வள்ளுவன் வாயதென் வாக்கு



பொருள்:

பகைவரைப் புறமுதுகு காட்டச் செய்து வெற்றி பெற்ற, வேற் படையுடைய பாண்டிய ராஜனே! படைப்புக் காலத்தில் பிரம்மாவின் வாயிலிருந்து நான்கு வேதங்களைப் பாடினேன்; இடைக்காலத்தில் பாரதம் பகர்ந்தேன்; அதற்குப் பிற்பட்ட காலத்தில் என்னுடைய வாக்கு வள்ளுவன் வாயின் கண்ணதாயிற்று



ஆகவே சரஸ்வதியின் கூற்றுப்படி, வேதமும், பாரதமும், திருக்குறளும் ஒவ்வொரு காலத்தில் சரஸ்வதியின் வாயிலிருந்து வந்தவையே.

வேதம் = மஹா பாரதம் = திருக்குறள்



மஹா பாரதத்தை பஞ்சமோ வேத: = ஐந்தாவது வேதம் என்பார்கள்.

திருக்குறளை ஆறாவது வேதம் என்று சொல்லாமல் சொல்கிறாள் சரஸ்வதி!

Tags:- தமிழ் வேதம், தமிழ் மறை, திருக்குறள்

–சுபம்–




குறள் உவமை, சமயம், திருவள்ளுவன் குறள்

எழுதியவர் : (17-Jul-17, 4:19 pm)
பார்வை : 62

மேலே