கண்ணதாசா

செந்தமிழைத் தாலாட்டும் சிங்காரத் தென்றல்நீ
சந்தங்கள் நடனமிடும் தமிழமுத தரங்கம்நீ
சிந்துவகைச் சொந்தமெனச் சிந்திவிட்டச் சித்தன்நீ
அந்தமிலாப் புகழ்சேர்த்த அருட்பாவின் அத்தன்நீ !

கொட்டிடுமுன் நாவினின்றும் கொஞ்சுமணி வார்த்தைகள்
தொட்டுவிடும் காரணத்தால் தொலைந்துவிடும் கேட்குமுளம்
மெட்டுக்குப் பதம்பூட்ட மிரண்டுவிடும் சுரமேழும்
கட்டுக்குள் அடங்காதக் காட்டாறு போல்பாயும் !

நெஞ்சினிக்கும் காதலுக்கு நிழல்செய்யும் நித்திலம்நீ
பஞ்சபூதம் பாடிவைத்த பார்போற்றும் பாவலன்நீ
தஞ்சமென்றே உன்பாட்டில் சரணடைந்தோர் தலைவன்நீ
மிஞ்சிடவும் இயலாத மின்சாரக் கண்ணன்நீ !

கம்பரசம் ஊற்றெடுக்கும் கற்பனையின் களஞ்சியம்நீ
அம்புலியை மிகரசித்தே அழகுசெய்த சுவைஞன்நீ
செம்மொழியில் விளையாடும் தெவிட்டாத மலைத்தேன்நீ !
எம்மனத்தில் நீங்காமல் இடம்பிடித்த கவிஞன்நீ !

தத்துவங்கள் சொல்லிவைத்தாய் தகப்பனைப்போல் ஏட்டில்நீ
முத்துகளாய் ஒவ்வொன்றும் முன்நின்று வழிகாட்டும்
இத்தரணி வாழ்வினிலே எத்தனையோ இடர்வரினும்
சொத்தெனவுன் பாட்டிருக்க சுகமாகும் சோகமுமே !

பெய்கின்றாய் நித்தமும்நீ பேரருவி யாயெம்முள்
நெய்கின்றாய் பாட்டாலே நெஞ்சத்தின் மாசுகளை
தெய்வங்கள் விழைந்திடுமுன் தேன்பாட்டில் குடியிருக்க
பொய்யில்லா மெய்யோடு புகழ்வோமே புவியரசே !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Jul-17, 1:47 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 57

மேலே