அன்பென்னும் பாற்கடல்

மழைமேகம் திரண்டு மிரட்டுகிறது மின்னல்..
மண் கூட நனையவில்லை..
இதுபோலே சிலரது அன்பு ஆடம்பரத்திலே பிரதிபலிக்கும்..
ஆழம் பார்த்தாலோ அது பாழும் கிணறு..
அந்த ஆடம்பர பாழும் கிணற்றிலே அன்பைத் தேடிக் குதித்து கற்பாறையில் மோதி மாண்டவர்கள் பலருண்டு இவ்வுலகச் சரித்திரத்திலே..

துறவறமே சொர்க்கமென்றால் பிறப்பவர் யாவரும் கையில் திருவோடும்,
கழுத்தில் உத்திராட்ஷமும் தரித்தே பிறப்பாரே..

மனிதர்கள் வகுத்த வர்ணமுறை அன்பாகிய இறையைக் அழித்தோடு அல்லாமல் பூலோகமென்ற சொர்க்கத்தை நரகமாக மாற்றிவிட்டதே..

தனக்கென்று உரிமை கொண்டாட யாதுமில்லையென்ற சத்தியமும் பொய்த்து கண்டதெல்லாம் தனக்கென்று உரிமை கொண்டாடுவதைக் காண்கிறேன் நடைமுறை உலகிலே..

பரந்த அகிலம் அன்பாலே பிணைக்கப்பட்டுள்ளதை அறியாத பிரிவினைவாதம்..
அதுவே மருள் நிரம்பிய மனிதர்களின் பிடிவாதம்..
அப்பிடிவாதத்தால் உந்தப்படுகிறது தீவிரவாதம்..
அத்தீவிரவாதத்தால் மடிகிறது மிதவாதம்..

அன்பே சிவமென்றுணர்ந்த அடியார் மனதிலும் இடம்பெற்றிருக்குமோ பிரிவினைவாதம்?.

மனதின் சந்தேக நோயை வதம் செய்ய மூழ்கிப் பருகு அன்பென்னும் பாற்கடலில்..
அது வேறெங்கும் இல்லை..
உன்னுள்ளே தான் பொங்கி வழிகிறது என் நெஞ்சே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Jul-17, 9:20 pm)
பார்வை : 734

மேலே